Published:Updated:

`ட்ரம்ப் ஒன்றும் அரசர் இல்லை; அவர் சொன்னால் செய்யமாட்டேன்!’-அதிபருக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஆளுநர்

ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ
ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ

அமெரிக்காவில் ஊரடங்கு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. தற்போது வரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,246 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,064 - ஆகவும் உள்ளது. மற்ற அனைத்து நாடுகளை விடவும் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

சீனாவில் வைரஸ் உறுதியானதும் அதே ஜனவரி இறுதி வாரத்தில் அமெரிக்காவிலும் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அங்கு மார்ச் மாதம்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்குள் பல்வேறு மாகாணங்களில் வைரஸ் பரவியது. தாமத நடவடிக்கையே தற்போது அமெரிக்கா சந்தித்து வரும் மோசமான நிலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அந்தப் பரிந்துரையை ட்ரம்ப் நிராகரித்ததாகப் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

‘சீனாவுக்கு மட்டுமே ட்ரம்ப் தடை விதித்தார், ஆனால்...?’ - நியூயார்க் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன பின்னணி

இதே ஊரடங்கு தொடர்பாக அந்நாட்டு மாகாண ஆளுநர்களுக்கும் அதிபருக்கும் இடையே வார்த்தைப் போர் எழுந்துள்ளது. முன்னதாக கொரோனா தொடர்பாக அமெரிக்காவின் மாகாணங்களுக்குத் தேவையான நடவடிக்கைகள், மருத்துவ உபகரணங்கள், முக்கிய முடிவுகள் போன்றவற்றை அந்தந்த ஆளுநர்களே நேரடியாகச் செய்து வந்தனர். ஆனால் தற்போது “ நாட்டில் ஊரடங்கு தொடர்பாக முடிவெடுக்கும் முழு உரிமை அதிபருக்கு மட்டுமே உள்ளது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார், இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ
ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ

இதுதான் தற்போதைய பிரச்னைக்கும் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதைச் சரிசெய்தால் மட்டுமே நவம்பர் மாதம் வரவுள்ள அதிபர் தேர்தலை ட்ரம்ப் தைரியமாக எதிர்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வைரஸ் அச்சத்தையும் மீறி ஊரடங்கைத் தளர்த்துவதில் அதிபர் அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மாகாண ஆளுநர்கள் பலரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே ஆளுநராக உள்ளனர். இதுவும் பிரச்னைக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் பற்றி விமர்சித்துள்ள நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, “அமெரிக்காவுக்கு அரசர் இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மட்டுமே உள்ளார். நாங்கள் எப்போதும் ஒரு அரசரை விரும்பவில்லை. என் மாகாண மக்களின் பொதுச் சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தும் படி அதிபர் எனக்கு உத்தரவிட்டால் நிச்சயம் நான் அதைச் செய்ய மாட்டேன். மாகாணத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு அரசியலமைப்பு சவால் உள்ளது. தற்போது அதிபர் தவறான முடிவெடுத்தால் அது நிச்சயம் நீதிமன்றத்துக்குச் செல்லும். இந்த நிலையில் அதிபர் செய்யும் மிக மோசமான காரியமாக அது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க்
நியூயார்க்
AP

மொத்த அமெரிக்காவிலும் நியூயார்க் மாகாணத்தில்தான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனால் அங்கு இன்னும் சில வாரங்களுக்கு ஊரடங்கு நீடித்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும் எனக் கூறப்பட்டுள்ளது அதற்குள் இதில் அதிபர் தலையிட்டுள்ளார். நியூயார்க் மட்டுமல்லாது பல மாகாண ஆளுநர்களும் ஊரடங்கு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு