Published:Updated:

7 நாள்கள்; ஆன்லைன் ஏலம்; அரிய விலங்குகளுக்குக் குறி! - ட்ரம்ப் ஜூனியரைச் சுற்றும் `வேட்டை' சர்ச்சை

ட்ரம்ப் மகன்
ட்ரம்ப் மகன்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் ட்ரம்ப் ஜூனியர், விரைவில் ஒரு வேட்டையாடுதல் பயணத்தை நடத்தவுள்ளார். இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், பெரும்பாலும் தன் கோடைக்காலத்தை விலங்குகளை வேட்டையாடுவது, மீன் பிடிப்பது, பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது எனக் கழிப்பார். அமெரிக்காவில் வேட்டையாடுவது சட்டபூர்வமாக இருந்தாலும் விலங்கு நல ஆர்வலர்கள் ட்ரம்ப் ஜூனியரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ட்ரம்ப் ஜூனியர்
ட்ரம்ப் ஜூனியர்

என்னதான் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து வேட்டையாடுவதைப் பொழுதுபோக்காக செய்து வருகிறார் ட்ரம்ப் ஜூனியர். இவர் விரைவில் அலாஸ்காவில் ஒரு சொகுசு வேட்டைப் பயணத்தை நடத்தவுள்ளதாக இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு வருவது தற்போது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒரு விலங்கின் ஏதாவது ஒரு உடல் பகுதியை வேட்டையாட வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதன்படி வேட்டைக்காரர்கள் பல இடங்களில் அலைந்து விலங்கை வேட்டையாடிக் கொண்டுவருவார்கள். வேட்டைக்காரர்கள் மத்தியில் இது ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. அவர்கள் வேட்டையாடும் விலங்கின் உடல் உறுப்புகளை தங்கள் வீட்டில் வைத்துக் கொள்வார்கள். வேட்டையாடும் விலங்குகளை வீட்டில் தொங்கவிடுவது பல நாடுகளில் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் ஜூனியர்
ட்ரம்ப் ஜூனியர்

ட்ரம்ப் ஜூனியரின் இந்த வேட்டைப் பயணத்துக்கு `கோப்பை வேட்டைக் குழு’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. முதலில் இது தொடர்பாக ஒரு ஏலம் விடப்படும் அதில் வெற்றி பெறுபவருடன் ட்ரம்ப் ஜூனியர் இணைந்து பயணிக்கவும் வேட்டையாடவும் உள்ளார். சஃபாரி கிளப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஏலத்தை நடத்துகிறது. இது தொடர்பான ஆன்லைன் விளம்பரத்தில், ``இந்த ஆண்டு முன் அறிமுகம் தேவையில்லாத ட்ரம்ப் ஜூனியருடன் இணையவுள்ளோம். வேட்டையாடுதலில் அதிக ஆர்வம் கொண்ட அவரை எங்கள் பயணத்தின் தூதராக அறிவிக்கிறோம்’ என சஃபாரி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Vikatan

ட்ரம்ப் ஜூனியர் கலந்துகொள்ளும் இந்த ஏழு நாள் சொகுசுப் படகில் நடக்கும் வேட்டையாடும் பயணத்தில் ஏலத்தில் வெற்றி பெற்றவர், ட்ரம்ப்பின் மகன் மற்றும் அவரது வழிகாட்டி ஆகியோர் மட்டும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது கறுப்பு வால் மான்கள், கடல் வாத்துகள் ஆகியவற்றை வேட்டையாடலாம் என ஏலம் நடத்தும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஜிம்பாபேவின் எருமைகள் மற்றும் நமீபியாவின் யானைகளையும் வேட்டையாடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப் ஜூனியர்
ட்ரம்ப் ஜூனியர்

இதனால் இந்த ஏலத்தில் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான வேட்டைக்காரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தேர்தல் நடக்கவுள்ள நவம்பர் மாதம்தான் இந்த வேட்டைப் பயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `கனவு வேட்டை’ மற்றும் `வேட்டைக்காரர்களின் சொர்க்கம்’ என அழைக்கப்படும் இந்த வேட்டைப் பயணத்துக்கான ஏலம் வரும் 8-ம் தேதி இரவு நடக்கவுள்ளது. இன்று ஏலத்துக்கான தொடக்க விழா நடக்கவுள்ளது இதில் ட்ரம்ப் ஜூனியர் கலந்துகொண்டு பேசவுள்ளார்.

ட்ரம்ப் ஜூனியர் பயணிக்கவுள்ள சொகுசுப் படகில் மிகப் பெரிய அளவிலான நான்கு அறைகள், சூட் குளியலறைகள், குயின் மெத்தைகள் மற்றும் மிகச் சிறந்த உணவு ஆகியவை உள்ளன. இந்த ஏலத்துக்கான முதல் தொகை 12,500 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ``என் மகன்கள் வேட்டைக்காரர்களாக உள்ளனர். அவர்கள் அதில் சிறந்தவர்களாகவும் மாறிவிட்டார்கள். எனக்கு வேட்டையாடுவதில் நம்பிக்கையில்லை, ஆனால் அவர்கள் இதை விரும்புவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது’ என 2012-ம் ஆண்டு ட்ரம்ப் தன் மகன்கள் பற்றி ஒரு ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதே ட்ரம்ப் வேட்டையாடுவதை `ஒரு திகில் நிகழ்ச்சி’ என்றும் கூறியுள்ளார். பல வனவிலங்குகள் அழிந்துவரும் இந்தச் சூழலில் அமெரிக்க அதிபரின் மகன் விலங்குகளை வேட்டையாடுவதைப் பெரும் நிகழ்வாக நடத்துவது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு