Published:Updated:

`ட்ரம்ப், மக்களை ஒன்றிணைப்பதாக நடிக்கக்கூட இல்லை!’ - கொதித்த முன்னாள் ராணுவச் செயலர்

ட்ரம்ப்
ட்ரம்ப்

`அமெரிக்காவைப் பிரிக்கும் ஒரே அதிபர் ட்ரம்ப் தான்' என அந்நாட்டின் முன்னாள் ராணுவச் செயலர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னெபொலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 42 வயது ஆப்பிரிக்க அமெரிக்கர் போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். ஜார்ஜை கீழே தள்ளி, அவரின் கழுத்தில் ஒரு போலீஸ்காரர் தன் கால்முட்டியை வைத்துப் பலமாக அழுத்தியுள்ளார். அதன் காரணமாகவே ஜார்ஜ் உயிரிழந்துள்ளார். ஜார்ஜ் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

ஜார்ஜ், போலீஸ் பிடியிலிருந்த இறுதி நிமிடங்கள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனப் பல லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு, மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் கொரோனா, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மறுபுறம் தனிமனித இடைவெளியில்லாமல் நடக்கும் போராட்டம் ஆகியவற்றால் மொத்த அமெரிக்காவும் ஸ்தம்பித்துள்ளது என்றே கூறவேண்டும். இதற்கிடையில், போராட்டக்காரர்கள் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தெரிவிக்கும் கருத்துகளும் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருகின்றன.

`அதிகப்படியான அழுத்தம்; தடைப்பட்ட ஆக்ஸிஜன்..’ - அதிர்ச்சி கொடுத்த ஜார்ஜின் பிரேதப் பரிசோதனை அறிக்கை

கொரோனா மற்றும் மக்களின் போராட்டம் இரண்டையுமே ட்ரம்ப் முறையாகக் கையாளத் தவறிவிட்டார் என அமெரிக்காவின் எதிர்க்கட்சியினரும் பல்வேறு தலைவர்களும் ட்ரம்ப்பையும் அவரது ஆட்சி முறையையும் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் முன்னாள் ராணுவச் செயலரும் அந்நாட்டு அரசாங்கத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமாகக் கருதப்படும் ஜேம்ஸ் மேட்டிஸ், நீண்ட நாள்களுக்குப் பிறகு, அதிபர் ட்ரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2018-ம் ஆண்டு, ட்ரம்ப்பின் அமைச்சரவையிலிருந்த ஜேம்ஸுக்கும் அதிபருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அதிரடியாகத் தன் பதவியை ராஜினாமா செய்தவர், ஜேம்ஸ்.

ஜேம்ஸ் மேட்டிஸ்
ஜேம்ஸ் மேட்டிஸ்

இந்நிலையில், இவரின் விமர்சனம் அட்லாண்டிக் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியுள்ள ஜேம்ஸ், “ எனது வாழ்நாளிலேயே அமெரிக்க மக்களை ஒன்றிணைக்க முயற்சி செய்யாத முதல் அதிபர் ட்ரம்ப் தான். அவர், மக்களை இணைப்பதாகப் பாசாங்குகூட செய்யவில்லை. அதற்குப் பதிலாக எங்களைப் பிரிக்க மட்டுமே முயல்கிறார். முதிர்ச்சியற்ற தலைமையால் ஏற்பட்ட விளைவுகளைக் கடந்த மூன்று வருடங்களாக நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

`நானே சட்டம் ஒழுங்கு தலைவர்; அமெரிக்க நகரங்களில் ராணுவம்!’ - எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்

இங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், பல்லாயிரக்கணக்கான மக்களின் மனசாட்சியால் வரையறுக்கப்படுகின்றன. நாம் அனைவரும் இணைந்து ஒரு தேசமாக வாழ வேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில், சட்டத்தை மீறும் ஒருசிலரால் நாம் திசைதிரும்பக் கூடாது. அமெரிக்காவின் பாதுகாப்பு துருப்புகள், சக குடிமக்களின் உரிமைகளை மீறும் என கனவிலும் நான் நினைத்துப் பார்க்கவில்லை” என்று பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். இவரது கருத்துகள் பெருமளவில் கவனம்பெற்றுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு