Published:Updated:

`பலிகொடுக்கும் விலங்கு; மர்ம ஊசி; 45 நிமிட ஆடியோ!' - கஷோகி மரணத்துக்கு விடைகொடுத்த ரகசிய டேப்

சவுதி பத்திரிகையாளர் கொல்லப்பட்ட அன்றைய தினம் சவுதி தூதரகத்தில் கிடைத்த ரகசிய டேப் பற்றிப் பகிர்ந்துள்ளார் பிரிட்டிஷ் வழக்கறிஞர்.

Jamal Khashoggi
Jamal Khashoggi

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. சென்ற வருடம் இதே நாள் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்ற ஜமால் கஷோகி, திரும்பி வரவேயில்லை. அவரது கொலை இன்னும் மர்மமாகவே உள்ளது. தங்கள் மண்ணில் நடந்த கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என்ற சூளுரையுடன் களத்தில் இறங்கியது துருக்கி அரசு.

Jamal Khashoggi
Jamal Khashoggi

இறுதியில், கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர் பின் சல்மான்தான் காரணம் எனத் திட்டவட்டமாகக் கூறியது. பின் சல்மானின் ரகசிய பாதுகாவலர்கள், `கஷோகியைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்தனர்' எனக் கூறி அதற்கான பல்வேறு ஆதாரங்களையும் துருக்கி வெளியிட்டது. ஆனால், துருக்கியின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சவுதி இளவரசர் தொடர்ந்து மறுத்து வந்தார். சமீபத்தில், துருக்கியில் உள்ள தூதரகத்தில்தான் கஷோகி கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக ஒப்புக்கொண்ட இளவரசர், கொலைக்குத் தான் காரணம் இல்லை என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.

`பத்திரிகையாளர் கஷோகி கொலையில் எனது பங்கு என்ன?' - முதல்முறையாக மௌனம் கலைத்த சவுதி இளவரசர் சல்மான்

சில மாதங்களாக அமைதியடைந்திருந்த இந்த விவகாரம், கஷோகியின் நினைவுநாளையொட்டி மீண்டும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்நிலையில், கஷோகி மரணம் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு உதவி செய்யும் பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஹெலினா கென்னடி (Helena Kennedy) கஷோகி கொலை தொடர்பான சில தகவல்களை பிபிசி ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Jamal Khashoggi
Jamal Khashoggi

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கிடைத்த சில ரகசிய டேப்களில் தான் கேட்ட விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ``கஷோகி இறந்த அன்றைய தினம் அவர் தூதரகத்துக்குள் நுழையும்போது, அங்கிருந்த சிலர் ‘பலிகொடுக்கும் விலங்கு வருகிறது’ எனக் கூறினர். பின்னர் கஷோகியைப் பார்த்து, கிண்டல் செய்து சிரிப்பதும் அந்த டேப்பில் பதிவாகியிருந்தது.

தொடர்ந்து, கஷோகி ’எனக்கு ஏதேனும் ஊசி போடப்போகிறீர்களா?’ எனக் கேட்கிறார். அதற்கு ’ஆம்’ எனப் பதில் வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் மூச்சு விட திணறும் சத்தம் கேட்கிறது. அது கஷோகியாக இருந்திருக்கலாம். அவரது முகத்தில் பிளாஸ்டிக் பைகளைக் கட்டி மூச்சு திணறச் செய்திருக்கலாம்.

Jamal Khashoggi
Jamal Khashoggi

மற்றொரு டேப்பில், `உடல் மற்றும் இடுப்புப் பகுதி இந்த பைக்குள் நுழையாது’ என்பதைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இதேபோன்று மொத்தம் 45 நிமிட ஆடியோ டேப்களை ஐ.நா விசாரணை ஆணையத்தில் துருக்கி சமர்ப்பித்துள்ளது” என்று கென்னடி கூறியுள்ளார்.