Published:Updated:

ட்விட்டர் தலைமைக்கே இந்த நிலையா? - ஹேக் செய்யப்பட்ட ஜாக் டோர்சியின் அக்கவுன்ட்

சத்யா கோபாலன்

ட்விட்டர் தலைமை நிர்வாகியின் அதிகாரபூர்வ கணக்கை யாரோ சிலர் ஹேக் செய்து, தவறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

Jack Dorsey
Jack Dorsey ( Twitter/@jack )

அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகள், அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளை முடக்கி, அதில் தவறான கருத்துகளைப் பதிவிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மாதிரியான கணக்குகள் முடக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் ட்விட்டர் சேவையைத் தொடர்புகொண்டு அதில் புகார் அளிப்பர். ஆனால், இந்த முறை ட்விட்டரின் தலைமை அதிகாரியின் கணக்கே ஹேக் செய்யப்பட்டுள்ளது நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

jack's account
jack's account
Twitter/@jack

ஜாக் டோர்சி ( Jack Dorsey) அமெரிக்க மென்பொருள் பொறியாளர். இவர், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஸ்குயர் ( Square) என்ற நிறுவத்தின் நிறுவனராகவும் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் நேற்று, ஜாக்கினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து தொடர்ச்சியாகப் பல வரைமுறையற்ற மற்றும் தாக்குதல் செய்திகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, ட்விட்டர் தலைமை அதிகாரியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது.

அவரது கணக்கிலிருந்து பதிவிடப்பட்டுள்ள சில ட்வீட்டுகளில் #ChucklingSquad என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இது ஹேக்கர்களின் குழு பெயர் அல்லது அவர்களின் அடையாள வார்த்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஜாக்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்ட 15 நிமிடங்களிலேயே இதுகுறித்துக் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

jack's hacked  account
jack's hacked account
Twitter/@jack

ஆனால் அந்த இடைப்பட்ட நேரத்தில், அவரது கணக்கிலிருந்து பல வன்முறையான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ’ஜாக் ட்விட்டர் கணக்கு அத்துமீறி திறக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது’ என ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

`ட்விட்டர் தலைமை நிர்வாகி ஏன் தனது கணக்கைப் பாதுகாப்பாக வைக்கவில்லை என்றும், ட்விட்டர் தலைவரின் கணக்கையே பாதுகாக்க முடியவில்லை என்றால் அந்நிறுவனத்தை நம்பிய கோடிக்கணக்கானவர்களின் கணக்கு மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும்’ என நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Twitter
Twitter

” ஜாக்கின் கணக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது. அவரது கணக்குக்காக கொடுக்கப்பட்ட போன் நம்பரில் உள்ள பிழையை வைத்து, அந்த நம்பர் மூலமே ஹேக்கர்கள் ட்வீட் செய்துள்ளதாகவும் எங்கள் தரப்பிலிருந்து எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை’ என அந்நிறுவன கூறியுள்ளது.