அரசியல்
அலசல்
Published:Updated:

இந்திய வம்சாவளி, மன்னரைவிட பணக்காரர்... பிரிட்டன் பிரதமராக சாதிப்பாரா ரிஷி சுனக்?

ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் தாத்தாக்கள் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த குஜ்ரன்வாலா நகரைச் சேர்ந்தவர்கள்.

குறுகியகாலத்தில் மூன்று பிரதமர்களைச் சந்தித்துவிட்டது பிரிட்டன். போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு, பிரதமரான லிஸ் ட்ரஸ் 45 நாள்கள் மட்டுமே தாக்குப்பிடித்தார். இந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் 42 வயதாகும் ரிஷி சுனக். பிரிட்டன் பிரதமரான முதல் ஆசியர்... முதல் இந்திய வம்சாவளி... ரிஷிதான். 210 ஆண்டுகளுக்குப் பிறகு பதவியேற்கும் இளம் பிரதமர், இந்து மதத்தைப் பின்பற்றும் முதல் பிரதமர், பெரும் பணக்கார பிரிட்டன் பிரதமர் எனப் பல `முதல்’களுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

ரிஷிக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன... அதையெல்லாம் மீறி பிரதமராகச் சாதிப்பாரா?

போரிஸ் - லிஸ் - ரிஷி!

போரிஸ் ஜான்சன் அமைச்சரவை யில் நிதியமைச்சர் பதவி வகித்தவர் ரிஷி சுனக். `பிரதமரின் நடவடிக்கைகள் சரியில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, போரிஸை எதிர்த்து முதன்முதலாகப் பதவி விலகியவர் ரிஷிதான். அதைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் பதவி விலக, வேறு வழியின்றி ராஜினாமா செய்தார் போரிஸ். இதையடுத்து, அடுத்த பிரதமரைத் தேர்வுசெய்ய கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் தேர்தல் நடந்தது. லிஸ் ட்ரஸ்ஸுக்கும், ரிஷி சுனக்குக்கும் இடையே கடும் போட்டி நிலவி, இறுதியில் வெற்றிக்கனியைத் தட்டிச் சென்றார் லிஸ் ட்ரஸ்.

`ஆட்சிக்கு வந்தவுடன் பொருளா தாரத்தை மீட்டெடுக்கிறேன்’ என்று சில வரிச் சலுகைகளை அறிவித்தார் லிஸ் ட்ரஸ். இதையொட்டி `மினி பட்ஜெட்’ ஒன்றை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தினார் நிதியமைச்சர் க்வாசி. இந்த மினி பட்ஜெட்டின் விளைவாக இங்கிலாந்து பங்குச் சந்தை சரிவைச் சந்திக்க, டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் சொந்தக் கட்சியினரே, `லிஸ், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும்’ என்று போர்க்கொடி தூக்க, வேறு வழியின்றி அவர் பதவி விலகினார். இதனால், `மிகக் குறுகியகாலம் பதவிவகித்த பிரிட்டன் பிரதமர்’ என்ற பெயரும் லிஸ் ட்ரஸ்ஸுக்குக் கிடைத்தது.

இதையடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தலை அறிவித்தது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்த ரேஸில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பாதுகாப்புத்துறைச் செயலாளர் பென் வாலஸ் உள்ளிட்டோர் ரிஷியை எதிர்த்து போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் தேர்தல் களத்தில் இறங்காத காரணத்தால், போட்டியின்றி பிரிட்டன் பிரதமராகத் தேர்வானார் ரிஷி சுனக்.

இந்திய வம்சாவளி, மன்னரைவிட பணக்காரர்... பிரிட்டன் பிரதமராக சாதிப்பாரா ரிஷி சுனக்?

ரிஷி - இந்தியா!

ரிஷி சுனக்கின் தாத்தாக்கள் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த குஜ்ரன்வாலா நகரைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி தற்போது பாகிஸ்தானில் இருந்தாலும், தன்னை இந்திய வம்சாவளி என்றே அடையாளப்படுத்திக்கொள்கிறார் ரிஷி சுனக். இவரின் தாத்தாக்களில் ஒருவரான ராம்தாஸ் சுனக் வேலைக்காக கென்யா நாட்டுக்குச் சென்றார். அங்குதான் ரிஷியின் அப்பா யாஷ்வீர் சுனக் பிறந்தார். தான்சான்யா நாட்டில் வசித்துவந்த உஷாவை திருமணம் செய்தார் யாஷ்வீர். பின்னர், பிரிட்டனில் குடியேறிய இந்தத் தம்பதிக்கு பிறந்தவர்தான் ரிஷி சுனக்.

ரிஷி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரப் பிரிவுகளில் பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியைக் காதலித்து, பின்னர் கரம் பிடித்தார்.

படித்து முடித்த பிறகு, நிதி நிறுவனங்கள் சிலவற்றில் பணிபுரிந்தார். 2014-ல் தீவிர அரசியலில் களமிறங்கியவர், 2015-ல் எம்.பி-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு நிதியமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றவர், 2020-ல் நிதியமைச்சரானார். கொரோனா ஊரடங்கின்போது, வேலையிழந்த தொழிலாளர்களுக்கு `ஃபர்லோ பேமென்ட்ஸ்’ என்ற பெயரில் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியது பிரிட்டன் அரசு. இந்தத் திட்டம் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்த ரிஷி சுனக், மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து, பொதுவெளியில் இவர் முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகள், பிரிட்டனில் இவருக்கான ஆதரவைப் பெருக்கின.

மன்னரைவிடப் பணக்காரர்!

அக்‌ஷதா, சுனக் தம்பதியின் பெயரில் 730 மில்லியன் பவுண்ட் சொத்து இருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் சொல் கின்றன. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இவர்களுக்கு சொகுசு பங்களாக்கள் இருக்கின்றன. நாராயணமூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம், காட்டமரான் வென்ச்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் ரிஷி குடும்பத்துக்கு இருக்கும் பங்குகள்தான் அவர்களைப் பெரும் பணக்காரர்களாக மாற்றியிருக்கின்றன. இதன் மூலம், பிரிட்டன் மன்னர் சார்லஸைவிட இரண்டு மடங்கு பணக்காரராக அறியப்படுகிறார் ரிஷி.

பிரிட்டன் வரலாற்றில் மன்னரைவிடப் பணக்காரரான ஒருவர் பிரதமராவது இதுவே முதன்முறை. இதனாலேயே, `ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர் எளிய மக்களின் வலிகளை எப்படிப் புரிந்துகொள்வார்?’ என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளாகிவருகிறார் ரிஷி.

இந்திய வம்சாவளி, மன்னரைவிட பணக்காரர்... பிரிட்டன் பிரதமராக சாதிப்பாரா ரிஷி சுனக்?

காத்திருக்கும் சவால்கள்!

பணவீக்கம், கொரோனா தாக்கம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், வரலாறு காணாத பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கிறது பிரிட்டன். வறட்சி, சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவுப் பற்றாக்குறையும் அங்கு அதிகரித்திருக்கிறது. குறைந்த வருவாய் ஈட்டும் ஐந்தில் ஒரு குடும்பம் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது `ஃபுட் பவுண்டேஷன்’ அமைப்பு. எனவே, ரிஷிக்கு இருக்கும் முதல் சவால் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும், உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்வதும்தான். பின்னர், கட்சிக்குள் தன்மீது அதிருப்தியிலிருப்பவர்களைச் சரிசெய்வதும் அவருக்குப் பெரும் சவால்தான். எதிர்க்கட்சிகள், `எத்தனை முறை பிரதமரை மாற்றுவீர்கள்; பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று தொடர்ந்து முழங்கிவருகின்றன. நாடாளுமன்றத்திலும் ரிஷிக்குக் குடைச்சல் அதிகரித்திருக்கிறது. அதையும் அவர் சமாளிக்கவேண்டியிருக்கும்.

``பொருளாதாரம் படித்தவர், நிதியமைச்சராக சில நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர் என்பதால், பிரிட்டனின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிஷி சரியானவராக இருப்பார் என பிரிட்டன் மக்களில் பெரும் பகுதியினர் நம்புகின்றனர்’’ என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா, பிரிட்டன் பொருளாதாரத்தைக் கரை சேர்ப்பாரா அல்லது இன்னொரு குறுகியகாலப் பிரதமராக காணாமல்போவாரா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அவரது செயல்பாடுகளிலேயே இருக்கிறது!