கடந்த ஞாயிறன்று 2022-ம் ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதை தொடர்புப்படுத்தி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்ற போரில் சமூகவலைதளங்களில் வைரலான காணொலிகளை வகைப்படுத்தி விருதுகளை ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. உக்ரைன் ராணுவத்தின் (UArmy) ஆஸ்கர் விருதுகள் என தலைப்பிடப்பட்டு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பாடல், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த படம் என வகைப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம். அதன் விவரங்கள் இதோ...
1. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது (Best Cinematography):
ரஷ்ய ஏவுகணை தாக்குதலை உக்ரைன் ஏவுகணை முறியடித்தபோது எடுக்கப்பட்ட விடியோவிற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது எனக் குறிப்பிட்டிருந்தது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம். மேலும் இதற்கு 'A Kiss From Stinger' என தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2. சிறந்த பாடலுக்கான விருது (Best Song):
கார்கிவ்வில் மக்கள் பாதுகாப்புக்காக தங்குமிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தபோது பெண்கள் பாடிய உக்ரைனின் கீதத்திற்கு சிறந்த பாடலுக்கான விருது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
3. சிறந்த நடிகைக்கான விருது (Best Actress):
ரஷ்யப் படைகளுக்கு எதிராக ஜாவெலின் என்ற ஏவுகணையைப் பயன்படுத்தும் காணொலி வெளியாகி வைரலானது. இந்தக் காணொலியில் பயன்படுத்திய ஜாவெலின் ஏவுகணைக்கு சிறந்த நடிகைக்கான விருது என்று குறிப்பிட்டிருக்கிறது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்.
4. சிறந்த துணை நடிகருக்கான விருது (Best Supporting Actor):
உக்ரேனிய விவசாயி ரஷ்ய ராணுவ வாகனங்களை தனது டிராக்ட்டர் வாகனம் மூலம் இழுத்துச் செல்லும் வீடியோவை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்து 'சிறந்த துணை நடிகர்' என்று குறிப்பிட்டிருந்தது.
5. சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film):
துருக்கியில் தயாரிக்கப்பட்ட Bayraktar TB2 வகை ட்ரோன்கள் மூலம் ரஷ்ய படைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது உக்ரைன். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைப் பகிர்ந்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு 'சிறந்த சர்வதேச திரைப்படம்' எனப் பதிவிட்டிருந்தது.
6. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது (Best Production Design):
ரஷ்யா ராணுவம் உக்ரைன் நகருக்குள் நுழைய முயன்றபோது ஸ்வீடிஷ் தயாரித்த NLAW வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் நடத்திய தாக்குதலின் காணொலியை பகிர்ந்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு 'சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு' எனக் குறிப்பிட்டிருந்தது.
7. சிறந்த படம் (Best Picture):
ஸ்நேக் தீவை (Snake Island) பாதுகாக்கும் உக்ரைன் ராணுவ வீரர், ரஷ்ய போர்க்கப்பலிடம் "Go F*** Yourself" என்று கூறிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவரது இந்த காணொலிக்கு 'சிறந்த படத்திற்கான விருது' எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்.