Published:Updated:

ரஷ்யா - உக்ரைன் போர்! - தொடருமா, முடியுமா?

 உக்ரைன் போர்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன் போர்

இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் வழியாக மீட்டுவருகிறது மத்திய அரசு.

ரஷ்யா - உக்ரைன் போர்! - தொடருமா, முடியுமா?

இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் வழியாக மீட்டுவருகிறது மத்திய அரசு.

Published:Updated:
 உக்ரைன் போர்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன் போர்

வழிகாட்டிகள் அகற்றம்... குழம்பிய ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன்மீது வான்வழி, தரைவழி, கடல்வழி என மும்முனைத் தாக்குதல்களை நிகழ்த்தியது ரஷ்யா. இந்த நிலையில், தரைவழித் தாக்குதல் நடத்த உக்ரைன் நகரங்களுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினரைக் குழப்புவதற்காக உக்ரைன் சாலைப் பராமரிப்பு நிறுவனம், சாலைகளின் வழிகாட்டிப் பலகைகளில் திசைகளை மாற்றிவைத்துவிட்டது. சில இடங்களில் பெயர்களுக்கு பதிலாக `ரஷ்யாவுக்கே திரும்பிச் செல்’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் குழப்பமடைந்த ரஷ்யப் படைகள் பல இடங்களில் பாதி வழியிலேயே நின்றதாகச் செய்திகள் வெளியாகின!

சிறைக் கைதிகளை விடுவிக்கத் தயார்!

பிப்ரவரி 27 அன்று, ‘இதுவரை இந்தப் போரில், உக்ரைனைச் சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டார்கள். 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்திருக்கிறார்கள்’ என்று அறிவித்தது உக்ரைன் உள்துறை அமைச்சகம். இதற்கிடையே, ‘‘நாட்டுக்காக ரஷ்யாவை எதிர்த்து போராட நினைக்கும், ராணுவ அனுபவம்கொண்ட சிறைக் கைதிகளை விடுவிக்கத் தயார்’’ என்று அறிவித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

ரஷ்யா - உக்ரைன் போர்! - தொடருமா, முடியுமா?

உக்ரைனுக்குச் செல்லும் அமைச்சர்கள்!

இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் வழியாக மீட்டுவருகிறது மத்திய அரசு. இந்த நிலையில், உக்ரைன் எல்லை நோக்கிச் சென்ற இந்திய மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தாக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக சில வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்ததால், உக்ரைன் காவல்துறையைச் சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்ததாகவும், அந்தக் கோபத்தை இந்திய மாணவர்கள்மீது காட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய மான்சி செளத்ரி என்ற மாணவி, ‘‘நான் மூன்று நாள்களாக போலந்து எல்லையில் காத்திருக்கிறேன். உக்ரைன் நாட்டவர்களை எல்லையைக் கடக்க அனுமதிக்கிறார்கள். எங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். உக்ரைன் காவல்துறையினர் எங்களைக் கம்பிகளால் தாக்குகிறார்கள். மாணவிகளின் முடியைப் பிடித்து இழுத்து சித்ரவதை செய்கிறார்கள். பலருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான், இந்தியர்களை மீட்டுவர ஹர்தீப் பூரி, ஜோதிராதித்திய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகிய நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று இந்தியர்களை மீட்டுவரும் பணியைச் செய்வார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்! - தொடருமா, முடியுமா?

நேட்டோ உதவி... எச்சரித்த ரஷ்யா!

ரஷ்யாவின் போர்த் தாக்குதல்களால் தவித்துவரும் உக்ரைனுக்குச் சில நாடுகள் உதவ முன்வந்தன. `உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்கள் அனுப்பப்படும்’ என்றது ஜெர்மனி. உக்ரைனுக்குச் சுமார் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க முன்வந்த அமெரிக்கா, போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளையும் அனுப்பிவைக்கப்போவதாக அறிவித்தது. நேட்டோ அமைப்பும், ஆயுதங்களையும் நிதியுதவியையும் வழங்கப்போவதாக அறிவித்தது. இந்த நிலையில், ‘‘உக்ரைனுக்கு ராணுவ, நிதி உதவிகளை நேட்டோ வழங்கினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்திருக்கிறது ரஷ்யா.

ரஷ்யா - உக்ரைன் போர்! - தொடருமா, முடியுமா?

பெலாரஸில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

உக்ரைனின் கார்கிவ் நகர நிர்வாகம், ‘நகரம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ரஷ்ய வீரர்கள் பலரும் எங்களிடம் சரணடைந்துவருகிறார்கள்’ என்று தெரிவித்தது. சரணடைந்த சில ரஷ்ய ராணுவ வீரர்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘ரஷ்ய ராணுவ வீரர்களே, உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உக்ரைனைவிட்டு உடனே வெளியேறுங்கள்’’ என்று எச்சரித்தார். மேலும், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக்கொள்ளுமாறும் மேற்கத்திய நாடுகளிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, பெலாரஸில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையில், `போரை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தது உக்ரைன்.

ரஷ்யா - உக்ரைன் போர்! - தொடருமா, முடியுமா?

தாக்குதலைக் குறைத்த ரஷ்யா?

தொடர்ந்து ஐந்து நாள்களாக உக்ரைன்மீது தாக்குதலை நிகழ்த்திவந்த ரஷ்யா, பிப்ரவரி 28 அன்று பெலாரஸில் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் தாக்குதலின் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டதுடன், வான்வழித் தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது. உக்ரைனின் கார்கிவ், கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டது. அதோடு, ‘‘உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம். கீவ்-வாசில்கீவ் சாலை மக்களுக்காகத் திறக்கப்படுகிறது. அந்தச் சாலை வழியாகப் பாதுகாப்பாக மக்கள் வெளியேறிச் செல்லலாம்’’ என்று அறிவித்தது ரஷ்ய ராணுவம். இவ்வாறு அறிவித்த சில மணி நேரம் கழித்து மீண்டும் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே `அணு ஆயுதங்கள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கின்றன’ என்றும் ரஷ்யா தெரிவித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism