Published:Updated:

மூன்று வாரங்களைத் தாண்டியும் முடிவுக்கு வராத போர்!

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

படைபலத்தில் உக்ரைனைவிட வலிமையான ரஷ்ய ராணுவத்தால், உக்ரைனின் ஒரு நகரத்தைக்கூட முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை

மூன்று வாரங்களைத் தாண்டியும் முடிவுக்கு வராத போர்!

படைபலத்தில் உக்ரைனைவிட வலிமையான ரஷ்ய ராணுவத்தால், உக்ரைனின் ஒரு நகரத்தைக்கூட முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

மூன்று வாரங்களைத் தாண்டியும் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது... இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பான சில முக்கியச் சம்பவங்கள் இங்கே...

கொத்துக் கொத்தாகச் சடலங்கள்!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் மரியுபோல், லிவிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ச்சியாகக் குண்டு வீசிவருகிறது ரஷ்ய ராணும். குறிப்பாக உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியிலிருக்கும் மரியுபோல் நகரில் ஆக்ரோஷத் தாக்குதல் நடக்கிறது. மார்ச் 13 அன்று உக்ரைன் அரசு, ``இதுவரை 100 குண்டுகள் மரியுபோல் நகரில் மட்டும் வீசப்பட்டிருக்கின்றன. 2,187 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய 180 வெளிநாட்டு வீரர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உக்ரைனில் விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கவில்லையென்றால், நேட்டோ நாடுகள்மீதும் குண்டுகள் விழும்’’ என்றிருக்கிறது. மரியுபோலில் கொத்துக் கொத்தாகச் சடலங்கள் குவிந்துவரும் நிலையில், பெரும் குழிகளைத் தோண்டி அவற்றில் சடலங்களைப் புதைத்துவருகிறது நகர நிர்வாகம்!

மூன்று வாரங்களைத் தாண்டியும் முடிவுக்கு வராத போர்!

கண்ணீர் சிந்தும் உக்ரைனியர்கள்!

இதுவரை சுமார் 25 லட்சம் மக்கள் உக்ரைனின் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைனின் பெரிய நகரங்களில் கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்துவதால், அங்கிருந்து சிறிய நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள் மக்கள். போர் தொடர்ந்தால், சிறிய நகரங்களும் தாக்குதலுக்குள்ளாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சொந்த இடங்களைவிட்டு வெளியேறிய மக்கள் பலரும், புகலிடம் கோரி அமெரிக்காவின் கதவுகளைத் தட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கண்ணீர் சிந்தியபடி அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் நெஞ்சை உருக்குகின்றன. ``உறவுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்டோம். எங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது என்றே தெரியவில்லை. அமெரிக்காவிடம் பாதுகாப்பு கோருவதற்கும், புகலிடம் கேட்பதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு’’ என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் உக்ரைனியர்கள்.

சீனாவிடம் உதவி கேட்ட ரஷ்யா!

படைபலத்தில் உக்ரைனைவிட வலிமையான ரஷ்ய ராணுவத்தால், உக்ரைனின் ஒரு நகரத்தைக்கூட முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சில நாள்களுக்கு முன்பு செர்னோபில் அணு உலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது ரஷ்யா. ஆனால் மார்ச் 13 அன்று உக்ரைன் அணுசக்தி நிறுவனம், ``நான்கு நாள்களுக்குப் பின்னர், ரஷ்யாவிடமிருந்து செர்னோபில் அணுமின் நிலையத்தை மீட்டுவிட்டோம்’’ என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்திவந்தாலும், உக்ரைனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையே நீடித்துவருவதாகத் தெரிகிறது. இதையடுத்து, உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பதற்காக, சீனாவிடமிருந்து டிரோன்கள் உள்ளிட்ட உபகரணங்களை ரஷ்யா கோரியிருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்திருக்கிறது. எனினும், சீனத் தரப்பிலிருந்து இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

போலந்துக்கு மாற்றப்படும் இந்தியத் தூதரகம்!

உக்ரைனிலுள்ள 104 மருத்துவமனைகளை ரஷ்ய ராணுவம் சேதப்படுத்தியிருப்பதாகவும், ஏழு மருத்துவமனைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தெரிவித்திருக்கிறது. ரஷ்யத் தாக்குதலில் 25 ஆம்புலன்ஸ்கள் அழிக்கப்பட்டதோடு, ஆறு மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும் உக்ரைன் அறிவித்திருக்கிறது. உக்ரைனின் 3,687 ராணுவ நிலையங்களையும் ரஷ்யா அழித்திருக்கிறது. கல்வி நிலையங்கள், அப்பார்ட்மென்ட்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களும் ரஷ்யத் தாக்குதலில் உருக்குலைந்திருக்கின்றன. இந்த நிலையில், ``உக்ரைனில் நிலைமை மோசமடைந்துவருகிறது. உக்ரைனிலுள்ள இந்தியத் தூதரகத்தைத் தற்காலிகமாக போலந்துக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை.

உக்ரைன் ராணுவத்தில் நம்பர் 1 ஸ்னைப்பர்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “வெளிநாட்டு வீரர்களும் உக்ரைனுக்கு ஆதரவாக எங்கள் படையில் இணைந்து போரிடலாம்” என்று கடந்த சில நாள்களாகக் கூறிவந்தார். இந்த நிலையில், 40 வயதான ஓய்வுபெற்ற கனடா ராணுவ வீரர் வாலி (Wali), உக்ரைன் படையில் இணைந்திருக்கிறார். கனடா ராணுவத்தின் 22-வது ரெஜிமென்ட்டைச் சேர்ந்த வாலி, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர் புரிந்தவர். இவரது உண்மையான பெயர் வாலி இல்லை என்றும், ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் இவர் பணியாற்றியபோது அங்கிருந்தவர்கள் இவருக்கு வைத்த பெயர்தான் இது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. திறம்படச் செயல்படும் ஸ்னைப்பர்கள் நாளொன்று 7 முதல் 10 பேரை மட்டுமே சுட்டுக் கொல்வார்களாம். ஆனால், உலகின் நம்பர் 1 ஸ்னைப்பராகக் கருதப்படும் வாலி, நாளொன்றுக்கு அதிகபட்சமாக 40 வீரர்கள் வரை சுட்டுக் கொன்றிருக்கிறாராம்.

மூன்று வாரங்களைத் தாண்டியும் முடிவுக்கு வராத போர்!

இன்ஸ்டாகிராமுக்குத் தடை!

மார்ச் 14-ம் தேதியிலிருந்து ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, `Hate Speech’ எனப்படும் வெறுக்கத்தக்க பதிவுகளுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இருந்தும், ரஷ்யா போரைத் தொடங்கியதிலிருந்து, `ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு மரணம்தான் கதி’ என்றரீதியில் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் பதிவிட்டுவந்தனர். இதையடுத்து, `வெறுக்கத்தக்க கருத்துகள்கொண்ட பதிவுகளை நீக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது ஏன்?’ என்று மெட்டா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியது ரஷ்யா. அதற்கு, ``போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்குத் தற்காலிகமாக Hate Speech விதிகளில் தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றிருக்கிறது மெட்டா. இதனால் கடுப்பான ரஷ்யா, இன்ஸ்டாகிராமுக்குத் தடை விதித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism