உக்ரைன் எல்லையில், ரஷ்யா தனது ராணுவப் படைகளை குவித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது, போரை அறிவித்து தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. மேலும் இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் கடந்த திங்களன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த நிலையில், மீண்டும் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்துகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ, ``உங்கள் படை உக்ரைனைத் தாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என ரஷ்ய அதிபர் புதினைக் கேட்டுக்கொண்டார். எனினும் இந்தக் கோரிக்கையை புதின் நிராகரித்துவிட்டத்தை, அடுத்தடுத்து வந்த புதினின் போர் அறிவிப்புகள் நமக்கு உணர்த்தின. மேலும், உக்ரைன் பாதுகாப்புக் காரணம் கருதி, தனது வான்வெளியை மூடியுள்ளது.
முன்னதாக, உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ராணுவ ஆதரவு அளிக்க புதின் நடத்திய வாக்கெடுப்புக்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
