கட்டுரைகள்
Published:Updated:

COP27 தடதடக்கும் மாநாடு - விழித்துக் கொள்ளுமா உலக நாடுகள்?

COP27 தடதடக்கும் மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
COP27 தடதடக்கும் மாநாடு

சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சி-யின் அறிக்கை, ‘காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், சுமார் 360 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என எச்சரித்திருக்கிறது.

`மனித இனம் நரகத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கிறது. நாம் உடனடியாகக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்படப்போகும் கோர பாதிப்புகளை சரிசெய்ய முடியாது. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். அல்லது, அழிந்துபோக வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வு செய்யமுடியும்!’ என்ற அழுத்தமான குரல், உலக அரங்கில் ஓங்கி ஒலித்திருக்கிறது. இது ஏதோ ஒரு நாட்டின் சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் குரலல்ல; எகிப்தில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற மாநாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் விடுத்த எச்சரிக்கை!

COP27 தடதடக்கும் மாநாடு - விழித்துக் கொள்ளுமா உலக நாடுகள்?

கிடுகிடுக்க வைத்த அறிக்கைகள்... தொடங்கியது மாநாடு!

சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சி-யின் அறிக்கை, ‘காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், சுமார் 360 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என எச்சரித்திருக்கிறது. மேலும், ‘1986 பிப்ரவரிக்குப் பிறகு இந்த உலகத்தில் பிறந்த எந்தக் குழந்தையும் இதுவரை தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு இயல்பான மாதத்தைக்கூடப் பார்த்ததில்லை’ என்ற அதிர்ச்சித் தகவலையும் ஐ.பி.சி.சி வெளியிட்டிருக்கிறது. உலகப் பாரம்பர்ய இடங்களாக அறிவிக்கப்பட்ட பனிப்பாறைகள் உருகியதால் மட்டுமே, கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை உலக அளவில் 4.5% கடல்நீர் மட்டம் உயர்ந்திருப்பதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்திருக்கிறது. ‘இந்தப் பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு வரும் 30 ஆண்டுகளுக்குள் உருகி மறைந்துவிடும்’ எனவும் யுனெஸ்கோ அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இப்படி, காலநிலை மாற்றத்தின் பாதிப்பை வெளிச்சம் போடும் பல அறிக்கைகள் கிடுகிடுக்க வைத்திருக்கும் நிலையில்தான், தற்போது எகிப்தில் நடைபெற்றுவரும் காலநிலை மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், செயல்படுத்தவும் 1995 முதல் ஐ.நா. சபையால் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. இதன் 27-வது (COP27) மாநாடு எகிப்து நாட்டிலுள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில், கடந்த நவம்பர் 5-ம் தேதி தொடங்கியது. நவம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் சுழற்சி அடிப்படையில் பங்கேற்கின்றனர். புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, அதீத கனமழை, அதிகப்படியான வறட்சி, அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதோடு, அதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் செய்கின்றனர்.

COP27 தடதடக்கும் மாநாடு - விழித்துக் கொள்ளுமா உலக நாடுகள்?

“நிதி போதாது...” குரல் எழுப்பிய இந்தியா!

வளரும் மற்றும் ஏழை நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதற்காகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காகவும் வளர்ந்த பணக்கார நாடுகள் 2020-ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீதம் வழங்குவதாக, 2009-ம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் உறுதியளித்தன. ஆனால், தற்போதுவரை அந்த நிதியைப் பணக்கார நாடுகள் வழங்கவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்துப் பிரதமர் ரிஷி சுனக், `கால நிலை மாற்றம் குறித்து விரைவாகச் செயல்பட வேண்டிய நேரம் இது. காலநிலை நிதியத்திற்கு எங்கள் நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்குவோம்’ என்று அறிவித்திருக்கிறார். ‘‘இந்த நிதி போதாது’’ என்கிற குரல், வளரும் நாடுகளிடமிருந்து ஒலிக்கிறது. “காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகளில் ஏற்படும் இழப்புகள் 2030-ம் ஆண்டுக்குள் 290 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும்” என அவர்கள் வாதிடுவது பேசுபொருளாகி இருக்கிறது.

ஆன்டனியோ குட்டரெஸ்
ஆன்டனியோ குட்டரெஸ்

எகிப்து காலநிலை மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், “காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உலக நாடுகள் போதிய நிதி அளிக்கத் தவறிவிட்டன. உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளின் வேகம் போதாது. பசிபிக், கரீபியன் பகுதிகளில் வெப்ப மண்டல சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், சிறிய வெப்பமண்டல நாடுகள் வெறும் சில மணிநேரத்தில் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இழக்கின்றன. இதைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேரழிவு ஏற்படக்கூடும். அனைத்து ஹைட்ரோ வானிலை பேராபத்துகளை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை தரும் அமைப்பை இந்தியா வலுப்படுத்தியிருக்கிறது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டில் சூறாவளிகளால் ஏற்படும் இறப்புகள் 90% வரை குறைந்திருக்கின்றன” என்றிருக்கிறார்.

COP27 தடதடக்கும் மாநாடு - விழித்துக் கொள்ளுமா உலக நாடுகள்?
COP27 தடதடக்கும் மாநாடு - விழித்துக் கொள்ளுமா உலக நாடுகள்?

இந்த முறையும் கண்துடைப்பு கூடாது

இறுதியாக மாநாடு நிறைவடையும்போது, ஐ.நா-வால் பிரகடனம் ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதில் கூறப்படும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்துருக்களை, மாநாட்டில் கலந்துகொண்ட அத்தனை நாடுகளும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திடவும் ஏற்பாடுகள் துரிதமாகியிருக்கின்றன.

“கடந்த மாநாடுகளில் கையெழுத்திட்ட வாக்குறுதிகளை உலக நாடுகள் பின்பற்ற வேயில்லை. இனியும் அதைச் செய்தால், எதிர்வரும் காலத்தில் மீளமுடியாத பேரிழப்பு களை உலகநாடுகள் சந்திக்க நேரிடும். கண்துடைப்பாக எதையும் செய்யாமல், கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் உலகநாடுகள் தீவிரமாக வேண்டும். காலம் கடந்து செய்யப்படும் முயற்சிகள் பலனளிக்காமல் போகும்” என எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். விழித்துக்கொள்ளுமா உலக நாடுகள்?