`ஏ' கிளாஸ் நோய், தெர்மல் ஸ்கேனர்கள், சுற்றுலாவுக்குத் தடை... என்ன நடக்கிறது சீனாவில்?

சீனாவின் வுகான் நகரத்திலுள்ள சந்தைப் பகுதியிலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவியது என்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வன விலங்குகள் மற்றும் வாத்து, கோழி போன்ற பறவையினங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவை மட்டுமல்ல உலக நாடுகளையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது அந்நாட்டில் பரவி வரும் சார்ஸ் நோய் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் பாதிப்பு. இந்தப் பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 440 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் நேரத்தில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மைகொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும். பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும் தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்நோய் பரவத் தொடங்கியது. கடந்த வாரம் மட்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் மட்டும் பரவியிருந்த வைரஸ் தொற்றானது தற்போது 13 மாகாணத்துக்குப் பரவியுள்ளது. இன்னும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. இதுவரை 440 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,000 பேர் நோய் பாதிப்புள்ளவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டு 1,394 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், உலக நாடுகள் பதற்றமடைந்துள்ளன. தமிழகம் உட்பட இந்தியா மற்றும் அனைத்து உலக நாடுகளிலுள்ள சர்வதேச விமான நிலையங்களும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. பல விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டு, உடல் சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் கூடுதல் வெப்பநிலையோடு இருக்கும் சீனாவைச் சேர்ந்த பயணிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சீனாவிலிருந்து சென்ற பயணிகளால் தாய்லாந்தில் மேலும் நான்கு பேருக்கு இந்நோய் பரவியுள்ளதை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக உறுதிசெய்யதுள்ளது. தென்கொரியாவில் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால், வடகொரியாவும் வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக வடகொரிய எல்லையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நோய் தாக்குதலுள்ள மாகாணங்களிலிருக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் காய்ச்சல் ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், நெஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த விஷயத்தில் நாங்கள் கவனக்குறைவாக இருக்க மாட்டோம். அதிக விழிப்புடன் செயல்படுவோம்.சீன சுகாதாரத் துறை அதிகாரிகள்
சீனாவின் வுகான் நகரத்திலுள்ள சந்தைப் பகுதியிலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவியது என்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்தச் சந்தைப் பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வன விலங்குகள் மற்றும் உணவுக்காக விற்கப்படும் வாத்து, கோழி போன்ற பறவையினங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சீன நாட்டின் முக்கியக் கொண்டாட்டங்களில் ஒன்றான புத்தாண்டு இன்னும் சில தினங்களில் வரவுள்ளதால், 44 கோடி பேர் ரயில்கள் மூலமும் 7.9 கோடி பேர் விமானங்களின் மூலமும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கும், வேறு நாடுகளுக்கும் பயணிப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. இதனால் இந்த நோயின் தாக்கம் மேலும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அந்நாட்டின் பல மாகாண அரசுகள் ரத்து செய்துள்ளன.

புத்தாண்டு நேரத்தில் குழுவாகச் சேர்ந்து சுற்றுலா செல்பவர்களும் பயணங்களை ரத்து செய்துள்ளனர். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் இந்த நோய் பரவுவதால் மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நோய் பரவியுள்ள மாகாணங்களில் வசிப்போர் வெளியூருக்குச் செல்வதையும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நோய் பாதிப்பை 'ஏ' கிளாஸ் நோயாக சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் அறிவித்துள்ளது. அதன் மூலம் நோய் பாதிப்புள்ள பகுதிகளிலிருக்கும் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும், பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தேவைப்படும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பேசியுள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை உயரதிகாரிகள், "மனிதரிடமிருந்து மனிதருக்கு இந்த வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இதையறியாமல் அவருக்கு அறுவைசிகிச்சை செய்துள்ளனர். அதன் காரணமாக, அறுவைசிகிச்சை செய்த 14 மருத்துவர்கள் மற்றும் ஆபரேஷன் தியேட்டரிலிருந்த செவிலியர்கள் எல்லாருக்கும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதுபோன்று கவனக்குறைவாக இருப்பதும் நோய் பரவுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் கவனக்குறைவாக இருக்க மாட்டோம். அதிக விழிப்புடன் செயல்படுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இன்று அவசர கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பாதிப்பை உலகப் பொது சுகாதார அவசரமாக அறிவிக்க வேண்டுமா என்று ஆலோசனை நடத்தியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச விமான நிலையங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை நோய் தாக்குதல் எதுவும் கண்டறியப்படவில்லை.