Published:Updated:

`முதலில் ஜார்ஜ்; தற்போது முதியவர்’ - அமெரிக்காவில் பதற்றத்தை அதிகரிக்கும் போலீஸாரின் அத்துமீறல்கள்

வைரல் வீடியோ
வைரல் வீடியோ ( AP )

அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில் முதியவர் ஒருவர் போலீஸாரால் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னெபொலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஆப்ரிக்க - அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட், கடையில் கள்ள நோட்டு கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாகாண போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஜார்ஜை கீழே தள்ளி அவரது கழுத்தில் ஒரு போலீஸார் பலமாக அழுத்தியுள்ளார். காலை எட்டு மணிக்குப் பல மக்கள் முன்னிலையில் சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது ஜார்ஜ் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் கடந்த 10 நாள்களாக அமெரிக்காவில் பற்றி எரிந்து வருகிறது

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

ஜார்ஜின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் காவலரின் செயலைக் கண்டித்தும் அமெரிக்காவில் இருக்கும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பல லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜார்ஜ் உயிரிழப்பில் தொடர்புடைய 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கு உறுதுணையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மினசோட்டா மாகாணத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது அமெரிக்காவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிற நாடுகளுக்கும் பரவிவிட்டது.

இந்தப் போராட்டக்காரர்களைக் கலைப்பதாக அவர்கள் மீது காவலர்கள் அத்துமீறும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அப்படி ஒரு மோசமான சம்பவம்தான் மீண்டும் நடந்துள்ளது. நியூயார்க்கில் உள்ள புஃபலோ (Buffalo) நகரில் போராட்டம் நடைபெற்றதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தடை உத்தரவை அமல்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் அந்தப் போராட்டக் களத்துக்கு அருகில் வந்துள்ளனர். அந்த நேரத்தில் போலீஸாருக்கு முன் சென்ற 75 வயது மதிக்கத்தக்க ஒருவரை, காவலர்கள் கீழே தள்ளியுள்ளனர். இதனால் நிலை குலைந்து விழுந்த அவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. ஆனால், அந்த முதியவருக்கு உதவாமல் போலீஸார் கடந்து சென்றுள்ளனர்

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

இந்த அனைத்து சம்பவங்களையும் புஃபலோ நகரின் உள்ளூர் ரேடியோவான WBFO -வின் பத்திரிகையாளர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முதியவர் தள்ளப்படும் வீடியோவும் பெருமளவில் பரவ போராட்டக்காரர்களை மேலும் கொந்தளிக்கவைத்துள்ளது.

முதியவரின் நிலை பற்றிப் பேசியுள்ள புஃபலோ நகர மேயர் பைரோன் பிரௌன், `போலீஸாரால் கீழே தள்ளப்பட்ட முதியவரை பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கீழே விழுந்த வீடியோ என்னை அதிகமாகப் பாதித்துள்ளது. பல நாள்களாக அமைதியாக நடந்துவந்த போராட்டத்தில் தற்போது நடந்த விஷயம் மிகவும் வருத்தமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா

இந்த சம்பவத்துக்குப் பிறகு முதியவரைக் கீழே தள்ளிய இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புஃபலோ நகரச் செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெஃப் ரினால்டோ தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் போலீஸாரின் அடையாளங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். `இது மிகவும் நியாயமற்ற மற்றும் அபாயகரமான செயல்’ என போலீஸாருக்கு எதிராக தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார் நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ. முதியவர் தொடர்பான வீடியோவுக்கு சர்வதேச அளவிலும் பெருமளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

எச்சரிக்கை! மனதைப் பாதிக்கும் வீடியோ - https://twitter.com/WBFO/status/1268712530358292484

அடுத்த கட்டுரைக்கு