Published:Updated:

``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

பிரேம் குமார் எஸ்.கே.

மோடி சொன்னதாக ட்ரம்ப் சொன்ன கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் மோடி அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவே இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இம்ரான் கான் வெகு காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இம்ரான் கான் - ட்ரம்ப்
இம்ரான் கான் - ட்ரம்ப்

இதைத் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ``என்னால் உதவ முடிந்தால் , நான் நிச்சயமாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராகச் செயல்படுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது மோடி என்னிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருக்க முடியுமா என்று கேட்டார். காரணம் இது நீண்டகாலமாக தீர்க்கப்படாமலே உள்ளது” என்றார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்து சர்ச்சையானது.

காரணம், மோடி சொன்னதாக ட்ரம்ப் சொன்ன கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் மோடி அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவே இல்லை. பாகிஸ்தானுடனான பிரச்னையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க முடியும் என இந்தியா நம்புகிறது என்று ட்ரம்புக்கு குட்டு வைக்கப்பட்டது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க எம்.பி பிராடு ஷெர்மேன் ட்ரம்பின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ``தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கை கொஞ்சமாவது தெரிந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரைத் தொடர்ந்து எதிர்த்துவருகிறார்கள் என்று.

மோடி அப்படி ஒரு விஷயத்தைப் பரிந்துரைக்கவே மாட்டார். இது சங்கடமான தவறு. ட்ரம்புக்காக இந்தியத் தூதரிடம் நான் மன்னிப்புக் கோரினேன்” என்றார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காரணம் இந்தியா, காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் மூன்றாவது நபரின் தலையீட்டை ஆதரித்ததில்லை.