Published:Updated:

`மிகவும் மோசமாக நடத்தப்படுகிறேன்’- பிறந்த நகரத்தைவிட்டு நிரந்தரமாக வெளியேறும் ட்ரம்ப் வேதனை

இனி நிரந்தரமாக ஃபுளோரிடாவுக்குச் செல்லவுள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்தான் அதிபர் ட்ரம்ப்பின் சொந்த நகரம். 73 வயதான ட்ரம்ப் பிறந்து, வளர்ந்தது எல்லாமே அங்குதான். நியூயார்க் மிட் டவுன், ஐந்தாம் அவென்யூவில் ஒரு வானளாவிய கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் மிகப் பெரும் கனவாக இருந்துள்ளது. முன்னர் அந்த இடத்தில் போன்விட் டெல்லர் என்ற நிறுவனத்தின் ஹோட்டல் இருந்துள்ளது. அந்த இடத்தை வாங்க நினைத்த ட்ரம்ப், டெல்லர் நிறுவன உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ட்ரம்ப் டவர்
ட்ரம்ப் டவர்

ட்ரம்ப்பின் பேச்சைக் கேட்டு உரிமையாளர் பயங்கரமாகச் சிரித்துள்ளார். இதை ட்ரம்ப்பே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். முதலில் விளையாட்டாகத்தான் அந்த இடத்தை ட்ரம்ப் கேட்கிறார் என நினைத்துள்ளார் டெல்லர் நிறுவன உரிமையாளர். ஆனால், ஆண்டுக்கு இரண்டு முறை போன் செய்து அந்த இடம் தொடர்பாகக் கேட்டுள்ளார் ட்ரம்ப். ஒரு கட்டத்தில் அதாவது 1979-ம் ஆண்டு டெல்லர் நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், அந்நிறுவனத்தில் சில சொத்துகளை விற்க நினைத்தனர். இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ட்ரம்ப், உடனடியாக அந்த இடத்தை வாங்கினார்.

அதே ஆண்டு அங்கு தன் கனவு கட்டடத்தைக் கட்டும் பணிகளைத் தொடங்கி, 1983-ம் ஆண்டு முடித்தார். சுமார் 56 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டடத்துக்கு `ட்ரம்ப் டவர்’ என பெயர் வைக்கப்பட்டது. அங்கு வணிக வளாகம், சில்லறை வியாபாரம் குடியிருப்புகள் போன்றவை உள்ளன. ட்ரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்வதற்கு முன்னதாக, அவரும் அவரது குடும்பத்தினர் பலரும் ட்ரம்ப் டவரிலேயே வசித்ததாக கூறப்படுகிறது. அவர் அதிபரான பிறகு தற்போது வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இருந்தும் தன் பெரும்பாலான நாள்களை நியூயார்க்கிலேயே கழித்துவந்துள்ளார் ட்ரம்ப். இந்த நிலையில்தான் நியூயார்க்கை விட்டு வெளியேறி நிரந்தரமாக ஃபுளோரிடாவுக்குச் செல்லவுள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``1600 பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள வெள்ளை மாளிகை நான் மிகவும் நேசித்த இடம். இன்னும் ஐந்து ஆண்டுகள் இங்கிருந்து அமெரிக்காவை இன்னும் வளர்ச்சியடையச் செய்வேன் என நம்புகிறேன்.

ட்ரம்ப் மீது பதவிநீக்க விசாரணை... பறிபோகுமா அதிபர் பதவி?

ஆனால், தற்போது நானும் என் குடும்பத்தினரும் ஃபுளோரிடாவில் உள்ள எங்கள் சொந்த பீச் ஹவுஸுக்கு நிரந்தரமாகச் செல்ல உள்ளோம். நான் நியூயார்க்கையும், அங்குள்ள மக்களையும் அதிகம் நேசிக்கிறேன். தொடர்ந்து நேசிப்பேன். ஒவ்வோர் ஆண்டும் மாகாண மற்றும் உள்ளூர் வரிகள் எனப் பல மில்லியன் டாலர்களை நான் செலுத்தி வருகிறேன். இருந்தும் இங்குள்ள நகர மற்றும் மாகாண அரசியல் தலைவர்களால் நான் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறேன்.

ட்வீட்
ட்வீட்

இந்த முடிவை எடுப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் இதுதான் அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும். ஒரு ஜனாதிபதியாக நியூயார்க்கிற்கும், அங்குள்ள மக்களுக்கும் எப்போதும் உதவ நான் தயாராக உள்ளேன். நியூயார்க்கிற்கு எப்போதும் என் இதயத்தில் தனி இடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.