Published:Updated:

கொரோனா: `போராட்டங்களும் மெக்ஸிகோவும்தான் காரணம்’ - வைரஸ் பரவலுக்கு ட்ரம்ப் புது விளக்கம்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

அமெரிக்காவில் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரித்ததுக்கு அங்கு நடந்த போராட்டங்களும் அண்டை நாடான மெக்ஸிகோவுமே காரணம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 1.5 கோடியைத் தாண்டிவிட்டது கொரோனா பாதிப்பு இதில் மிக அதிகமாக அமெரிக்காதான் பாதிக்கப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஜாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி நேற்றுவரை அங்கு 4 மில்லியனுக்கும் அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன அதேபோல் வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளும் 1,47,000-க்கும் அதிகமாகியுள்ளன. இதனால் மொத்த அமெரிக்காவும் ஸ்தம்பித்துப்போயுள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அங்கு வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை.

கொரோனா
கொரோனா

அமெரிக்காவில் இவ்வளவு அதிகமாக வைரஸ் பரவியதற்கு அங்கு நடந்த `பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ போராட்டம்தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அமெரிக்காவில் நோய்த்தொற்றுக்கள் அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இங்கு நடந்த `பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்ற நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகுதான் இளம் அமெரிக்கர்களிடையே பாசிட்டிவ் கேஸ்கள் உயரத்தொடங்கின. விடுமுறை நாள்களில் போராட்டக்காரர்களின் கூட்டம் அதிகரித்தது.

அதேபோல் இளைஞர்கள் பார்கள், கடற்கரைகள் மற்றும் பல இடங்களில் நெருக்கமாகச் சுற்றி வருகின்றனர். இவர்கள் பல மாகாணங்களுக்கும் பயணித்ததால் அனைத்து இடங்களில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக அதிகரித்தது. அதேபோல் அமெரிக்கா, மெக்ஸிகோவுடன் 2,000 மைல் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது அனைவருக்கும் தெரியும். துரதிர்ஷ்டவசமாக மெக்ஸிகோவில் வழக்குகள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன அதில் மெக்ஸிகோவில் பரவல் அதிகரித்ததும் ஒரு காரணம்” எனப் பேசியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கடந்த மே 25-ம் தேதி மினிபோலிஸில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற அமெரிக்க ஆப்ரிக்கர் போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்தது. பின்னர் அந்த போலீஸ்காரர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகே போராட்டம் சற்று அமைதியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு