Published:Updated:

`அங்கீகரிக்கப்படாத உயிரி ஆயுதம்?’ - அமெரிக்கர்களைப் பீதியடையவைத்த மர்ம விதை பார்சல்

மர்ம விதைகள்
மர்ம விதைகள்

அமெரிக்காவில் பல மாகாண மக்களுக்கும் தபாலில் மர்ம விதைகள் வருவதாகப் பீதி எழுந்துள்ளது. அதை மக்கள் பயன்படுத்த வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,34,985 ஆகவும் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,55,285 ஆகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் கடுமையான நிலைக்கு சீனாதான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோசமான பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு விதை பார்சல் மொத்த அமெரிக்காவையும் பீதியடைய வைத்துள்ளது.

மர்ம விதைகள்
மர்ம விதைகள்

அமெரிக்காவின் சில மாகாணங்களில் வாழும் மக்களுக்குச் சந்தேகத்துக்குரிய வகையில் விதை பார்சல் ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் நடந்த விசாரணையில் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணத்துக்கும் இதே போன்ற பார்சல் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது சீனாவிலிருந்து வந்ததாக இருக்கலாம். எனவே, மக்கள் யாரும் அவசரப்பட்டு அதை நிலத்தில் விதைக்க வேண்டாம், அவை விவசாயத்தை அழிக்கும் அங்கீகரிக்கப்படாத உயிரி ஆயுதமாகக் கூட இருக்கலாம் என்று அமெரிக்காவின் வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

`விண்வெளியிலும் விடாத சண்டை!’ - ஒரேநேரத்தில் விண்கலத்தை அனுப்பும் அமெரிக்கா - சீனா

இதே போன்ற பார்சல்கள் தங்கள் நாட்டு மக்களுக்கும் வந்துள்ளதாக கனடா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் விதை பார்சல்களை மக்கள் நடவு செய்ய வேண்டாம். அவை ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகளாக இருக்கலாம் அல்லது நம் வேளாணுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்படாதவையாக இருக்கலாம். எனவே, அது போன்ற பார்சல்கள் கிடைத்தால் உடனடியாக மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வேளாண்துறை அதிகாரிகள் மக்களுக்குக் கிடைத்த அனைத்து வகையான விதைகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த விதைகள் தொடர்பான சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம விதைகள்
மர்ம விதைகள்

அமெரிக்காவின் குற்றச்சாட்டைச் சீனா முழுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கருத்தில், “அமெரிக்காவில் கிடைத்துள்ள மர்ம விதை பார்சல்கள் எங்கள் நாட்டினுடையது இல்லை. அவை போலியானவை. விதைகளை அனுப்புவது, பெறுவது ஆகிய விதிமுறைகள் எங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்துக்குரிய பார்சல்களை எங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த பார்சல் பற்றி எங்கள் நாட்டில் விசாரிக்கப்படும்” என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்:`அமெரிக்கா கேங்க்ஸ்டர்களைப் போல அச்சுறுத்துகிறது!’ - கொதிக்கும் சீனா
அடுத்த கட்டுரைக்கு