Published:Updated:

`கண்ணுக்குத் தெரியாத எதிரியை இணைந்து வெல்வோம்!’ - இந்தியாவுக்கு வென்டிலேட்டர் அனுப்பும் அமெரிக்கா

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ வென்டிலேட்டர்கள் அனுப்பப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய உயிரியைக் கண்டு மொத்த மனித குலமும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது. வைரஸ் தொற்று இருப்பவர்கள் வைரஸ் தொற்று இல்லாதவர்கள் என அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் குடைச்சல் கொடுத்து வருகிறது இந்தக் கொடூர கொரோனா. இதில் அமெரிக்காதான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 88,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி வருகிறது அமெரிக்கா.

நியூயார்க்
நியூயார்க்

இந்தியாவிலும் இதே நிலைதான் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,784 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,753-ஆகவும் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லமுடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். பலருக்கு அடுத்த வேளை உணவு கூட இல்லாத நிலையே உள்ளது. இது ஒருபுறம் என்றால் கொரோனா போராட்டத்தில் முன்னணியில் நின்று வேலை செய்யும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான கவசங்களுக்கும் நோயாளிகளுக்கும் தேவையான வென்டிலேட்டரிலும் பற்றாக்குறை நிலவுகிறது.

`எங்களால் முழு உறவையும் துண்டிக்க முடியும்’ - சீனாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்

இந்நிலையில் அமெரிக்கா ஆபத்தான நிலையிலிருந்தபோது அவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கொடுத்து உதவிய இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் கொடுத்து உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், “இந்திய நண்பர்களுக்காக அமெரிக்கா வென்டிலேட்டர் வழங்கவுள்ளது என்ற அறிவிப்பில் பெருமை கொள்கிறேன். இந்தத் தொற்று நோய் காலகட்டத்தில் இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் நாங்கள் துணை நிற்போம். அதேபோல் அந்நாட்டின் தடுப்பூசி வளர்ச்சிக்கும் நாங்கள் ஒத்துழைக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நாம் ஒன்றாக இணைந்து வெல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா
இந்தியா
AP

அமெரிக்காவில் கடுமையான பாதிப்புகள் இருந்தாலும் தங்களைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. அந்த வகையில்தான் இந்தியாவுக்கும் வென்டிலேட்டர்கள் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “ நான் சமீபத்தில்தான் இந்தியாவுக்குச் சென்று திரும்பினேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் இந்தியாவுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். அமெரிக்காவில் பல இந்திய மக்கள் உள்ளனர். அவர்களில் சிறந்த விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

முறுக்கிய முதல்வர்கள்... முடங்கிய நிதித்துறை - 20 லட்சம் கோடி மோடி மேஜிக் பலிக்குமா?
அடுத்த கட்டுரைக்கு