Published:Updated:

` காதல் கடிதத்தைத்தான் எரிக்க வந்தார்...ஆனால்?!' - காதலனை மறக்க இளம்பெண் செய்த விபரீதம்

அமெரிக்காவில் தன் காதலரை மறக்க நினைத்து, அவர் கொடுத்த கடிதங்களை எரிக்க நினைத்த இளம்பெண்ணின் செயலால் ஏற்பட்ட விபரீதம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Letter fire
Letter fire

காதலியை மறக்க மது அருந்துவது, தனியாக ஊர் சுற்றுவது, தனிமையில் இருப்பது போன்ற பல்வேறு விஷயங்களை ஆண்கள் செய்வார்கள் என நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுவே, பெண்கள் தங்கள் காதலர்களை மறக்க சினிமா பார்ப்பது, பாடல் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

women
women

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தன் காதலரை மறக்க தன் குடியிருப்பையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா (Nebraska) மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது அரியுனா சான்டல் லில்லார்ட் (Ariauna Chantell Lillard) என்ற பெண் தன் முன்னாள் காதலரை மறக்க அவர் கொடுத்த காதல் கடிதத்தைத் தீயில் எரிக்க முடிவு செய்தார்.

இதற்காக, தன் படுக்கை அறைக்குச் சென்று காதலர் கொடுத்த சில கடிதங்களை மட்டும் கீழே வைத்துக் கொளுத்திவிட்டு வேறு அறைக்குத் தூங்கச் சென்றுவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரது படுக்கை அறையிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அரியுனா, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

Fire
Fire

இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், `` அந்தப் பெண் சில கடிதங்களை மட்டுமே எரித்துவிட்டு மீதமுள்ள கடிதத்தை அருகிலிருந்த கம்பளியின் மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கடிதங்கள் எரிந்து அருகிலிருந்த பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனால், அறை முழுவதும் தீ பரவி அங்கிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்தத் தீ விபத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மொத்தமாக 4,000 டாலர் (இந்திய மதிப்பில் 2,84,000 ரூபாய்) மதிப்புள்ள பொருள்கள் எரிந்துள்ளன. கம்பளிக்கு அருகில் தீ பற்றவைத்ததால்தான் இப்படி நேர்ந்துள்ளது. நீண்ட நேரமாக நெருப்பு எரிந்ததும் அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.