Published:Updated:

``மாமல்லபுரம் விசிட், வத்தக்குழம்பு, பாசிட்டிவிட்டி..!” - கமலா ஹாரிஸின் பர்சனல் பகிரும் சித்தி

Kamala Harris
Kamala Harris ( AP Photo / Carolyn Kaster )

புதிய அதிபரைத் தேர்வு செய்யும் முனைப்புக்கு இணையாக, துணை அதிபர் தேர்தலும் இங்கே கவனத்தைப் பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் நடைபெறும் முக்கியமான நிகழ்வு எதுவானாலும், அது உலகம் முழுக்கத் தலைப்புச் செய்தியாகும். அந்த நாட்டை ஆட்டம்காணச் செய்திருக்கும் கொரோனா பாதிப்புக்கு இடையே, புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பிரதமர்தான் நாட்டின் நிர்வாகத் தலைவராக இருப்பார். ஆனால், அமெரிக்காவில் நடைபெறும் பொதுத் தேர்தல் நம் தேர்தல் முறையுடன் மாறுபட்டது.

அதில் முக்கியமானது, அதிபரே அந்த நாட்டின் நிர்வாகத் தலைவர். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே! அமெரிக்காவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தான், அமெரிக்காவில் நடைபெறும் பொதுத்தேர்தல் உலகம் முழுக்கவே முக்கியத்துவம் பெறுகிறது.

புதிய அதிபரைத் தேர்வு செய்யும் முனைப்புக்கு இணையாக, துணை அதிபர் தேர்தலும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம், இந்திய வம்சாவளியும் ஆப்பிரிக்க அமெரிக்கர் இனத்தைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்யக் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில், கமலா உட்பட 17 பேர் களத்தில் இருந்தனர். அதில் பலரும் பெரும் செல்வந்தர்கள். ``நான் பில்லியனர் இல்லை. எனவே, போட்டியிலிருந்து விலகுகிறேன்" என்றார் கமலா.

Kamala Harris
Kamala Harris
AP Photo / Carolyn Kaster
இந்நிலையில், அதே ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் கமலா. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிரணியில் கமலா களம் காண்கிறார். அமெரிக்க வரலாற்றில் அதிபராகவும் துணை அதிபராகவும் இதுவரை பெண் எவரும் தேர்வு செய்யப்பட்டதில்லை. எனவே, துணை அதிபர் தேர்தலில் கமலா வெற்றி பெற்றால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக மாறும்.

கலிபோர்னியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட செனட் சபை உறுப்பினராக இருக்கும் கமலா, அமெரிக்கர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அதற்கு அவரின் துணிச்சலான குணம் முக்கியக் காரணம். ஆப்பிரிக்க அமெரிக்கர் இனத்தவர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் எழுப்பிவருபவர், இன வேறுபாடு, காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வருகிறார். இதனால் இந்திய வம்சாவளி மக்களிடம் அவருக்கு அதிக ஆதரவு உண்டு.

Kamala Harris
Kamala Harris
AP Photo / Carolyn Kaster

கமலா ஹாரிஸின் தந்தை டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் ஷியாமளாவின் பூர்வீகம் சென்னை. அவரின் உறவினர்கள் பலரும் தற்போதுவரை சென்னையில்தான் வசித்து வருகின்றனர். துணை அதிபர் வேட்பாளராக கமலா அறிவிக்கப்பட்டதும், சென்னையிலுள்ள அவரின் குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கமலாவின் சித்தியும் மருத்துவருமான சரளா கோபாலன், சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். கமலா ஹாரிஸின் பர்சனல் பக்கங்கள் குறித்துப் பகிரும் சரளாவின் முகத்தில் மகிழ்ச்சிப் பூரிப்பு.

``என் உடன் பிறந்த அக்கா ஷியாமளாதான் கமலா ஹாரிஸின் அம்மா. அக்கா 18 வயசுல மேற்படிப்புக்காக அமெரிக்கா போனாங்க. பிறகு, அங்கேயே கல்யாணம் செய்துகிட்டு, அமெரிக்காவிலேயே நிரந்தரமா தங்கிட்டாங்க. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அக்கா, அதே துறையில் ஆராய்ச்சியாளரா வேலை செய்தாங்க. அக்காவுக்கு கமலா, மாயானு ரெண்டு பெண் பிள்ளைகள். கமலா பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான். நடுவுல கொஞ்ச காலம் மட்டும் கனடாவில் கமலா வேலை செஞ்சார். பிறகு இப்பவரை அமெரிக்காவில்தான் வசிக்கிறார்.

ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ்
ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ்

கமலாவும் அவளின் சகோதரியும் வழக்கறிஞர்கள். அவங்கவங்க துறையில் பிஸியா வேலை செய்யறதால, அவங்க எல்லோருமே எப்பவாவதுதான் சென்னை வருவாங்க. 5 வருஷத்துக்கு ஒருமுறை அவங்க நம்மூர் வந்தாலே ஆச்சர்யம்தான். ஆனா, வந்தா சில நாள்கள் தங்குவாங்க. சென்னையின் முக்கியமான இடங்களையும் சொந்த பந்தங்களையும் பார்த்து சந்தோஷப்படுவாங்க. நானும் நேரம் கிடைக்கும்போது அமெரிக்கா போய் அவங்க வீட்டுல தங்குவேன்” என்பவர், கமலா ஹாரிஸுக்குப் பிடித்த சில விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

``1999-ல் எங்க அப்பாவுக்கு சதாபிஷேகம் நடந்துச்சு. அப்போ என்னோட அக்கா தன்னோட குடும்பத்துடன் சென்னை வந்து தங்கின நாள்கள் மறக்க முடியாதவை. அப்போ கமலா எங்க குடும்ப வேலைகளை ஆர்வமுடன் செய்தது, நம்ம பாரம்பர்ய விஷயங்களைக் கத்துக்கிட்டதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையா நினைவிருக்கு. கமலா சென்னை வந்தா எல்லோரும் ஒண்ணா மாமல்லபுரம் போவோம். கமலாவுக்கு நம்மூர் உணவு வகைகள் பிடிக்கும். அதிலும், வத்தக்குழம்பு, ரசம்தான் அவளோட ஃபேவரைட் டிஷ்.

டாக்டர் சரளா கோபாலன்
டாக்டர் சரளா கோபாலன்

அக்காவுக்குத் தமிழ் தெரியும். அவ்வப்போது மகள்களுக்கும் தமிழ் சொல்லிக்கொடுத்தார். ஆனா, தொடர்ந்து பேசிப் பழகாததால கமலாவுக்குத் தமிழ் சரளமா தெரியாது. எங்களோடு பெரும்பாலும் இங்கிலீஷ்லதான் பேசுவார். கமலாவுக்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம். தன்னைச் சுத்தி பாசிட்டிவ்வான சூழல் இருப்பதையே விருப்புவார்.

தன்னோட வேலை விஷயமா கலிபோர்னியா, வாஷிங்டன்னு ரெண்டு இடங்கள்லயும் மாறிமாறி கமலா வசிக்கிறார். சின்ன வயசுல இருந்தே மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுவார். அதனாலதான் அரசியல் களத்துக்கு வந்தார். எனக்கு அரசியல் பத்தி பெரிசா எதுவும் தெரியாது. அதனால அதைப் பத்தி அவர்கிட்ட பேச மாட்டேன்” என்ற சரளா, நிறைவாக...

Kamala Harris
Kamala Harris
AP Photo / Carolyn Kaster

``கமலா ஹாரிஸ் இப்ப செனட் சபை உறுப்பினரா இருக்கார். மக்களோடு நல்ல பரிச்சயம் உண்டு. தொடர்ந்து அங்க எல்லா மீடியாவுலயும் அவளைப் பத்தின செய்திகள் அடிக்கடி வரும். அடுத்த வருஷத் தொடக்கத்துல அமெரிக்காவுல தேர்தல் நடக்கப்போகுது. அதில் கமலா துணை அதிபருக்கான வேட்பாளரா அறிவிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டேன். சந்தோஷமா இருந்துச்சு. என் அக்காவின் நல்ல வளர்ப்புமுறைதான் கமலாவின் வளர்ச்சிக்குக் காரணம்” என்றவர், நம்மிடம் விடைபெற்றுப் பணிச் சூழலில் பிஸியானார்!

அடுத்த கட்டுரைக்கு