Published:Updated:

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட இடத்தில் அடிக்கல்! - போராட்டத்தை முடித்துவைத்த துணைவேந்தர்

துணைவேந்தர்
துணைவேந்தர்

யாழ்ப்பாணத்திலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை அரசால் இடித்துத் தள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை மீண்டும் அங்கே அமைக்க, இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகள் மீது இலங்கை ராணுவம் கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதத்தில் இறுதிக்கட்டத் தாக்குதல்களை நடத்தியது. இதில் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்தப் போரின்போது இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுடன், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களும் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இந்த இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது.

நினைவிடம்
நினைவிடம்

இந்தநிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 8-ம் தேதி இரவோடு இரவாக இடித்து அழித்தது. இதை அறிந்த மாணவர்கள், தமிழர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் முன் திரண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இலங்கை போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் துணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவிடம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து அன்று இரவு முதல் மாணவர்கள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இலங்கையிலுள்ள தமிழர் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், வைகோ, பழ.நெடுமாறன், சீமான் எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சென்னையிலுள்ள இலங்கைத் துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வைகோ, வேல்முருகன், வீரமணி ஆகியோர் அறிவித்தனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

இதற்கிடையே, `யாழ் பல்கலையில் இருந்த நினைவு ஸ்தூபி தகர்க்கப்பட்டதற்கும், இலங்கை அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். மேலும், அந்த நினைவு ஸ்தூபி சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டே பல்கலை நிர்வாகம், அதை அகற்றியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதேபோல் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முழு அடைப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

அமைச்சர் சரத் வீரசேகர
அமைச்சர் சரத் வீரசேகர

இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைச் சந்தித்த யாழ் பல்கலை துணைவேந்தர் ஶ்ரீ சற்குனராசா, `மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியைக் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுடன் செல்ல முயன்ற துணைவேந்தரை போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் தடுத்தனர். அவர்களை மீறிச் சென்ற துணைவேந்தர் நினைவு ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றபோது அங்கு வந்த போலீஸ் அதிகாரி அவரைத் தடுத்தார்.

`எதிரி நாட்டில்கூட இப்படி நடக்காது!’- முள்ளிவாய்க்கால் நினைவிடத் தகர்ப்பைக் கண்டிக்கும் தலைவர்கள்

அவரிடம் ``தற்போது எந்தக் கட்டுமானப் பணியும் செய்யப்போவதில்லை. ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் கல் நடப்போகிறோம். என் மாணவர்கள் மூன்று நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். அதை முடித்துவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். எனவே எம்மைத் தடுக்காதீர்கள்’’ என துணைவேந்தர் தெரிவித்தார்.

ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் கல் 
 வைக்கும் துணை வேந்தர்
ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் கல் வைக்கும் துணை வேந்தர்

அதன் பிறகு அவர்கள் அங்கு செல்ல போலீஸ் அதிகாரி அனுமதித்தார். இதையடுத்து மாணவர்களுடன் அங்கு சென்ற துணைவேந்தர் தேவாரம் பாடி, மலர் தூவி நினைவுக்கல்லை நாட்டினார். மாணவர்களும் மலர் தூவினர். அதன் பிறகு உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த துணை ந்தர் மாணவர்களுக்குக் கஞ்சி வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு