Published:Updated:

மியான்மர்: ராணுவப் புரட்சி... நாடாளுமன்ற சாலையில் ஆசிரியையின் உடற்பயிற்சி! - வைரல் வீடியோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடற்கல்வி ஆசிரியை கிங் நின் வாய்
உடற்கல்வி ஆசிரியை கிங் நின் வாய்

மியான்மரில் ராணுவப் புரட்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில், கிங் நின் வாய் என்ற உடற்கல்வி ஆசிரியை நாடாளுமன்ற வளாகத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட ராணுவப் புரட்சி காரணமாக, அந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு, மியான்மரில் அடுத்த ஒரு வருடத்துக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மியான்மரின் தலைநகரிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கிங் நின் வாய் (Khing Hnin Wai) என்ற 26 வயது இளம்பெண், உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். அதோடு, மியான்மர் கல்வி அமைச்சகத்திலும் பணியாற்றிவருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், கடந்த 11 மாதங்களாகத்தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாகப் பதிவு செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

இதே போன்று நேற்று முன்தினம் காலை கிங் நின் வாய் நாடாளுமன்ற வளாகத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். இந்தோனேசியாவின் `ஆம்புன் பேங் ஜாகோ’ என்ற பிரபல பாடலுக்கு நடனமாடிக்கொண்டே, தனது உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்தபோது தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் அவர் கவனிக்கவில்லை.

உடற்கல்வி ஆசிரியை கிங் நின் வாய்
உடற்கல்வி ஆசிரியை கிங் நின் வாய்
Facebook

உடற்பயிற்சி செய்யும் போது, அவருக்குப் பின்னால், காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஆயுதம் பொருத்திய வாகனங்கள் உட்பட பல்வேறு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து அந்த இடத்தைக் கடந்து செல்கின்றன. மியான்மரில் தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்றம் கூடவிருந்தது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நாடாளுமன்ற அவையைக் கூட விடாமல் ராணுவம் தடுத்து நிறுத்தி, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் தறுவாயில் இந்த வீடியோ பதியப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`முக்கியத் தலைவர்கள் கைது; ஓராண்டுக்கு அவசரநிலை!’ மியான்மரில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம்

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த கிங் நின் வாய், ``அந்தக் காலை மிகவும் இயல்பாகவே இருந்தது. நான் உடற்பயிற்சி செய்யும்போது ஹெலிகாப்டர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் வாகனங்கள் செல்வதை கவனித்தேன். அங்கிருந்த காவலர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கடந்து சென்றனர்" என்று தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதோடு அவர் முன்பு பதிவு செய்திருந்த உடற்பயிற்சி வீடியோக்களையும் சேர்த்துப் பகிர்ந்திருந்தார்.

கிங் நின் வாய் வீடியோவைப் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலானது. உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு