Published:Updated:

அதிவேக சேஸிங்; 3 டன் கஞ்சா! - கடலில் விழுந்த போலீஸாரைக் காப்பாற்றிய கடத்தல்காரர்கள் #ViralVideo

நடுக்கடலில் நடந்த இந்த அதிரடியான சேஸிங் காட்சிகள் மொத்தமும் ஹெலிகாப்டரில் இருந்த கேமராவில் பதிவானது.

சேஸிங்
சேஸிங்

ஒருவர் நல்லவராக இருக்கலாம். ஆனால், ஸ்பெயின் நாட்டில் போலீஸாரிடம் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அளவுக்கு நல்லவர்களாக இருக்க முடியுமா எனத் தெரியவில்லை.

சேஸிங்
சேஸிங்

ஸ்பெயின் நாட்டில் மலகா கடற்பகுதியில் அதிவேக படகு ஒன்றில் அதிக அளவிலான போதைப்பொருள்கள் கடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை போலீஸாருக்குத் தகவல் சொல்ல, அவர்களும் அதிவேக படகில் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

போதைப்பொருள் கடத்தும் படகில் 4 பேர் இருக்கின்றனர். அவர்களை விடாமல் துரத்துகிறார்கள் போலீஸார். நடுக்கடலில் நடந்த இந்த அதிரடியான சேஸிங் காட்சிகள் மொத்தமும் ஹெலிகாப்டரில் இருந்த கேமராவில் பதிவானது. இந்த நேரத்தில் கடத்தல்காரர்களின் படகை நெருங்கிய போலீஸாரின் படகு எதிர்பாராதவிதமாகக் கடத்தல்காரர்கள் பயணித்த படகின் மேல் மோதியது.

சேஸிங்
சேஸிங்

இதில் நிலைகுலைந்த மூன்று போலீஸாரும் படகில் இருந்து கடலில் விழுந்தனர். இந்த நேரத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம், கடத்தல்காரர்களிடம், படகை நிறுத்தும்படியும் கடலில் தத்தளிக்கும் போலீஸாருக்கு உதவும்படியும் சொன்னார்கள்.

இதைக்கேட்ட கடத்தல்காரர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடீரென படகைத் திருப்பிக் கடலில் தத்தளித்த போலீஸார்களைக் காப்பாற்றினர். அடுத்து நொடியே, காப்பாற்றப்பட்ட போலீஸ்காரர்கள், கடத்தல்காரர்களைக் கைதும் செய்தனர். அவர்களிடம் 80 பண்டல்களில் 3 டன் அளவுக்கு கஞ்சா இலையில் இருந்து எடுக்கும் ஒருவகைப் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

போலீஸாரைக் கடலில் விட்டுச் சென்றிருந்தால், அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையில் கடற்படை ஈடுபடும் என்பதை உணர்ந்து சரணடையும் முடிவில் போலீஸாரைக் காப்பாற்றும் முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கைதான நால்வரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.