Published:Updated:

கொரோனா:`100 நாள்களுக்குப் பின் பாசிட்டிவ்; உள்ளூர் பரவல்!’ - அச்சத்தில் வியட்நாம்

வியட்நாம்
வியட்நாம்

வியட்நாமில் 100 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் கடந்த ஆறு மாதங்களாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன, அதேபோல் தென் கொரியா,வியட்நாம் சீனா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டன.

கொரோனா
கொரோனா

வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டிலிருந்து வியட்நாம் சென்ற 417 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மே மாதமே அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். வியட்நாம் அரசின் தீவிர நடவடிக்கையால் அங்கு கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இதற்கிடையில் அந்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது புதிதாக ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாண்புமிகு விவசாயிகள் : வோ வான் தியெங் வியக்க வைக்கும் வியட்நாம் விவசாயி!

``வியட்நாமின் தனாங் நகரில் 57 வயதான ஒருவருக்குப் புதிதாக கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாச பிரச்னை காரணமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். எந்த வெளிநாட்டு பயணத் தொடர்பும் இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நபருடன் தொடர்பிலிருந்த 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அந்தச் சோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது” என வியட்நாம் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம்
வியட்நாம்

மேலும், வைரஸ் பாசிட்டிவ் உள்ள நபர் கடந்த ஒரு மாதமாகத் தனாங் நகரை விட்டு வெளியில் செல்லாமல் இருந்துள்ளார், அவருக்கு எப்படிப் பாதிப்பு வந்தது என்பது தொடர்பாக வியட்நாம் அரசு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. முதலில் அவருக்கு நிமோனியா இருந்ததாகவும் அதற்காகச் செய்யப்பட்ட வேறு ஒரு சோதனையின்போது கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் தற்போதுதான் விமானங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்த நேரத்தில் அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடுமுழுவதும் அறிகுறிகளுடன் இருந்த 11,800 பேர் 147 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

`தன்னார்வலர்களின் அசத்தல் முயற்சி; 24 மணி நேரமும் இலவசம்’ - ஏடிஎம் மூலம் அரிசி வழங்கும் வியட்நாம்
அடுத்த கட்டுரைக்கு