Published:Updated:

14 கி.மீ உயரத்துக்குப் புகையைக் கக்கிய பிலிப்பைன்ஸ் எரிமலை! ஊரைக் காலி செய்யும் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு ( The Philippine Star/Twitter )

டால் எரிமலை உருவத்தில் சிறியதுதான் என்றாலும் அது வெடித்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் சமீபகாலத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் நடந்த வெடிப்பு, ரஷ்யாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 35,000 அடி உயரத்துக்கு வெடித்துச் சிதறிய ஷிவெலுச் எரிமலை, நியூ கினியாவில் வெடித்த உலாவுன் என்று உலகளவில் எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள டால் என்ற எரிமலையும் வெடித்துள்ளது. கடந்த 12-ம் தேதி வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலையினால் ஏற்பட்ட சேதங்கள் மிகவும் அதிகம். அந்தச் சேதங்களோடு நிற்காமல், மேலும் சீற்றத்தோடு காணப்படும் அதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து, அந்த இடத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ்
The Philippine Star/Twitter

கண்டத்தகடுகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளதால், பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்கையாகவே எரிமலைகள் அதிகம். அதில் 50 எரிமலைகள் கொதிநிலையில் இருக்கின்றன. அதிலும் டால் எரிமலை இப்போது இயக்கத்திலுள்ளது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-01-2020) வெடித்தது.

மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த டால் எரிமலை, கடந்த இரண்டு நாள்களாக சாம்பலையும் நெருப்புக் குழம்பையும் 14 கிலோ மீட்டர் உயரத்துக்கு வேகமாகக் கக்கிக் கொண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு எரிமலை வல்லுநர்கள் அது இன்னும் வீரியத்துடன் எந்நேரமும் வெடிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். அந்த எரிமலை மேலும் தீவிரமாக வெடிக்கும் அபாயம் இருப்பதால், அதைச் சுற்றி 14 கிலோ மீட்டருக்குள் உள்ள 50 லட்சம் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே முப்பதாயிரம் கிராமவாசிகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் கடந்த சில நாள்களாகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

`1,292 சதுர அடி மனித தோல் தேவை!’ -எரிமலை வெடிப்பால் பாதித்தவர்களுக்காகப் போராடும் நியூசிலாந்து

டால் எரிமலை உருவத்தில் சிறியதுதான் என்றாலும் அது வெடித்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எரிமலையின் மேல்பகுதி மின்னல்களாலும் இடி முழக்கத்தாலும் சூழப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த எரிமலை இப்போதுள்ள நிலையில் வெடித்தால் அதன் பாதிப்புகள், மணிலா வரை இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அப்பகுதி தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படைந்து வருகிறது.

எரிமலையிலிருந்து வெளியான புகை படிந்துள்ள கிராமங்கள்
எரிமலையிலிருந்து வெளியான புகை படிந்துள்ள கிராமங்கள்
The Philippine Star/Twitter

இது `எரிமலை சுனாமி' க்கான அறிகுறி என்று அந்நாட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதிலிருந்து வெளிவரும் சாம்பலும் வாயுவும் மேலே செல்வதற்குப் பதிலாக, தூசிப் புயலாக நிலத்தை நோக்கி வருகின்றது. அந்தத் தூசிப் புயல் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் அடித்துச் செல்வதால் பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. எரிமலையில் இருந்து வரும் எரிமலைக் குழம்பைவிட, இந்தப் படிம வெளியேற்றம் மிகப்பெரிய அபாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெடிப்புச் சிதறல் அதிகமாகும் பட்சத்தில் மின்சாரம், வான்வழிப் பயணம் பெரியளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, மணிலாவில் வாழும் மக்கள் மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகி சிரமத்திற்குள்ளாவார்கள்.

பிலிப்பைன்ஸ் தீவுக்குக் கீழே, கண்டத்தகட்டின் ஒரு பகுதி கடலுக்கடியில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் புகையினால் சரியாகப் பார்க்க முடியாததும் போக்குவரத்து குறைபாடும் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறத் தடைகளாக உள்ளன.

மணிலா
மணிலா
The Philippine Star/Twitter

இருப்பிடத்தை விட்டு வெளியேறியவர்களில் பலர் தங்கள் குடும்ப உறவுகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறியமுடியாமல் அழுகையோடு உறவுகளைப் பிரிந்து தவித்து வருகின்றனர். சாம்பல் குழம்பு தெருக்களில் ஓடி வருவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகுந்த வீரியத்துடன் கொப்பளித்துக் கொண்டிருக்கும் எரிமலையைப் பீதியுடன் பார்த்து கலங்குகின்றனர்.

டால் எரிமலையில் இருந்து வெளியேறும் புகையினாலும் வெடிப்புச் சிதறல்களினாலும் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், விமானங்கள் டால் எரிமலைப் பகுதி வழித்தடத்தில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நெருப்புக் குழம்பு வெளியேறும் வேகத்தைப் பொறுத்துதான், வெடிப்பு அதிகமாகுமா, குறையுமா அல்லது உறையுமா என்று சொல்லமுடியும். துரதிர்ஷ்டவசமாக எரிமலை வெடிப்பு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை தென்படவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தூசிப் புயல்
தூசிப் புயல்
The Philippine Star/Twitter
1 கி.மீ உயர சாம்பல் புகை; 6,000 பேரை பலிகொண்ட வரலாறு..பிலிப்பைன்ஸை மீண்டும் பதறவைக்கும் டால் எரிமலை!

இந்த எரிமலை மேலும் வீரியத்தோடு வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதன் சேதங்கள் இன்னும் எந்தளவுக்கு இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் பேரைச் சூழலியல் அகதிகளாக மாற்றியுள்ள இதன் தாக்கத்தை ஆய்வு செய்ய எரிமலை ஆய்வாளர்கள் முழுநேர பணியில் ஈடுபட்டுள்ளனர். இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனிடம் இயைந்து போவதன் மூலம் தப்பிப் பிழைக்கலாம். இன்னும் கூடுதல் கவனத்துடன் நடந்துகொண்டால், முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு சேதங்களைத் தவிர்க்கலாம். அந்த முன்னெச்சரிக்கைதான் இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைக் காப்பாற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு