Published:Updated:

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது

இலங்கை
இலங்கை

இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்பிரேமதாச முன்னிலையில் உள்ளார்

இலங்கை அதிபர் தேர்தலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிபர் தேர்தலில் மொத்தம் 80 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சிக் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும், இலங்கை பொதுசன முன்னணி கட்சிக் கூட்டணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. சில கருத்துக்கணிப்புகள், கோத்தபய ராஜபக்‌ஷே முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்தாலும், களநிலவரங்களின்படி போட்டி கடுமையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இலங்கை வாக்குப்பதிவு
இலங்கை வாக்குப்பதிவு

ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவம், ராஜபக்‌ஷே எழுச்சி, ரணில் விவகாரம், போர்க் குற்ற விசாரணை எனக் கடந்த சில வருடங்களாக, இலங்கை அரசியல் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இயங்கிவந்தது. இது, சிறிசேனாவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இப்படியான சூழலில்தான், அதிபர் தேர்தலைச் சந்தித்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தேர்தலில் சுமார் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. நள்ளிரவுக்குள் அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

“இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது. வாக்குச் சாவடிகளுக்குள் மொபைல் போனில் படங்களை எடுத்த 8 பேர் உட்பட, தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டதாக, நாடு முழுவதும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.