Published:Updated:

`எங்களால் முழு உறவையும் துண்டிக்க முடியும்’ - சீனாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்

ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்

அமெரிக்கா நினைத்தால் சீனாவுடனான முழு உறவையும் துண்டிக்க முடியும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகமானோர் உள்ளனர். அங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்துக்கும் அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86,912 -ஆகவும் உள்ளது. அதே நேரம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா பொருளாதாரம் மிகப் பெரும் சரிவைக் கண்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

கொரோனாவால் அமெரிக்கா உட்பட மொத்த உலகமும் அனுபவிக்கும் அனைத்து வேதனைக்கும் சீனா மட்டுமே காரணம் எனப் பல நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து உருவான வைரஸ்தான் இன்று மனிதக் குலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அந்நாட்டின் மூத்த அதிகாரிகளும் சீனாவுக்கு எதிராக அடுக்கடுக்கான பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த ஃபாக்ஸ் பிசினஸ் (Fox Business) ஊடகப் பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் சீனாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். ``சீனாவுக்கு எதிராக நாங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நாங்கள் நினைத்தால் சீனாவுடன் முழு உறவையும் துண்டிக்க முடியும். எனக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது நான் அவருடன் பேச விரும்பவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

சீனா மீது மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளேன். கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை ஆய்வு செய்ய, வுகான் ஆய்வகத்துக்குச் செல்ல பல முறை சீனாவிடம் அனுமதி கேட்டோம். ஆனால், அவர்கள் உதவியை விரும்பவில்லை, எங்கள் கோரிக்கையை முற்றிலும் மறுத்துவிட்டனர். முதலில் கொரோனா சீனாவின் உள்நாட்டு விவகாரம், இதில் நாங்கள் தலையிடக் கூடாது அவர்களே அதைச் சரி செய்துகொள்வார்கள் என நினைத்தோம். ஆனால் சீனா செய்வதோ திறமையில்லாத செயல், முட்டாள் தனமானது, வேண்டுமென்றே செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை முதலில் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார் ட்ரம்ப்.

`சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கு ஆதாரம் உள்ளது!’ - ட்ரம்ப் அதிரடி
அடுத்த கட்டுரைக்கு