Published:Updated:

`அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் எங்களிடம் இல்லை’ - உலக சுகாதார அமைப்பு #Corona

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

கொரோனாவுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட எந்த சிகிச்சையும் எங்களிடம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,39,427 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,08,810 ஆகவும் உள்ளது. இந்த வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இந்த நவீன உலகத்தில் கடந்த 5 மாதங்களாக வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல் இந்த வைரஸுடன் இணைந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும், தனிமனித இடைவெளி, சுகாதாரம் கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே தற்போதைக்கு இந்த வைரஸின் பிடியிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துவிட்டது.

`ஹெச்.ஐ.வி போலதான் கொரோனாவும்; வாழப் பழகிக்கொள்வோம்’ - உலக சுகாதார அமைப்பு

இந்நிலையில் அதே உலக சுகாதார அமைப்பு, தங்களிடம் கொரோனாவுக்கு எதிராக எந்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லை எனக் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலத் திட்ட தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ், “ உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. நாம் இன்னும் அந்த ஆய்வு முடிகளுக்காகக் காத்திருக்கிறோம்.

ஏனெனில் அந்தப் பரிசோதனைகள் எவ்வாறு செயல்படுகின்றன, தொற்று நோயை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, கடுமையான நிலையில் இருப்பவரை எப்படிக் குணமாக்குகிறது, ஒருவரின் மரணத்தை எவ்வாறு தடுக்கிறது, அது எவ்வளவு பாதுகாப்பானது ஏதேனும் பின்விளைவுகளை ஏற்படுத்துமா என அனைத்தையும் மதிப்பீடு செய்யவேண்டியுள்ளது.

மரியா வான்
மரியா வான்

மேலும் WHO இப்போதே அதற்கான கூட்டுப் பரிசோதனை முயற்சியைத் தொடங்கிவிட்டது. சில மருந்துகள், சில சிகிச்சைகள் ஆகியவற்றை மையாகக்கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது. இது வைரஸை அழிக்குமா, பாதுகாப்பானதா, பயனுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்குப் பல கட்டங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக எந்த சிகிச்சை சிறப்பாக உள்ளது என்பதற்கு முழுமையான பதில் அளிக்க இன்னும் சில காலம் ஆகும். இப்போது வரை கொரோனாவுக்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் எங்களிடம் இல்லை. அதே நேரம் கொரோனாவுக்கான தீர்வுகள் தேடுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் ஆனால் அது சரியான செயல்முறையில் எந்தத் தீங்கும் ஏற்படாதவாறு இருக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

‘ஜனவரி 21ல் போன்கால்; ஒப்பந்தம் போட்ட ஜின்பிங்..?’-  WHO-வை பதறவைத்த ஜெர்மன் பத்திரிகைச் செய்தி
அடுத்த கட்டுரைக்கு