Published:Updated:

`சட்ட நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்!’ - அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

சீனா
சீனா

அமெரிக்கா தங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்தால் கடுமையாகப் பதிலடி தரப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனிதக் குலத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்துக்கு அதிகமாக உள்ளது. அமெரிக்க உட்பட உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் அனுபவித்து வரும் மோசமான சூழலுக்கு சீனா மட்டும்தான் காரணம். அவர்களால் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு இழப்பீடு பெறுவதற்காகச் சட்ட நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க கடுமையாகக் குற்றம்சாட்டி வருகிறது.

சீன நாடாளுமன்றம்
சீன நாடாளுமன்றம்

இந்த நிலையில், அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையை ஏற்க முடியாது. ஒருவேளை அவர்கள் ஏதேனும் செய்தால் தக்க பதிலடி தரப்படும் என சீனா எச்சரித்துள்ளது. நேற்று சீனாவில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு நாடாளுமன்றச் செய்தி தொடர்பாளர் ஹாங் யேசூயி (Zhang Yesui), ``அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் கோவிட் - 19 வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

`உங்கள் திறமையின்மையாலேயே இவ்வளவு மரணங்கள்!’ - தொடரும் அமெரிக்கா - சீனா வார்த்தைப் போர்

இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. இதற்காக எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா கூறியிருப்பதையும் ஏற்க முடியாது, இது சர்வதேச உறவுகளின் விதிமுறையை மீறியதாக இருக்கும். ஒருவேளை அமெரிக்கா எங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ, மசோதா கொண்டுவந்தாலோ அதைக் கடுமையாக எதிர்ப்போம். அதற்கு சீனா தரப்பிலிருந்து கடுமையான, தக்க பதிலடி தரப்படும். தங்கள் நாட்டில் பல சொந்தப் பிரச்னைகள் இருக்கும்போது அதில் கவனம் செலுத்தாமல் மற்ற நாடுகளின் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்க முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யாங் யேசூயி
யாங் யேசூயி

சொந்தப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பப் பிறரைக் குறைகூறும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது இல்லை. எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதையும் இழப்பீடு கோருவதையும் சற்றும் ஏற்க முடியாது. சீனாவில் கொரோனா தொற்று உறுதியானது முதல் பிற நாட்டுக்கும், உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படைத் தன்மையுடனேயே வழங்கி வந்தது. வைரஸ் தொடர்பாக நாங்கள் சரியான நேரத்தில் உலகுக்கு எச்சரிக்கை விடுத்தோம்” எனப் பேசியுள்ளார்.

உலக நாடுகளின் தொடர் அழுத்தம்... முதல்முறையாக விசாரணைக்கு ஒப்புக்கொண்ட சீனா! #Corona
அடுத்த கட்டுரைக்கு