Published:Updated:

`அட இப்படியெல்லாமா போராட்டம் பண்ணுவாங்க?' - உலகத்தின் கவனத்தை ஈர்த்த சில விநோதப் போராட்டங்கள்!

போராட்டம்
போராட்டம்

பெரு நாட்டு மக்கள், தங்கள் நாட்டுக் கொடியை பொது இடங்களில் துவைத்து வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித குல வரலாற்றின் மகத்தான மாற்றங்களை போராட்டங்களே சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு உரிமைகளும் கண்டுபிடிப்புகளும் பலவித போராட்டங்களின் வாயிலாகவே நமக்குக் கிடைத்திருக்கின்றன. உரிமைகளுக்கான அகிம்சை வழிப் போராட்டங்களைப் பொறுத்தவரை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கப் போராட்டம், பேரணி ஆகியவையே பொதுவெளியில் அதிக பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், இந்த வடிவங்களைத் தாண்டி, உலக அளவில் பல்வேறு போராட்டங்கள் கவன ஈர்ப்புக்காகப் பல வித்தியாச வடிவங்களைப் பெற்றிருக்கின்றன. சில சமயங்களில் அந்த வித்தியாசங்கள் ஒரு அடர்த்தியான குறியீடுகளைத் தாங்கியும் வெளிப்பட்டிருக்கின்றன. 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் மக்களின் வீதி போராட்டங்கள் நிறைந்த ஓர் ஆண்டாக முடிவடைந்திருக்கிறது.

மெகந்தி போராட்டம்
மெகந்தி போராட்டம்

இந்தியாவில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்றன. குறிப்பாகத் தமிழகத்தில் நடந்த கோலப் போராட்டம் அகிம்சையும் அழகியலும் கலந்த ஓர் உறுதியான அடையாளப் போராட்டமாக இருந்தது. அதேபோல 144 தடை இருந்த இடங்களில் இருவர் இருவராகச் சுழல் முறையில் போராடியது; போராட்டத்தைக் கலைக்கச் சொன்னபோது, மாணவர்கள் தங்கள் காலணிகளை மட்டும், போராட்டச் சின்னமாக ஒரே இடத்தில் கழட்டி விட்டுச் சென்றது என்று இந்திய அளவிலும் போராட்டங்களில் பல வித்தியாசங்கள் இருந்தன. அதனடிப்படையில் உலகம் முழுவதும் நடந்த சில வித்தியாசமான போராட்டங்களை பார்ப்போம்.

தேசியக் கொடியைத் துவைக்கும் போராட்டம்!

பெரு போராட்டம்
பெரு போராட்டம்
content.time.com

பெரு நாட்டு மக்கள், தங்கள் நாட்டின் தேசியக் கொடியை பொது இடங்களில் துவைத்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டு அதிபர் ஆல்பர்ட்டோ ஃபியூஜிமோரி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது; நாட்டில் ஊழல் அதிகரித்தது போன்ற பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறை படிந்த தேசியக் கொடியைத் துவைத்து 20 நாள்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தினர் அந்நாட்டு மக்கள். கொடியைப் போல நாட்டின் கறையாக இருக்கும் ஊழலும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் மையக் கரு.

மாணவர்கள் பாவாடை அணிந்து போராட்டம்!

துருக்கி போராட்டம்
துருக்கி போராட்டம்
bbc.co.uk

உலகளவில் பெண்கள் பாலியல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. `மீ டூ' இயக்கம்போல பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைத்து வெகுசில போராட்டங்கள் மட்டுமே பெரிதளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆயிரக்கணக்கில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டாலும், டெல்லி நிர்பயா, ஹைதராபாத் பிரியங்கா போன்ற ஒருசில இழப்புகளுக்கு மட்டும்தான் இந்தியாவில் போராட்டக் கொடி உயர்த்தப்பட்டது. அப்படித் துருக்கியில் பாலியல் வன்கொடுமையால் மரணமடைந்த ஒரு பெண்ணுக்காக அந்நாட்டு ஆண்கள் பாவாடை அணிந்து நடத்திய போராட்டம் பெரும் கவனம் ஈர்த்தது.

துருக்கி பல்கலைக்கழகத்தில் பயின்ற 20 வயது மாணவியை வன்கொடுமை செய்ய முயன்றபோது அவர் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு பயிலும் மாணவர்கள் உட்படப் பல ஆண்கள் அந்நாட்டுத் தலைநகரில் பெண்கள் அணியும் பாவாடையை (Skirt) அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ``ஒரு பெண் வன்கொடுமை செய்யப்படுவதற்கு அவள் உடுத்தும் ஆடையே காரணம் எனச் சொல்வது அபத்தவாதம். அறிவுள்ள ஆண்களாக நாங்கள் பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறோம்" என்பதே போராட்டக்காரர்கள் சொன்ன செய்தி.

`கிரேஸி ட்ரம்ப்... எதுவும் முடியப்போவதில்லை!’ - எச்சரிக்கை விடுக்கும் சுலைமானியின் மகள் ஜீனாப்

திருமண உடையில் போராட்டம்!

லெபனான் போராட்டம்
லெபனான் போராட்டம்
chinadaily.com

லெபனான் நாட்டில், ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த ஆண், அதே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது என்ற பிற்போக்கான சட்டத்தை நீக்கச் சொல்லி, அந்நாட்டுப் பெண்கள் வெண்ணிற திருமண உடையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன் கூடி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ரத்தக் கரையுடன் உள்ள பேன்டேஜ் போன்ற துணியையும் அவர்களில் கைகளில் கட்டியிருந்தனர். அரசின் கவனத்தைப் பெற அந்நாட்டுப் பெண்கள் நடத்திய இந்தப் போராட்ட வடிவம், சீனா உட்பட வேறு சில இடங்களிலும் பிற்காலங்களில் பின்பற்றப்பட்டது.

கட்சி அலுவலகத்தின் மீது டையாபர் எறிந்து போராட்டம்!

மெக்ஸிகோ போராட்டம்
மெக்ஸிகோ போராட்டம்
telesurenglish.net

மெக்ஸிகோ நாட்டில், ஆளுங்கட்சி தலைமையின் முறைகேடுகள், ஊழல்கள், லஞ்சம் ஆகியவற்றைக் கண்டித்து, ஆளுங்கட்சியின் தேசிய அலுவலகங்கள் மீது பயன்படுத்திய டையாபர்களை, வீசி எறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்நாட்டு மக்கள். எதிர்க்கட்சி அரசியல்வாதியான ருதேன், அடிக்கடி இப்படி ஒரு விநோதப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசிடம் பாதுகாப்பு கோரி முறையிட்டனர் ஆளும்கட்சி அலுவலகப் பொறுப்பாளர்கள்.

விவசாயிகள் நடத்திய வித்தியாசப் போராட்டம்!

பெல்ஜியம் போராட்டம்
பெல்ஜியம் போராட்டம்
telegraph.co.uk

தினசரி பயன்படுத்தும் பால், இறைச்சி போன்ற பொருள்களின் விலையைக் குறைத்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக போராட்டத்தில் குதித்தனர் பெல்ஜியம் நாட்டு விவசாயிகள். விலை குறைப்புக்குக் காரணமான ஐரோப்பிய ஒன்றிய அலுவலக கட்டடத்தின் முன்பு குவிந்த விவசாயிகள் அந்தக் கட்டடத்துக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், காவல் துறையினர் தடுக்கவே தாங்கள் வைத்திருந்த பாலை அந்தக் கட்டடத்தின் மீது பீய்ச்சி அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீங்கள் நிர்ணயித்த விலையில் பொருள்களைக் கொடுப்பதும், இப்படி கீழே ஊற்றுவதும் ஒன்றுதான் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் முழக்கமாக இருந்தது.

பானை உடைத்துப் போராட்டம்!

அர்ஜெண்டினா போராட்டம்
அர்ஜெண்டினா போராட்டம்
bbc.com

அர்ஜென்டினா மற்றும் வெனிசுலாவில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டைப் போக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அங்கிருந்த மக்கள் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். காலியான உணவு பாண்டங்களைத் தெருவில் உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், உணவு தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் அதிகமானோர் இடம் பெயருவதைச் சுட்டிக்காட்டி போராட்டத்தில் கோஷமிட்டனர்.

காலணிகளின் போராட்டம்!

பாரிஸ்  காலணி
பாரிஸ் காலணி
tasnimnews.com

போராட்டங்கள் நடப்பதும், அரசு அதைத் தடுக்க முற்படுவதும் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கதை. பாரிஸில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டனர். உலகம் முழுவதும் இருந்து சுமார் 20,000 பேர் பங்குகொள்வதாக இருந்த அந்தப் போராட்டத்துக்கு பாதுகாப்பு வசதிகளைக் காரணம் காட்டி அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய எங்கள் இருப்புத் தேவையில்லை செருப்பு போதும் என ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தங்கள் காலணிகளைப் போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்புக்கு அனுப்பி வைத்தனர். வாடிகன் நகரிலிருந்து, கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பின் காலணியும் இந்தப் போராட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போராட்டம் நடத்தக் குறிப்பிட்டிருந்த தேதியில் அவ்விடத்தில் சுமார் 22 ,000 ஜோடி செருப்புகள் போராட்டத்தின் அடையாளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

- தனிமொழி

அடுத்த கட்டுரைக்கு