Published:Updated:

அமெரிக்க ராணுவத்தை அலெர்ட் செய்த ஏரியா 51 போராட்டம்.. என்ன ஆனது?

`ஏரியா 51’-ல் வேற்றுக்கிரகவாசிகளை அடைத்துவைத்தோ, தொடர்புகொண்டோ, நவீன போர்த் தொழில்நுட்பங்களை அமெரிக்க ராணுவம் தயாரிப்பதாக உலகெங்கும் செய்தி பரவியது. இந்த ரகசிய மையம் செயல்படுவதை, 2013-ம் ஆண்டு வரையில் அமெரிக்க அரசாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஏரியா 51... இந்த வார்த்தையைக் கேட்டாலே, வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு ஒரு நொடி உடல் சிலிர்த்துவிடும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமானுஷ்ய இடமாகவே இருந்துவரும் ஏரியா 51 பகுதியை உடைத்தெறிந்து, வேற்றுக்கிரகவாசிகளை மீட்டெடுப்போம் என வேற்றுக்கிரகவாசிகள் ஆர்வலர்கள் ஒன்று கூடியது அமெரிக்க ராணுவத்தை அண்மையில் கதிகலங்க வைத்துவிட்டது.

ஏரியா 51 வரைபடம்
ஏரியா 51 வரைபடம்
கூகுள் மேப்

ஏரியா 51 என்றால் என்ன?

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், அமெரிக்காவின் நிவேடா மாகாணத்திலுள்ள பாலைவனப்பகுதி, அணுகுண்டுகள் ஆராய்ச்சி பகுதியாக இருந்துவந்தது. இப்பாலைவனப் பகுதியை ஏரியாவாரியாகப் பிரித்து சோதனையிட்டு வந்தனர். அப்படி ஒரு ஏரியாதான் `ஏரியா 51’. இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு, அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் தொடங்கியது. இருநாடுகளும் ஒருவரை ஒருவர் உளவுபார்த்தும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் முயன்றனர்.

மர்மங்களின் இருப்பிடமா Area 51...?! 'உண்மை தெரிஞ்சாகணும்' எனத் துடிக்கும் சதிக் கோட்பாட்டாளர்கள்

சோவியத் யூனியனின் அணு ஆராய்ச்சி மையங்களை வேவு பார்க்க அனுப்பப்பட்ட அமெரிக்காவின் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. குறைந்த உயரத்தில் அவ்விமானங்கள் பறப்பதால்தான், சோவியத் யூனியனின் ரேடாரில் சிக்கி வீழ்த்தப்படுவதாக அமெரிக்க ராணுவம் அறிக்கை அளிக்க, யாரும் கற்பனை செய்ய முடியாத உயரத்தில் பறக்கும் உளவு விமானங்களைத் தயாரிக்கச் சொல்லி, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் உத்தரவிட்டார். 1954-ல் தொடங்கப்பட்ட இந்த ரகசிய திட்டத்துக்கு `பிராஜெக்ட் ஆகுவாடோன்’ எனப் பெயரிடப்பட்டது.

 ‘யூ 2’ உளவு விமானம்
‘யூ 2’ உளவு விமானம்

இத்திட்டத்தைச் செயல்படுத்த, மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் தேவைப்பட்டது. நிவேடா பாலைவனத்தில் அணுகுண்டு சோதனை நிறுத்தப்பட்டதால், வெறுமையாக இருந்த ஏரியா 51 பகுதியை அமெரிக்க ராணுவம் தேர்ந்தெடுத்தது. மளமளவென அப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ரகசிய மையம் அமைக்கப்பட்டு, மிக உயரத்தில் பறக்கும் விமானங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் பயணிகள் விமானம் 10,000 முதல் 20,000 அடி உயரத்திலும், போர் விமானங்கள் 40,000 அடி உயரத்திலும்தான் பறந்தன. ஆனால், 1955-ல் அமெரிக்க ராணுவம் தயாரித்த `யூ 2’ உளவு விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தைத் தொட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற விமானங்களைப் பார்த்திராத பொதுமக்களும், விமானிகளும், வேற்றுக்கிரகவாசிகளின் விமானங்கள்தான் பறக்கிறது எனப் பேச ஆரம்பித்தனர். உண்மையில் பறப்பது அமெரிக்க ராணுவத்தின் `யூ 2’ உளவு விமானம்தான் என்பது வெகுசிலருக்கு மட்டும்தான் தெரியும். இவ்விமானங்கள் மூலமாக பழைய சோவியத் யூனியன் பிரதேசப் பகுதியில் சில ராணுவ நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டது.

சுமார் 20 லட்சம் பேர் வருகை தருவதாகக் கூறவும், அமெரிக்க ராணுவம் `ஹை-அலர்ட்’ ஆனது.
ஏரியா 51
ஏரியா 51

`ஏரியா 51’ ராணுவ மையம் கடும் பாதுகாப்புடன் இருந்ததால், சோவியத் யூனியனின் உளவு அமைப்பான `கே.ஜி.பி’யால் கூட அங்கு என்ன நடக்கிறது என்பதை பல ஆண்டுகளுக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை. பதிலுக்கு, ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிப்படைகளிடம் இருந்து எடுத்த நவீன தொழில்நுட்பங்களை தங்களது ராணுவத்தில் ரஷ்யர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இருநாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் உச்சத்தில் இருந்தது.

ஒத்துக் கொண்ட அமெரிக்கா

`ஏரியா 51’-ல் வேற்றுக்கிரகவாசிகளை அடைத்து வைத்தோ, தொடர்புகொண்டோ, நவீன போர் தொழில்நுட்பங்களை அமெரிக்க ராணுவம் தயாரிப்பதாக உலகெங்கும் செய்தி பரவியது. இந்த ரகசிய ராணுவ மையம் செயல்படுவதை, 2013-ம் ஆண்டு வரையில் அமெரிக்க அரசாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் மிக உயர்ந்த தொழில்நுட்ப விமானங்களான பி-2 ஸ்டீல்த் பாம்மர், ஏ-12, எஃப்-117 போர்விமானங்கள் ஏரியா 51-ல் தான் தயாரிக்கப்பட்டன. இன்று, மனிதர்களின் கண்களுக்கு புலப்படாத வண்ணம், மறையும் சக்திக்கொண்ட `அரோரா’ என்கிற ரகசிய விமானத்தை அமெரிக்கா இங்கு சோதனையிடுவதாக கூறப்படுகிறது. ஒளியின் வேகத்தில் பறக்கக்கூடிய இவ்விமானங்கள், அமெரிக்காவின் எதிர்கால விண்வெளிப் பயணத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அந்த ஆண்டு வெளியான அமெரிக்க உளவுத்துறையான `சி.ஐ.ஏ.’-வின் அறிக்கையில், ஏரியா 51 ராணுவ மையம் செயல்படுவதை ஒத்துக்கொண்டனர். எந்தக் குறியீடும் இல்லாமல், நடுவில் சிவப்பு பட்டை மட்டும் பூசப்பட்டிருக்கும் விமானத்தில், லாஸ் வேகாஸ் நகரிலிருந்து ஏரியா 51 பணியாளர்கள் தினமும் அழைத்து வரப்படுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பணியாளர்களை ஏற்றிச் செல்லும் ரகசிய விமானம்
பணியாளர்களை ஏற்றிச் செல்லும் ரகசிய விமானம்

`ஏரியா 51’ ராணுவ மையத்தில் என்ன ஆராய்ச்சி செய்யப்படுகிறது? எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? நடு பாலைவனப் பகுதியில், உலகிலேயே மிகப் பாதுகாப்பான ராணுவ மையம் எதற்காக செயல்படுகிறது என்கிற கேள்விகளுக்கு இன்று வரையில் பதில் இல்லை.

பூமியில் மோதி விபத்துக்குள்ளான வேற்றுக்கிரகவாசிகளின் விமானங்களை (பறக்கும் தட்டுகள்) மீட்டெடுத்து, `ரிவர்ஸ் இன்ஜினீயரிங்’ முறையில் புதிய விமானத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா `ஏரியா 51’-ல் செயல்படுத்துவதாக வேற்றுக்கிரகவாசிகள் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேற்றுக்கிரகவாசிகளை இங்கு அடைத்துவைத்து ஆராய்ச்சி செய்வதாகவும் கூறிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும், வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய உண்மையை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்பது சதிக் கோட்பாட்டாளர்களின் (Conspiracy Theorists) கோரிக்கையாக இருக்கிறது.

ஸ்டோர்ம் ஏரியா 51
ஸ்டோர்ம் ஏரியா 51

ஸ்டோர்ம் ஏரியா 51

இந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் ஃபேஸ்புக் பக்கத்தில் சதிக்கோட்பாட்டாளர்கள் சிலர் `ஏரியா 51-ஐ ஆக்கிரமிப்போம்; வேற்றுக்கிரகவாசிகளை மீட்டெடுப்போம்’ என்ற பொருளில் `Storm Area 51, They Can’t Stop All of Us,” எனப் பதிவிட, அச்செய்தி வைரலானது. சுமார் 20 லட்சம் பேர் வருகை தருவதாகக் கூறவும், அமெரிக்க ராணுவம் ‘அலர்ட்’ ஆனது. ஜப்பானின் கார்ட்டூன் கேரக்டரான `நொரோட்டா’, தன் இருகைகளையும் பின்னால் நீட்டிக்கொண்டு வேகமாக ஓடுவதுபோல, `நொரோட்டா ரன்’ ஓடி `ஏரியா 51’-ஐ தகர்த்தெறிவோம் என நெட்டிசன்கள் திட்டம் தீட்டினர். இதற்கான `ப்ளூ பிரின்ட்’ கூட `ஸ்டோர்ம் ஏரியா 51’ என்கிற பெயரில் தயாரானது.

`விளையாட்டாகக் கூட யாரும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைய வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என ராணுவத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையும் மீறி, செப்.19-ம் தேதி முதல் உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏரியா 51முன்பு குவியத் தொடங்கினர். மையத்தின் முன்பிருந்த வெற்றுவெளியில் தற்காலிகக் கூடாரம் அமைத்து பலரும் தங்கினர். வேற்றுக்கிரகவாசிகள்போல உடையணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் வடகொரிய கொடியை தூக்கிப்பிடித்து அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட பரபரப்பு எகிறியது.

ஸ்டோர்ம் ஏரியா 51
ஸ்டோர்ம் ஏரியா 51

மக்கள் அதிகமாக குவிந்ததால், ராணுவ மையத்தை நோக்கி செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டன. மையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லையைத் தாண்டினால் சுடப்படலாம் என்கிற அச்சத்தைப் போராட்டக்காரர்கள் மத்தியில் நிவேடா மாநில போலீஸார் பரப்பினர். மிகவும் சீரியஸாக ஆரம்பிக்கப்பட்ட `ஸ்டோர்ம் ஏரியா 51’ போராட்டம், எந்த வேற்றுக்கிரகவாசிகளையும் மீட்டெடுக்காமல், வெறும் `ஜாலி ட்ரிப்’பாக நான்கைந்து நாள்களில் முடிந்தது. முதல் இரண்டு நாள்கள் இருந்த பரபரப்பு, மெல்லக் குறைந்து தணிந்தது.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய `Storm Area 51' போராட்டம், யாருக்கு லாபமாக இருந்ததோ இல்லையோ, ராணுவ மையத்தைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்குக் கொண்டாட்டம்தான். விடுதிகள், உணவகங்கள் எல்லாம் நிரம்பி வழிந்ததால், வியாபாரிகள் காட்டில் பணமழை.

ஸ்டோர்ம் ஏரியா 51
ஸ்டோர்ம் ஏரியா 51

இப்போராட்டம் நீர்த்துப் போயிருந்தாலும், அதன் காரணங்கள் இன்னும் அப்படியேதான் நிற்கின்றன. `ஏரியா 51’-ல் அமெரிக்க ராணுவம் அப்படி என்னதான் ரகசிய ஆராய்ச்சி செய்கிறது...? உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு