Published:Updated:

கோல்டன் விசா என்றால் என்ன... அமீரகத்தில் யார் யாருக்கு இந்த விசா கிடைக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோல்டன் விசா பெற்ற ஜாய் அரக்கல் குடும்பத்துடன்
கோல்டன் விசா பெற்ற ஜாய் அரக்கல் குடும்பத்துடன்

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்றால், அது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டதுக்குச் சமம். இத்தகைய சாதனை படைத்த ஜாய் அரக்கல் தற்கொலை செய்தது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

சமீபத்தில், வளைகுடா நாட்டில் நடந்த ஒரு தற்கொலை கேரளாவையே அதிர வைத்தது. தற்கொலை செய்துகொண்டவர் சாதாரண ஆளில்லை. வளைகுடாவில் சிறந்த பிசினஸ்மேன் என்ற பெயரைப் பெற்ற ஜாய் அரக்கல். கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த இவர், 1997-ம் ஆண்டு, அமீரகத்துகுச் சென்று அக்கவுன்டன்ட்டாகப் பணியைத் தொடங்கினார். கடும் உழைப்பால் புத்திசாலித்தனத்தால் படிப்படியாக உயர்ந்த ஜாய் அரக்கல், பின்னர் கப்பல் வர்த்தகத்தில் ஈடுபட்டு டாலர்களைக் குவித்தார். பிற்காலத்தில், அமீரகத்தில் சொந்தக் கப்பல்கள் வாங்கி கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டதால், கேரளத்தில் இவரை 'கப்பல் ஜாய்' என்ற செல்லப் பெயர் கொண்டு அழைத்தார்கள்.

தொடர்ந்து, 'இனோவா குரூப் ஆஃப் கம்பெனிகள் என்ற பெயரில் ஜாய் அரக்கல், எண்ணெய் உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 2,00,000 கோடி. சாதாரண அக்கவுன்டன்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கி உச்சாணியைத் தொட்ட ஜான் அரக்கல், 2018-ம் ஆண்டு அமீரகத்திலேயே சிறந்த பிசினஸ்மேன் என்ற விருதைப் பெற்றார். தொடர்ந்து, அந்த நாட்டின் சிறந்த முதலீட்டாளருக்கு அளிக்கப்படும் 'கோல்டன் விசா'வும் அவருக்கு வழங்கப்பட்டது.

அமீரகம், இந்திய தேசியக் கொடிகள்
அமீரகம், இந்திய தேசியக் கொடிகள்

குட்டி நாடான அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான இத்தகைய கௌரவ விசாக்களை வழங்குகிறது. அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்களில் இத்தகையை கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியர் லூலு குருப் சேர்மன் எம்.ஏ.யூசஃப் அலி ஆவார். இவரின் சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தொழிலதிபர் யூசஃப் அலி போலவே கௌரவத்தைப் பெற்றவர்தான் ஜாய் அரக்கல். இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதுமானது. கிட்டத்தட்ட அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள். தங்கள் நாட்டு முதலீட்டாளர்களைக் கௌரவிக்கவும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும் தொழிலறிவு படைத்த மக்களை ஊக்கப்படுத்தவும் இத்தகைய நடைமுறையை அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய கௌரவத்தைப் பெற்ற ஜாய் அரக்கல் தற்கொலை செய்துகொண்டது இந்தியர்களை மட்டுமல்ல அமீரக அரசையும் அதிர வைத்துள்ளது. தன் தந்தையின் இறப்புக்கு உண்மையான காரணத்தை துபாய் போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜான் அரக்கல் மகன் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டிருந்த ஜாய் அரக்கல், தனது சொந்த ஊரான மானந்தவாடியில் டயலிசிஸ் மருத்துவமனை, பள்ளிகள், இலவச வீடுகளை இலவசமாகக் கட்டிக் கொடுத்துள்ளார். மானந்தவாடியில் இவர் கட்டியுள்ள 45,000 அடி பரப்பளவு கொண்ட வீடு கேரளாவிலேயே மிகப் பெரியது ஆகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இத்தகைய உயரத்தை எட்டிய ஜாய் அரக்கல், பல கேரள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். வளைகுடாவில் வசிக்கும் பல லட்சம் கேரள இளைஞர்கள் இவரைப் போலவே கோல்டன் விசாவைப் பெற வேண்டும் என்கிற லட்சியத்துடன் உழைத்து வருகிறார்கள். ஆனால், கௌரவமிக்க கோல்டன் விசாவைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

எம்.ஏ. யூசஃப் அலி
எம்.ஏ. யூசஃப் அலி

பொதுவாக, அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையில் வழங்கப்படுவதுதான் இந்தக் கோல்டன் விசா ஆகும். அதே வேளையில், முதலீட்டாளர்களின் வர்த்தக நிறுவனம் தோல்வியைச் சந்தித்தால் அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தால் விசாவின் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தைவிட்டு வேறு நாட்டில் 6 மாதங்களுக்கு மேல் வசித்தாலும் அவர்களின் விசா ரத்து செய்யப்படாது.

``கோயம்பேடு சந்தையா, கொரோனா மந்தையா?'' - பதறவைக்கும் வைரஸ்... பயப்படாத மக்கள்

2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், நல்ல திறமை படைத்த மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்க முடிவெடுக்கப்பட்டது. தங்கள் நாட்டைவிட்டு அறிவும் திறமையும் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசா வழங்கப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை. இனம், நாடு, மொழி எந்த வேறுபாடும் பார்க்கப்படாமல் திறமையாளர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். நல்ல நிர்வாகிகளாக அறியப்பட்டவர்கள் மாதம் 30,000 திர்ஹாமுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் அமீரகத்தின் இந்த விசாவைப் பெற விண்ணப்பிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோல்டன் விசாவை அறிமுகப்படுத்திய சமயத்தில் அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் கூறுகையில், ''டாக்டர்கள், இன்ஜீனியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்களில் திறமை மிக்கவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்பட விரும்புகிறோம். இதற்காகவே, இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்கள் பயணத்தில் அவர்கள் ஒரு பங்காளிகள். எங்கள் நாட்டைவிட்டு பிரிந்து செல்ல முடியாத மனநிலையை அவர்களிடத்தில் உருவாக்கவே இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அறிவும் திறமையுமுள்ளவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்திருந்தார்.

அமீரகத்தில் இந்தியா தொழிலாளர்களுடன் மோடி
அமீரகத்தில் இந்தியா தொழிலாளர்களுடன் மோடி

அமீரகத்தில் மொத்தம் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில், 400 பேருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குட்டி வளைகுடா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு