Published:Updated:

`தனிமையில் 3 நிர்வாகிகள்; டாஸ்க் ஃபோர்ஸையும் விடாத கொரோனா’ -வெள்ளை மாளிகையை இறுக்கும் வைரஸ் தொற்று

டாஸ்க் ஃபோர்ஸ்
டாஸ்க் ஃபோர்ஸ் ( wikipedia )

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருவருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து டாஸ்க் ஃபோர்ஸைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனாவால் மிகக் கடுமையாக மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருப்பது அமெரிக்காதான். அங்கு மட்டும் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு 80,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் வைரஸைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல மில்லியன் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

அதேபோல், நாட்டின் பொருளாதாரமும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படியேனும் அமெரிக்காவை முழுமையாக விடுவித்து, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் சிறப்பாகப் பிரசாரம் செய்யவேண்டும் என முயற்சி செய்கிறார் ட்ரம்ப். ஆனால் கொரோனாவோ, அவரது ஆசைக்குத் தொடர் முட்டுக்கட்டை போட்டு அமெரிக்காவை இன்னும் இறுக்கப் பிடித்துக்கொண்டுள்ளது. நாட்டுக்குள் நுழைந்து மக்களை நிலைகுலையச் செய்துவிட்டு தற்போது வெள்ளை மாளிகைக்குள்ளும் நுழைந்துவிட்டது கொரோனா வைரஸ்.

வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்பின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவருக்கு முதலில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்சின் பெண் செய்தி தொடர்பாளர் ஒருவருக்கு வைரஸ் உறுதியானதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் உட்பட வெள்ளை மாளிகையின் பல மூத்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அதில் அனைவருக்கும் வைரஸ் இல்லை என முடிவுகள் வந்தன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

தான் தினமும் வைரஸ் சோதனை செய்து கொள்வதாகவும் வெள்ளை மாளிகையின் பிற நிர்வாகிகளுக்கு வாரம் ஒருமுறை சோதனை செய்யப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு நடுவே வெள்ளை மாளிகையின் டாஸ்க் ஃபோர்ஸைச் (Task Force) சேர்ந்த 3 முக்கிய நிர்வாகிகள், தங்களுக்குக் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமடைந்தபோது, அதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டதுதான் இந்த டாஸ்க் ஃபோர்ஸ் என்னும் பணிக்குழு. கொரோனா பரவலைக் கண்காணிப்பது, தடுப்பது, வைரஸின் நிலை பற்றி ஆராய்வது, மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்வது, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது ஆகிய பணிகளை மேற்பார்வை செய்து நிர்வகிப்பதுதான் இந்தக் குழுவின் வேலை.

தனிமைப்படுத்திக்கொண்டவர்கள்
தனிமைப்படுத்திக்கொண்டவர்கள்
wikipedia

இந்தக் குழுவில் மிகவும் முக்கிய நிர்வாகிகளாக அறியப்பட்ட தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் கழக இயக்குநர் டாக்டர் ஃபாஸி, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் ஆகியோர்தான் தற்போது தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மூவரும் அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டிலிருந்து அரசாங்க வேலைகளைக் கவனிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

`ஜீன் தோற்றம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்; ஆய்வகத்தை மூடிய சீனா’ - வெள்ளை மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

மேலும் இவர்கள் அனைவரும் அதிபர் ட்ரம்புடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்தனர். அதனால் அதிபரும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தினமும் மருத்துவரிடம் தன் உடலைப் பரிசோதித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட குழுவிலேயே வைரஸ் பயம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு