Election bannerElection banner
Published:Updated:

ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்... யார் இந்த அரோரா அகங்க்ஷா?

அரோரா அகங்க்ஷா
அரோரா அகங்க்ஷா ( Twitter Image )

இதுவரை எந்த அரசியல் அனுபவமும் இல்லாத அரோரா கடந்த 4 ஆண்டுகள் ஐ.நாவில் ஆடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வெற்றி பெற்றால் ஐ.நா-வை வழிநடத்தும் இளம் பொதுச் செயலாளர் மட்டுமல்லாது, முதல் பெண் பொதுச் செயலாளராகவும் பெருமை பெறுவார்.

இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா அகங்க்ஷா, ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இதுவரை எந்த அரசியல் அனுபவமும் இல்லாத அரோரா கடந்த 4 ஆண்டுகள் ஐ.நா-வில் ஆடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வெற்றிபெற்றால் ஐ.நா-வை வழிநடத்தும் இளம் பொதுச் செயலாளர் மட்டுமல்லாது, முதல் பெண் பொதுச் செயலாளராகவும் பெருமை பெறுவார்.

தற்போது ஐ.நா-வின் பொதுச் செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ், அரோராவுக்கு எதிராக மீண்டும் போட்டியிடுகிறார்.

 ஐ.நா சபை
ஐ.நா சபை

71 வயதாகும் அன்டோனியா, தன் வயதில் பாதிகூட இல்லாத 34 வயதாகும் அரோராவுடன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அன்டோனியோ இதற்கு முன் அகதிகள் மறுவாழ்வு துறையில் முதன்மை ஆணையராக இருந்துள்ளார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்த அரோரா 6 வயதில் தன் அம்மாவின் வேலை காரணமாக சவுதி சென்றுள்ளார். பின் இந்தியா திரும்பி பள்ளிப் படிப்பை இங்கு முடித்தவர், பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து கனடாவில் வேலை செய்துவந்தவர் 2016-ம் ஆண்டு முதல் ஐ.நா-வில் பணிபுரிகிறார்.

பல நாடுகளில் வாழ்ந்துள்ள அரோரா தன்னையும் ஓர் அகதியாகவே கருதுகிறார். அகதிகளுக்கான சேவையை ஐ.நா சரிவர செய்யவில்லை எனக் கூறும் அரோரா, தான் வெற்றிபெற்றால் அகதிகளின் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா-வின் செயல்பாடுகள் மோசமானதாக உள்ளதாக விமர்சித்த அரோரா, ஐ.நா-வின் வருமானம் 56 பில்லியன் டாலர்கள் எனில், ஒரு டாலரில் 29 சென்ட் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

சில நாள்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய அரோராவின் கால்களில் பலத்த அடிபட்டது. எனினும், உள்ளுறுப்புகள் பாதிப்பின்றி முழுவதும் மீண்டார். அந்த விபத்தில் தான் உயிரிழந்திருந்தால் தன் வாழ்க்கை ஏதும் அற்றதாய் இருந்திருக்கும் என உணர்ந்த அவர், தான் வாழந்ததற்காக உலகில் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார்.

அரோரா அகங்க்ஷா
அரோரா அகங்க்ஷா
Twitter Image

தேர்தலில் தோல்வியுற்றால் என்ன செய்வீர்கள் என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, "அகதிகளுக்கு எப்போதும் பிளான் பி இருப்பதில்லை. அதேபோல், எனக்கும் பிளான் பி கிடையாது" எனத் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். அரோரா குறித்து அவர் தோழி பமீலா, ''அரோரா அச்சமற்றவள்" எனக் கூறியுள்ளார்.

ஐ.நா-வில் உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் அரோராவுக்கு ஆதரவு தந்தாலும், எந்த நாடும் வெளிப்படையாக அரோராவை ஏற்றுக்கொள்ளவில்லை. அக்டோபரில் நடைபெறும் தேர்தலில் அன்டோனியோதான் வெற்றிபெறுவார் என ஊடகங்கள் தெரிவித்தாலும், கடந்த ஓர் ஆண்டாக அரோரா தன் சேமிப்பிலிருக்கும் 30,000 டாலர்களை செலவு செய்து சமூக வலைதளத்திலும் இணையத்திலும் தன்னம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்திய வம்சாவளியும் கனடா குடிமகளுமான அரோரா அகங்க்ஷா ஐ.நா பொதுச் செயலாளர் ஆவாரா?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு