Election bannerElection banner
Published:Updated:

மார்வா: சூயஸ் கால்வாய் ட்ராஃபிக் ஜாமுக்கு இவர்தான் காரணமா..?! - உண்மை என்ன?

மார்வா
மார்வா ( Instagram )

``கப்பல்துறையில் சாதிக்க விரும்பும் அனைத்துப் பெண்களும், எதிர்மறையான கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் நேசிப்பதை அடையப் போராடுங்கள். இதுவே பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி” என நம்பிக்கையுடன் கூறுகிறார் மார்வா.

சில தினங்களுக்கு உலகின் முக்கியக் கப்பல் வழித்தடமான சூயஸ் கால்வாயில் `எவர் கிவன்’ என்ற ராட்சக் கப்பல் ஒன்று சிக்கிக்கொண்டு சர்வதேசப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அந்த ஒரு கப்பலால் பல கப்பல்கள் தேங்கி நின்று `ட்ராஃபிக் ஜாம்` ஆனதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சரக்குகளும் சிக்கிக்கொண்டன.

பின் ஒருவழியாக பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல் மீட்கப்பட்டுவிட்டது. சரி, அதுதான் மீட்கப்பட்டுவிட்டதே... தற்போது ஏன் செய்தியில் அடிபடுகிறது என நீங்கள் யோசிக்கலாம். இந்தச் செய்தி சூயஸ் கால்வாயைப் பற்றியோ அல்லது அதில் சிக்கிக்கொண்ட கப்பலைப் பற்றியோ அல்ல. ஆனால், அந்த சம்பவத்துக்குக் காரணம் என ஒரு பெண் குறித்துத் தவறாக வலம்கொண்டிருக்கும் செய்தி குறித்துத்தான்.

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல்
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல்
ap

யார் அந்தப் பெண்?

அவர் பெயர் மார்வா எல்ஸ்லேடார். அவர்தான் எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன். சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிக்கொண்ட சம்பவத்தின்போது மார்வா, பல மைல்களுக்கு அப்பால் மத்திய தரைக்கடலின் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் Aida IV என்ற கப்பலில் கேப்டனுக்கு அடுத்தபடியான அதிகாரம்கொண்ட `ஃபர்ஸ்ட் மேட் இன் கமாண்ட்` பொறுப்பில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்தக் கப்பல் எகிப்தின் கடற்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்குச் சொந்தமானது. செங்கடலிலுள்ள கலங்கரை விளக்கத்துக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும் கப்பல் அது. தன்னைப் பற்றி வலம்வந்த தவறான செய்தியைக் கண்டு, தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக மார்வா பிபிசி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கு தொடங்கியது இந்த போலிச் செய்தி?

மார்வா குறித்த அந்த போலிச் செய்தி அராப் நியூஸ் தளத்தில் வெளியான ஒரு செய்தியைப் போன்று பரப்பப்பட்டுள்ளது. அதில் அவர்தான் சூயஸ் கால்வாய் சம்பவத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த போலிச் செய்தியில் வெளியாகியுள்ள படம் அராப் நியூஸ் தளத்தில் மார்ச் 22-ம் தேதியன்று, எகிப்தின் முதல் பெண் கேப்டன் மார்வாவின் வெற்றிக் கதை குறித்து வெளியான செய்தியின் புகைப்படம். இந்தப் புகைப்படம் ட்விட்டர் மற்றும் முகநூலில் பலமுறை பகிரப்பட்டுள்ளது.

தன்னைக் குறித்து யார் இந்த போலிச் செய்தியை பரப்புகிறார்கள், ஏன் பரப்புகிறார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்கிறார் மார்வா. ஆண்களே அதிகம்கொண்ட இந்தத் துறையில் மார்வாவால் பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் கால்பதிக்க முடிந்திருக்கிறது.

மார்வா
மார்வா
instagram

போராட்டத்துக்கு பின் கிடைத்த வாய்ப்பு!

கடலின் மீது தனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது என்கிறார் மார்வா. ஆனால், அவர் இந்தத் துறையில் பயில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான அரபு அகாடமியில் சேர்ந்ததே ஒரு சட்டப் போராட்டத்துக்கு பின்தான். அந்த அகடமி அங்கு பயில ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிக்கொண்டிருந்தது. அதன் பிறகு அப்போதைய எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அந்தச் சட்டப் போராட்டத்தில் தலையிட்ட பிறகுதான் மார்வாவுக்கு அனுமதி கிடைத்தது.

அனுமதி கிடைத்த பிறகு மார்வாவின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. ஆண்கள் மட்டுமே அங்கு இருந்ததால், தன்னைப் போன்ற மனப்பான்மைகொண்டவர்களிடம் பேசுவதற்குக்கூட அங்கு யாரும் இல்லை என்கிறார் மார்வா. பெண்கள் தங்கள் குடும்பங்களைவிட்டு வெளியே, அதுவும் கப்பலில் பணிப்புரிவதைப் பெரிதாக விரும்புவதில்லை என்கிறார் மார்வா.

தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் மார்வா `ஃபர்ஸ்ட் மேட்` பொறுப்புக்கு உயர்ந்தார். Aida IV என்ற கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அந்தக் கப்பல்தான் 2015-ம் ஆண்டு சூயஸ் கால்வாயை விரிவுப்படுத்திய பின் சென்ற முதல் கப்பல். கால்வாயைக் கடந்த முதல் இளம் மற்றும் பெண் கேப்டன் மார்வா. தன்னைக் குறித்த போலிச் செய்திக்கு எதிர்மறையான கமென்ட்டுகள் வந்திருந்தாலும், பல நேர்மறையான மற்றும் தனக்கு ஆதரவான கருத்துகளும் வந்துள்ளன என்கிறார் மார்வா. அதுமட்டுமல்லாமல் முன்பைக் காட்டிலும் தற்போது தான் மிகவும் பிரபலமடைந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

மார்வா
மார்வா
Premkumar SK

``கப்பல்துறையில் சாதிக்க விரும்பும் அனைத்துப் பெண்களும், எதிர்மறையான கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் நேசிப்பதை அடையப் போராடுங்கள். இதுவே பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி” என நம்பிக்கையுடன் கூறுகிறார் மார்வா.

- திலகவதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு