Published:Updated:

`இளைஞர்களே... நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல!’ - WHO-வின் ஸ்ட்ரிக்ட் எச்சரிக்கை #Coronavirus

WHO தலைமை இயக்குநர்
WHO தலைமை இயக்குநர்

கொரோனா வைரஸால் இளைஞர்களும் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் இரு நாடுகளுக்கு இடையேயான போர், புவி வெப்பமயமாதல், அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, தண்ணீர்ப் பிரச்னை என அனைத்தையும் ஓவர் டேக் செய்துவிட்டு விஸ்வரூப பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது கொரோனா வைரஸ். இந்தப் பெயரைக் கேட்டாலே உலக மக்கள் அச்சத்தில் நடுங்குகிற அளவுக்கு இதன் செயல்பாடுகள் உள்ளன.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸால், உலகம் முழுவதும் 2,79,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள

இறப்பு 11,000 -ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. வைரஸ் முதன்முதலில் தொற்றியதாகச் சொல்லப்படும் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,225 ஆக உள்ளது, அதுவே சீனாவிலிருந்து 7,562 கி.மீ தொலைவில் உள்ள இத்தாலியில் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலிருந்து இத்தாலி சென்றவர்கள், அவர்களைக் கண்டுகொள்ளாத அரசு ஆகியோரின் அலட்சிய நடவடிக்கையால் தற்போது சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துவருகிறது இத்தாலி.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், சிறுவர்கள் போன்றவர்களே அதிகம் உயிரிழந்துவருவதாகக் கூறப்பட்டது. உலகிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட இரண்டாவது நாடு இத்தாலி. அங்கு, வைரஸ் உயிரிழப்புகள் கட்டுக்கடங்காமல் சென்றதுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. சீனாவில் உயிரிழந்தவர்களில் 15% பேர் 80 வயதுக்கு அதிகமானவர்கள். அங்கு, 1% பேர் மட்டுமே 50 வயதுக்குக்கீழ் இருந்து வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

WHO தலைமை இயக்குநர்
WHO தலைமை இயக்குநர்

நடுத்தர வயதினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. ஜெனீவாவிலிருந்து இணையம் மூலமாக உரையாற்றிய WHO -வின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், “அனைத்து நாடுகளிலுமிருந்து வந்துள்ள தகவல்களின்படி, வயதானவர்கள்தான் வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் கணிசமானவர்களே.

இளைஞர்களே... தற்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்க நினைக்கிறேன். நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல, உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்கில் மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் உயிரிழக்கக் காரணமாகவும் அமையலாம். நீங்கள் நோய் வாய்ப்படவில்லை என்றாலும் வைரஸைப் பரப்புவதில் நீங்களே அதிகப் பங்கு வகிக்கிறீர்கள், வேறு ஒருவருடைய வாழ்க்கை பாதிப்படைவதற்குக் காரணமாக இருக்கிறீர்கள். எனவே, அனைத்து விஷயத்திலும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். சிறிது காலத்துக்கு பயணங்களைத் தவிருங்கள், வயதானவர்களை விட்டு விலகி இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு