Published:Updated:

`பாதுகாப்பு அச்சம்; ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்தத் தடை’ - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தத் தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

சீனாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியுள்ளது. இதுவரை இந்த வைரஸால் சர்வதேச அளவில் 55,88,020 பேர் பாதிக்கப்பட்டு 3,47,872 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நவீன உலகத்தில் இன்னும் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சற்றே வேதனையான விஷயம். பல நாடுகள் வைரஸுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன ஆனால், அவை அனைத்துமே சோதனை நிலையிலேயே உள்ளன.

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்து நோயாளிகளுக்கு மருந்து வழங்கப்பட்டு வந்த நிலையில், சார்ஸ் நோயை எதிர்த்துப் போராடிய மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கோவிட் 19 - வைரஸ் தொற்றுக்கும் பயன்படுத்தலாம் என சர்வதேச அளவில் பல மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைச் சோதனை செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம் எனப் பரிந்துரை செய்தது.

`மோடியிடம் கேட்டிருக்கிறேன்; அனுமதி கிடைக்காவிட்டால்.. பதிலடி?!’ -மருந்து விவகாரத்தில் ட்ரம்ப்

இதையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த மருந்தின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இதே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவும் தங்கள் மக்களுக்குப் பயன்படுத்தி வந்ததால், அந்நாட்டில் மருந்துக்கான தட்டுப்பாடு நிலவியது. பின்னர், இந்தியாவிடம் சண்டை போட்டு, எச்சரிக்கை விடுத்து இந்த மருந்தை ஏற்றுமதி செய்யவைத்தார் அதிபர் ட்ரம்ப். சமீபத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தானும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தையே உட்கொள்வதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதே நேரத்தில் இந்த மருந்து தொடர்பாக உலகின் பழைமையான மற்றும் பொது மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான லான்செட்டில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கோவிட் 19 - நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தும் பல நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ட்ரம்ப் `கேம்-சேஞ்சர்' என்று குறிப்பிட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உண்மையில் எந்த நோய்க்கான மருந்து? - ஓர் அலசல்

இந்நிலையில் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைக் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துவதைப் பாதுகாப்பு அச்சம் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக WHO-வின் தலைவர் டெட்ரோஸ் பேசியதாவது, ``ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் சோதனையைத் தற்காலிகமாக இடை நிறுத்துவதாக நிர்வாக முழு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் மருந்தின் பாதுகாப்பு தரவுகளைக் கண்காணித்து மதிப்பாய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

WHO
WHO

அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற பல நாடுகள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கோவிட் 19 சிகிச்சைக்குப் பயன்படுத்திவந்த நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு அனைவரையும் கவலைக்குள்ளாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு