Published:Updated:

`ட்ரம்ப் பக்கத்து நாட்டுக்கு வந்து எங்கள் நாட்டுக்கு வரவில்லையே’ பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஏக்கம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியாவுடன் அமெரிக்கா உறவை வலுப்படுத்த பல காரணங்கள் உள்ளன. பாகிஸ்தான் நாட்டுடன் ஆண்டுக்கு 6.6 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் மேற்கொள்ளும் அமெரிக்கா இந்தியாவுடன் 150 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் செய்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் இரு நாள்கள் சுற்றுப்பயணம் முடித்து கடும் உற்சாகத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்புத்துறையில், இரு நாடுகளுக்குமிடையே புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் ட்ரம்ப்புக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவின் சி.ஏ.ஏ போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கூட `உள்நாட்டு விவகாரம் ' என்று ட்ரம்ப் சிம்பிளாக கூறியது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

`காஷ்மீரில் எந்தச் சூழலிலும் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க மாட்டோம்' என்று பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்துவிட்ட நிலையில், ட்ரம்ப் மீண்டும் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அதே பழைய பல்லவியை மீண்டும் பாடிச் சென்றுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

டெல்லியில் தற்போது நடந்து வரும் கலவரங்கள் குறித்து கூட ட்ரம்ப் வாய் திறக்கவில்லை. ஆனாலும், அமெரிக்கா சென்ற பிறகு, எப்போதாவது டெல்லி கலவரம் பற்றி அவர் பேச வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளவே ட்ரம்ப் விரும்புவதாக, பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால்தான், செய்தியாளர்களுக்கு அளித்த பிரஸ்மீட்டில் கூட, `நான் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், இந்த இரு நாள்களில் நிகழ்ந்த சந்தோஷமான விஷயங்களுக்கு கேடு விளைவித்து விடும்' என்று ட்ரம்ப் சொன்னது இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இந்தியாவுக்கு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை விற்க ஒப்பந்தம் செய்ததை, ஜனநாயக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள பெர்னி சான்டர்ஸ் விமர்சித்துள்ளார்.

``ஆயுத ஒப்பந்தங்கள் போடுவதைக் காட்டிலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாம். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம்'' என்றுர் பெர்னி சான்டர்ஸ்.

சி.ஏ.ஏ போராட்டம்
சி.ஏ.ஏ போராட்டம்

ட்ரம்ப்பின் இந்திய வருகையின்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வர்த்தக ஒப்பந்தம்தான். ஆனால், அது நிறைவேறவில்லை. எனினும், அமெரிக்காவுடன் அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகம் நடைபெறுகிறது. அதேவேளையில், பாகிஸ்தான் நாட்டுடன் ஆண்டுக்கு 6.6 பில்லியன் டாலர்கள் மதிப்புக்குத்தான் அமெரிக்கா வர்த்தகத்தில் ஈடுபடுகிறது. முதலீடு என்று பார்த்தால், ஆண்டுக்கு 336 மில்லியன் டாலர்கள் அளவுக்குத்தான் பாகிஸ்தானில் அமெரிக்கா முதலீடு செய்கிறது.

`கெஞ்சினேன்... விடவில்லை; தொடர்ந்து அடித்தார்கள்!'-திக்திக் நிமிடங்களை விவரித்த தொழிலாளி #Delhiriots

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலத்தில் செய்யப்படும் முதலீட்டை விட இது குறைவு. அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அந்த நாட்டிடம் இருந்து ஆயுதங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா பக்கம் அமெரிக்கா சாய்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

 ட்ரம்ப் தம்பதி
ட்ரம்ப் தம்பதி

கடந்த 2006-ம் ஆண்டு வரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவருமே இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே சென்று வந்துள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் போக்கு அதிகரித்து வருவதால், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதைத் தவிர்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு இம்ரான்கான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்து பாகிஸ்தான் வருமாறு அழைப்பும் விடுத்தார். இருந்தும் டொனால்டு ட்ரம்ப் தன் பயணத் திட்டத்தில், பாகிஸ்தானை சேர்க்கவில்லை. ஆனாலும், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை முற்றிலும் விலக்கிக்கொண்ட பிறகு, ட்ரம்ப் பாகிஸ்தான் வர வாய்ப்புள்ளதாக அந்த நாடு நம்புகிறது.

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால், ட்ரம்பின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆயிஷா ஃபாருக்கி, ``பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் மேம்பட்ட உறவு நிலை நிலவுகிறது. பக்கத்து நாட்டுக்கு வந்துவிட்டு, எங்கள் நாட்டுக்கு வர ட்ரம்ப் விரும்பவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு மட்டும் தனியாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு