Published:Updated:

`6 மணி நேரம் கெஞ்சினேன்; வேடிக்கை பார்த்தனர்’ - அமெரிக்கச் சிறையில் கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை

சத்யா கோபாலன்

சிறையில் இருந்த எனக்கு பிரசவ வலி வந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என அமெரிக்கப் பெண் புகார் அளித்துள்ளார்.

Diana Sanchez
Diana Sanchez ( AP )

அமெரிக்காவின் கொலொரடோ மாகாணத்தில் உள்ள டென்வெர் நகரைச் சேர்ந்தவர் டியானா சான்செஸ் (Diana Sanchez) என்ற 26 வயதுப் பெண். கடந்த வருடம் ஜூலை மாதம் 14-ம் தேதி ஒரு திருட்டு வழக்கில் கைதான இவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது டியானா எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

Pregnant
Pregnant

தண்டனை முடிந்து தற்போது வெளியில் வந்துள்ள அவர், தண்டனை காலத்தில் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள் பற்றிப் புகார் அளித்து சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவுடன் சிறை சிசிடிவி காட்சிகளையும் கொடுத்துள்ளார். அந்தக் காட்சிகள் மனதை உருக்கும் விதமாக உள்ளது.

“ 2018 ஜூலை 31-ம் தேதி என் வாழ்வில் மகிழ்ச்சியான மறக்க முடியாத நாளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நாள் எனக்கு நரக வேதனையாக இருந்துவிட்டது. 8 மாத கர்ப்பிணியான எனக்கு அன்று பிரசவ வலி ஏற்பட்டது. காலை முதலே வலியில் துடித்துக்கொண்டிருந்தேன். எனக்கு வலி ஏற்பட்ட விஷயம் அங்கிருந்த அதிகாரிகள், சிறை செவிலியர்கள் அனைவருக்கும் தெரியும்.

Diana Sanchez
Diana Sanchez
AP

என் பனிக்குடம் உடைந்துவிட்டது என்று கதறினேன். சிறைக்குள் வந்து என்னைச் சோதனை செய்த செவிலியர் எந்த உதவியும் செய்யாமல் சென்றுவிட்டார். பின்னர் சிறைக் கம்பிகளின் வழியே சில துணிகள் மட்டும் பிரசவத்துக்காகக் கொடுக்கப்பட்டது. கட்டிலிலிருந்து எழுந்து சென்று நானே அந்தத் துணிகளைக் கொண்டு வந்து பிரசவத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டேன்.

Vikatan

சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை உதவி கேட்டுக் கெஞ்சியிருப்பேன். என் வலி புரிந்தும் ஒரு செவிலியர்கூட எனக்கு உதவி செய்ய வரவில்லை. அவர்கள் சிறையில் வெளியில் நின்றுகொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ஆம்புலன்ஸ் போன்ற எந்த அவசர சிகிச்சைக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சில மணி நேரங்களில் எனக்குக் குழந்தை பிறந்தது. பின்னர் சிறையினுள் வந்த செவிலியர் குழந்தையை மட்டும் என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டார்.

Jail
Jail

குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்கக் கூட அவர்களிடம் முறையான உபகரணங்கள் இல்லை. திறந்த கழிப்பறைக்கு அருகில்தான் நான் குழந்தை பெற்றேன். அதன் பிறகுதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். என் நிலை வேறு யாருக்கும் வரக் கூடாது. சிறை நிர்வாகத்தின் மீதும், வேடிக்கை பார்த்த செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார் டியானா.

இந்த விவகாரம் தொடர்பாகச் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். `மருத்துவப் பராமரிப்பை நகைச்சுவையாக நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்’ என டியானாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

Diana Sanchez
Diana Sanchez
AP

இந்த விவகாரம் பெரிதான பிறகு கே.டி.வி.ஆர் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள டியானா, “ கடந்த வருடம் நானும் என் மகனும் போராடி உயிர் பிழைத்துள்ளோம். நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை என் மகனின் உயிரைப் பணயம் வைத்திருந்தனர். எனக்கு அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்துவிடுவேன் என நினைத்ததாக என்னிடமே கூறினர்” எனத் தெரிவித்துள்ளார்.