Published:Updated:

`கூடாதுன்னுதான் டிக் செய்தோம்; அப்படியும் நடத்திட்டாங்க!'‍ வெடிக்கப்பட்ட உடலால் `ஷாக்'கான குடும்பம்

பிரேம் குமார் எஸ்.கே.

தானமாக வழங்கும்போது நாங்கள் கையெழுத்து இடும் ஆவணத்தில், `மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியான வெடி சோதனைக்கும் உட்படுத்தலாமா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

டோரிஸ்
டோரிஸ்

உடல் தானத்தின் மகத்துவம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உடல் உறுப்புகள் தானம் மற்றும் உடல் தானத்தின் பயன்பாடு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மூதாட்டி டோரிஸ் ஸ்டாஃபெர் என்பவர் அல்சைமர் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அல்சைமர் என்பது மறதி நோய். பொதுவாக நரம்பியல் சிதைவுகளால் இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க ராணுவம்
அமெரிக்க ராணுவம்

தொடக்கத்தில் மெதுவாகத் தொடங்கும் இந்த நோய், பின்னர் பெரும் மறதியில் கொண்டுபோய் விடும். டோரிஸும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது 73-வது வயதில் அவர் மரணிக்க, அவரது உடலை அல்சைமர் நோய் தொடர்பான ஆய்வுகளுக்குப் பயன்படுத்த தானமாக வழங்க முடிவு செய்து அளித்தனர் அவரின் குடும்பத்தினர். ஆனால், சமீபத்தில் அந்தக் குடும்பத்துக்குக் கிடைத்த தகவல் அக்குடும்பத்தை பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது, மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட அவரது உடல், அமெரிக்க ராணுவத்தின் குண்டு வெடிப்பு பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய டோரிஸின் மகன் ஜிம், ``ஒரு இயந்திரத்தில் இருக்கும் நாற்காலி போன்ற அமைப்பில் அவரது உடல் வைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தைக் கொண்டு இந்தப் பரிசோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த வெடிபொருள் மனித உடலை எப்படிப் பாதிக்கிறது என்னும் ஆய்வைச் செய்துள்ளனர்” என்றார்.

`தானமாக வழங்கும்போது நாங்கள் கையெழுத்து இடும் ஆவணத்தில், `மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியான வெடி சோதனைக்கும் உட்படுத்தலாமா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நாங்கள் கூடாது என்ற இடத்தில்தான் டிக் செய்தோம். அப்படி இருந்தும் இது நடத்தப்பட்டிருக்கிறது அதிர்ச்சியைத் தருகிறது. இது குறித்து கேள்விப்பட்டதும் நான் ஒரு முட்டாளைப் போன்று உணர்ந்தேன்’
டோரிஸ் ஸ்டாஃபெரின் மகன்

இது தொடர்பாக உடல் தானமாக வழங்கப்பட்ட ஆய்வகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது 2014-ம் ஆண்டு எஃப்.பி.ஐ சோதனைக்குப் பின்னர் மூடப்பட்டது. டோரிஸின் உடல் 2013-ம் ஆண்டு ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் லாப நோக்கத்தில் உடல் உறுப்புகளை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவே கோரே சந்தித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை வரும் அக்டோபர் மாதம் முதல் சந்திக்க இருக்கிறார்.

Vikatan