Published:Updated:

ஹாங்காங் முதல் சிலி வரை... 2019-ல் நடந்த சர்வதேச மக்கள் போராட்டங்கள் சொல்லும் செய்தி என்ன?

சிலி, ஈக்வடார், ஹைதி, லெபனான், ஹாங்காங், பிரான்ஸ், ஸ்பெயின் முதலான நாடுகளில் மக்கள் போராட்டங்களின் காரணங்கள் வெவ்வேறானவை. எனினும் அவற்றைக் கூர்ந்து கவனித்தால், ஒரே புள்ளியில் இணைகின்றன. இந்தியாவிலும் இதேபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சர்வதேச மக்கள் போராட்டங்கள்
சர்வதேச மக்கள் போராட்டங்கள்

2019 - இது போராட்டங்களின் ஆண்டு. உலக வரைபடத்தின் கிழக்கில் இந்தோனேசியா தொடங்கி, மேற்கில் ஹைதி, ஈக்வடார் வரை போராட்டங்களால் பற்றி எரிந்தன. பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சர்வதேச நாடுகளின் வீதிகள் சாமான்யர்களால் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் அமைதியும், சில இடங்களில் வன்முறையும் போராட்டங்களின் வடிவங்களாக மாறியுள்ளன.

சிலி மக்கள் போராட்டம்
சிலி மக்கள் போராட்டம்

லத்தீன் அமெரிக்க நாடுகளுள் செழிப்பான நாடு சிலி. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க, சிலி நாட்டின் பண மதிப்பு குறைந்தது. இதைச் சமாளிக்க சிலி அரசு மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியது. மெட்ரோ சேவையைப் பயன்படுத்தி வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அமைதியாகத் தொடங்கிய போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறியது. சிலி தலைநகர் சாண்டியாகோவில் 164 மெட்ரோ ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. வீதிகளில் ராணுவம் இறங்க, ராணுவத்தை எதிர்க்கத் துணிந்தனர் சிலி நாட்டு மக்கள்.

``நாம் போரில் இருக்கிறோம். நமது எதிரிகள் சக்திவாய்ந்தவர்களாகவும், எல்லையற்ற வன்முறையை முன்னெடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்" எனக் கூறி, எமர்ஜென்சி அறிவித்தார் சிலி நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினெரா.

சிலியின் வடக்கே, பூமியின் மத்திய ரேகை மீது அமைந்துள்ளது ஈக்வடார். பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் விலையை உயர்த்தி, அதன்மூலம் வரும் பணத்தைக்கொண்டு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் தங்களுக்கு இருக்கும் கடனை சரிசெய்யலாம் என முடிவுசெய்தது ஈக்வடார் அரசு. இது லட்சக்கணக்கான மக்களை வீதியில் இறங்கிப் போராடச் செய்தது; 11 நாள்கள் நடந்த பெரும் போராட்டத்துக்குப் பிறகு, தனது முடிவில் பின்வாங்கியுள்ளது ஈக்வடார் அரசு.

லெபனான் மக்கள் போராட்டம்
லெபனான் மக்கள் போராட்டம்

லத்தீன் அமெரிக்காவில் இப்படியான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, மத்திய கிழக்கு நாடான லெபனானில் `வாட்ஸப்' வரி விதித்த அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது. சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் நெருக்கடியால், மக்கள் மீது வரிச் சுமையை இறக்கி வைத்த லெபனான் அரசைக் கண்டித்த மக்கள், அரசியல்வாதிகள் அனைவரும் பதவி விலக வேண்டும் எனப் போராடி வருகின்றனர். பிரதமர் சாத் அல் ஹரிரி பதவி விலகியதன் பிறகு, முன்னாள் கல்வி அமைச்சர் ஹசன் தையப் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அரசுப் பதவிகள் வகித்தவர்களின் சம்பளமும் குறைக்கப்படும் என அரசு அறிவித்தது. லெபனான் மக்கள், ``எல்லாரும் பதவி விலக வேண்டும் என்பதன் பொருள் எல்லாரும் பதவி விலக வேண்டும் என்பதுதான்! ஹசன் தையப் மட்டும் விதிவிலக்கு அல்ல" என எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். இரண்டு மாதங்களைக் கடந்தும், லெபனான் மக்கள் எழுச்சி தொடர்ந்து வருகிறது.

அல்ஜீரியா, பொலிவியா ஆகிய நாடுகளில் மக்கள் விருப்பத்தை மீறி, ஆட்சியைத் தொடர விரும்பிய தலைவர்கள் மக்கள் கிளர்ச்சியால் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். செக் குடியரசு, எகிப்து, இராக் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களிடையே ஊழல் பெருகியிருப்பதைக் கண்டித்து பெரும் போராட்டங்கள் வெளிப்பட்டன. கடும் பொருளாதார நெருக்கடிகளுக்குட்பட்ட இந்நாட்டு போராட்டக்காரர்கள் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று அமைதியாகவும் வன்முறைகளின் வழியாகவும் அரசை எதிர்த்து நின்றனர்.

ஹாங்காங் மக்கள் போராட்டம்
ஹாங்காங் மக்கள் போராட்டம்

இந்த ஆண்டின் மிகப்பெரிய போராட்டம், ஹாங்காங்கில் நடந்தது. சீன அரசின் ஆதிக்கத்தை விரும்பாத ஹாங்காங் மக்கள் போராட்டங்களை நடத்தினர். போராடும் மக்களுக்கு எதிராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட போராட்டங்களும் தொடங்கின. இரு தரப்பினரும் பல்வேறு இடங்களில் மோதிக் கொண்டனர். ஹாங்காங் போராட்டங்களில் இதுவரை 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 2600 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஹாங்காங்கைப் போல தன்னாட்சி கோரி, ஸ்பெயினில் போராட்டம் நடத்தி வருகின்றனர் கேடலோனியா மக்கள். ஸ்பெயின் அரசால் கேடலோனிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

கிரேட்டா
கிரேட்டா

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரித்த இதே ஆண்டில், பூமியை வாழத் தகுதியற்றதாக மாறி வருவதாக கோபம் கொண்டு போராடத் தொடங்கினர் சூழலியல் ஆர்வலர்கள். இந்த ஆண்டு, புவி வெப்பமடைதலையும், காலநிலை மாற்றம் அடைவதையும் `எமர்ஜென்சி' என அறிவித்த சூழலியல் ஆர்வலர்கள், ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இவற்றில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் இளைஞர்கள். 16 வயது கிரேட்டா தன்பர்க் உலக சூழலியல் போராட்டங்களின் முகமாக மாறியுள்ளார். ஐ.நா சபையில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் கிரேட்டா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக கிரேட்டா தன்பர்கைப் போல, 2019-ம் ஆண்டின் மக்கள் போராட்டங்களில் பெரும்பாலும் முன்னணியில் நின்றவர்கள் பெண்கள். சூடான் போராட்டத்தின் `நுபியன் ராணி' முதல் இந்தியாவின் ஆயிஷா ரென்னா வரை, உலகம் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிலி நாட்டின் போராட்டங்களில் பெண்களால் பாடப்பட்ட வன்கொடுமை எதிர்ப்பு பாடல், உலகம் முழுவதும் போராட்டக் களங்களில் நிற்கும் பெண்களின் குரலாக மாறி வருகிறது.

சூடான் போராட்டத்தின் `நுபியன் ராணி'
சூடான் போராட்டத்தின் `நுபியன் ராணி'

சிலி, ஈக்வடார், ஹைதி, லெபனான், ஹாங்காங், பிரான்ஸ், ஸ்பெயின் முதலான நாடுகளில் மக்கள் போராட்டங்களின் காரணங்கள் வெவ்வேறானவை. எனினும் அவற்றைக் கூர்ந்து கவனித்தால், அவையனைத்தும் ஒரே புள்ளியில் இணைவதைக் காணலாம். மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்கள் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, மானியங்கள் வெட்டு, ஊழல் அரசுகள், மக்களை அடக்கும் அரசுகள் முதலான காரணங்களின் அடிநாதம் ஒவ்வொரு அரசுகளின் தாராளவாத பொருளாதார கொள்கையில் சென்று சேர்கிறது. தாராளவாத பொருளாதார கொள்கை தனியார் மயத்தை ஊக்குவிக்கிறது; உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடங்களாக உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனங்களும் இயங்குகின்றன.

ஹாங்காங் போராட்டம்... அன்று முதல் இன்றுவரை!

இவற்றின் விளைவை, உலகம் முழுவதும் வாழும் எளிய பின்னணி கொண்ட மக்கள் சந்தித்து வருகின்றனர். தண்ணீர், கல்வி, மருத்துவம் என அனைத்தும் விலைக்கு விற்கப்படும் நாட்டில், சாமான்யர்களால் அவற்றை அடைய முடியாமல் போகின்றன; லாபத்துக்காக இயற்கை வளங்கள் அதிகமாகச் சுரண்டப்பட பூமியின் பருவநிலை பெரும் மாற்றங்களுக்குள்ளாகிறது. உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது. உலகின் டாப் 25 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, உலகம் முழுவதும் வாழும் ஏழைகளில் பாதி பேரின் மொத்த சொத்து மதிப்புக்கு இணையானது.

இப்படியான சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் வலுப்பெற்ற இந்த ஆண்டில், இந்தியாவில் ஜே.என்.யூ மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்; ஒடிசா மாநிலத்தின் பழங்குடிகள் தாங்கள் காடுகளை விட்டு அப்புறப்படுத்துவதைக் கண்டித்துப் போராடியுள்ளனர்; சத்தீஸ்கர் பழங்குடிகள் தங்கள் பகுதியில் கட்டப்படவுள்ள சுரங்கங்களை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கு விளைவித்த 4 விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடுத்தது. 190 சமூக செயற்பாட்டாளர்கள் மாநில அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக வழக்கு திரும்ப பெறப்பட்டது.

ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்
ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்

உலகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களுக்கும், இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களுக்கும் ஒரே காரணம்தான் இருக்கிறது. உணவு, கல்வி, மருத்துவம் முதலான மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் விற்பனை பண்டங்களாக மாறும்போது, எளிய மனிதர்களின் அதீத உழைப்பையும் தாண்டி, அடிப்படைகளின் விலை அதிகரிப்பதும், அதன் விளைவாக நிகழும் சமத்துவமின்மையும் உலகமயமாக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களிடையே சமத்துவம் நிகழும் வரை, இந்தப் போராட்டங்கள் தொடரும் என்பதே உலகம் முழுவதும் போராடுபவர்களின் விருப்பமாக இருக்கிறது. வரவிருக்கும் 2020-ம் ஆண்டில், உலகம் முழுவதும் வசந்தம் பரவட்டும்.