Published:Updated:

`கட்டாயக் கொரோனா சோதனை; உடல் வெப்பநிலை; தனிமனித இடைவெளி’ - வுகானில் திறக்கப்பட்ட பள்ளிகள்

வுகான் பள்ளி
வுகான் பள்ளி ( AP )

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட இடமான சீனாவின் வுகான் நகரில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஹுபே மாகாணத் தலைநகர் வுகானிலிருந்து முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் இன்று மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்து சர்வதேசப் பொருளாதாரத்தைச் சரிவை நோக்கித் தள்ளி மக்களை வீட்டுச் சிறைகளில் அடைத்து வைத்துள்ளது.

என்னதான் சீனாவிலிருந்து வைரஸ் பரவியிருந்தாலும் அங்கு 3 மாதங்களுக்குள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பிவிட்டது. இதற்கு சீன அரசின் கடுமையான நடவடிக்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

வுகான் பள்ளி
வுகான் பள்ளி
AP

வுகானில் வைரஸ் உறுதியானதும் மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டது. சீனாவுடனான சர்வதேசப் போக்குவரத்து அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், உணவகங்கள் போன்ற அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு பொதுமக்கள் சாலையில் நடக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. 3 மாத தீவிரப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் சீனாவில் ஒரு கொரோனா பாசிட்டிவ் நபர்கள்கூட இல்லாத நிலை வந்தது. பின்னர், படிப்படியாக வர்த்தகங்கள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

`வுகான் ஆய்வகத்திலிருந்து வெளியானதா கொரோனா?’ - பத்திரிகையாளர்களின் கேள்வியும் ட்ரம்பின் பதிலும்

ஆனால், வுகான் நகரம் ஏப்ரல் மாதம்தான் மீண்டெழுந்தது. அங்கு ஏப்ரல் முதல் வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி, வர்த்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஹூபே மாகாணத்தைத் தவிர மற்ற இடங்களில் மார்ச் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று வுகான், ஹூபேயிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜூலை மாதத்தில் ஆண்டுத் தேர்வு நடக்கவுள்ளதால் மாணவர்கள் அதற்குத் தயாராகவுள்ளனர்.

வுகான் பள்ளி
வுகான் பள்ளி
AP

ஹூபேயில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி தெளித்து மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு இருக்கைக்கு இருவர் என மொத்த வகுப்புக்கும் 25 பேர் மட்டுமே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகமூடி அணிந்து ஒரு வாயிலில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் அனைவரும் நிச்சயம் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிக்குள் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

1,500 கொடிய கிருமிகள் - வுகான் வைரலாஜி மையத்தின் மர்மம்: சீனாவுக்கெதிராக சி.ஐ.ஏ-வை ஏவிய அமெரிக்கா!

``குறைந்த நாள்களிலேயே தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது’ என மாணவர்கள் கூறியுள்ளனர். 8-ம் வகுப்புக்குக்கீழ் உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு