Published:Updated:

அதிபருக்காக நடைபெற்ற சட்டத் திருத்தம்! - மாவோவுக்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவரா ஜி ஜின்பிங்?

சீனா, தனது புவி ஆதிக்க அரசியலாலும், பொருளாதாரப் போட்டி அரசியலாலும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளையே ஆட்டம்காணச் செய்துவருகிறது.

பிரீமியம் ஸ்டோரி

சீன அரசியல் வரலாற்றிலேயே முதன்முதலாக தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராகும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார் ஜி ஜின்பிங். கடந்த வாரம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாவோவுக்குப் பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக உருப்பெற்றிருக்கிறார் ஜி ஜின்பிங். பொதுவாக, சீனாவைப் பொறுத்தவரை அங்கு ஒருவர், இரு முறை மட்டுமே அதிபர் பொறுப்பு வகிக்க முடியும் என்றிருந்த நிலையில், ஜி ஜின்பிங்குக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமானது?

சீனா, தனது புவி ஆதிக்க அரசியலாலும், பொருளாதாரப் போட்டி அரசியலாலும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளையே ஆட்டம்காணச் செய்துவருகிறது. இன்றைய சூழலில், சீனாவைத் தவிர்த்து உலக அரசியலைப் பேச முடியாத அளவுக்கு அரசியல், வணிகம், தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் டிராகன் கரங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணமாக முன்னிறுத்தப்படும் நபர் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

2013-ல் ஜி ஜின்பிங் முதன்முறையாக சீன அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதலே நாட்டின் சட்ட திட்டங்களில், பொருளாதாரக் கொள்கைகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். கம்யூனிசக் கோட்பாட்டுரீதியாகவும் `சீனப் பண்புகளுடன் கூடிய சோஷலிசம்’ என்ற புதிய கருத்தாக்கத்தைப் புகுத்தினார். உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு முதலீடு, தனியார் துறைகளுக்கு சுதந்திரம், உலக வர்த்தகத் தொடர்பு என அத்தனை கூறுகளிலும் வளர்ச்சிக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவின் நேரடிப் போட்டியாளராக சீனா வளரத் தொடங்கிய நிலையில், ‘அடுத்த 30 ஆண்டுகளில் சீனா உலக வல்லரசாகும்’ என்று தீர்க்கமாகக் கூறினார் ஜி ஜின்பிங்.

இன்னொரு பக்கம் ஹாங்காங் போன்ற உள்நாட்டில் நடக்கும் ஜனநாயக உரிமைப் போராட்டங்கள் இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கப்பட்டன. சீனா, தன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்னையைத் தீவிரமாக்கியது. ராணுவ அடக்குமுறைகளைக் கொண்டும், அடைக்க முடியாத அளவுக்கு கடன்களைக் கொடுத்தும் தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தியது. இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியமே பதற்றமான சூழலுக்குள் தள்ளப்பட்டது.

அதிபருக்காக நடைபெற்ற சட்டத் திருத்தம்! - மாவோவுக்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவரா ஜி ஜின்பிங்?

மறுபுறம் பெரும்பாலான சீன மக்களிடமும், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஜி ஜின்பிங்கின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. தொடர்ந்து 2018-ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் ஜி ஜின்பிங்கே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் `ஒருவர் இரண்டு முறை (பத்தாண்டுகள்) மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும்’ என்கிற நூற்றாண்டுக்கால சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறை மாற்றப்பட்டு, 2018-ல் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டில் புதிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கூடவே, ஜி ஜின்பிங்கின் `புதிய சகாப்தத்துக்கான சீனப் பண்புகளுடன்கூடிய சோஷலிசம்’ என்னும் சித்தாந்தம் சேர்க்கப்பட்டது. அப்போதே, இந்தச் சட்ட திருத்தம் ஜி ஜின்பிங் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான முன்னேற்பாடாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில்தான், கடந்த வாரம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு மாநாடு தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் கட்சியின் உயர்நிலைப் பொறுப்பில் இருக்கும் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபராகத் தொடர வழிசெய்யும் 14 பக்க தீர்மானம் அதில் ஒன்று. அதாவது, ‘2022-ல் நடைபெறவிருக்கும் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில், ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக சீன அதிபராகத் தேர்ந்தெடுப்பது; அவருக்குச் சிறப்பு கூடுதல் அதிகாரத்தை வழங்குவது’ உள்ளிட்ட தீர்மானங்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

ஏற்கெனவே, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், நாட்டின் அதிபர் ஆகிய மூன்று முக்கிய அதிகாரங்களில் அமர்ந்திருக்கும் ஜி ஜின்பிங், தற்போது மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதன் மூலம் மாவோவுக்குப் பிறகான சக்திவாய்ந்த சீனத் தலைவராக உருவெடுத்திருக்கிறார். ஜி ஜின்பிங், தனது ஆயுள்காலம் வரைக்கும் சீனாவின் அதிபராக நீடிப்பார் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறினாலும், அரசியலில் எதுவும் எப்போதும் மாறலாம் என்பதே நிதர்சனம்!

உலக நாடுகள் அஞ்சுவது ஏன்?

கொரோனா வைரஸ் மர்மம், தைவான் சிக்கல், ஆஸ்திரேலியாவுக்கு மிரட்டல், தாலிபன்களுக்கு ஆதரவு, பாகிஸ்தானுக்குப் போர்க்கப்பல் வழங்குதல், இந்திய எல்லையில் படைகளைக் குவிப்பது, புதிய கிராமங்களை உருவாக்குவது, தென்சீனக்கடல் தீவுகளில் ராணுவத் தளங்கள் அமைத்தல், அமெரிக்காவுடன் பனிப்போர் என சமீபகாலமாக சீனாவின் ஆதிக்கச் செயல்பாடுகள் பன்மடங்காக அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில், மீண்டும் ஜி ஜின்பிங் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரச்னைகள் இன்னும் தீவிரமாகும் என சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் அஞ்சுகின்றன. நவம்பர் 15-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காணொலி மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இரு நாட்டு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, `தைவானின் தற்காப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதேபோல், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டிகள் இருக்கலாம்; ஆனால் அது ஒருபோதும் மோதலாக மாறிவிடக் கூடாது’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். மேலும், கிளாஸ்கோ-காலநிலை மாற்ற கூட்டத்திலும், ரோம் ஜி 20 மாநாட்டிலும் சீனா கலந்துகொள்ளாததற்கு பைடன் தனது கண்டனத்தையும் பதிவுசெய்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு