Published:Updated:

`கதிகலங்கிய ஸ்பெயின்; தள்ளி நிற்கும் ஸஹாரா!’ - மலைக்கவைக்கும் மலை நகரம் #Corona

ஸ்பெயினில் உள்ள ஸஹாரா என்ற மலை நகரம் தன்னை முழுவதும் தனிமைப்படுத்தி கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகப் போராடி வருகிறது.

சீனாவின் வுகான் நகரத்திலிருந்து பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவே தங்கள் நாட்டில் பரவியுள்ள வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. உலக அளவில் சிறந்த மருத்துவத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலி செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது.

ஸஹாரா
ஸஹாரா
Twitter

கொரோனா வைரஸால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட பட்டியலிலும், அதிகம் பேர் உயிரிழந்த பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் உள்ளது ஸ்பெயின். அங்கு மட்டும் இதுவரை 1,31,646 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 12,641 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மொத்த ஸ்பெயினையும் புரட்டிப் போட்டு மக்கள் எதிர்பாராத கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது கொரோனா எனும் அரக்கன்.

கொரோனாவால் ஸ்பெயின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் தங்கள் நாட்டிலிருந்தே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகப் போராடி வருகிறது ஒரு மலை நகரம். தெற்கு ஸ்பெயினின் காடிஸ் மாகாணத்தில் உள்ள ஆண்டலூசியா மலை உச்சியில் அமைந்துள்ளது ஸஹாரா டி லா சியரா (Zahara de la Sierra) என்ற எழில்மிகு நகரம். கொரோனாவால் மொத்த ஸ்பெயினும் கதிகலங்கி நிற்கும் இந்த நேரத்தில் ஸஹாராவில் மட்டும் ஒருவருக்கு கூட வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு அந்த நகரத்தின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள சிறப்பான மற்றும் கடினமாக நடவடிக்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஸஹாரா
ஸஹாரா
Twitter

கடந்த மார்ச் 14-ம் தேதிதான் ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போதுதான் ஸஹாராவும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டவுடன் முதல் வேலையாக ஸஹாராவுக்கு செல்லும் ஐந்து பாதைகளில் நான்கை மூடியுள்ளார் அந்நகரத்தின் மேயர் சாண்டிகோ கால்வன். திறந்துவைக்கப்பட்டுள்ள அந்த ஒரு நுழைவுப் பாதை வழியாக மிகவும் அத்தியாவசியமாக உள்ள வாகனங்கள் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி வரும் வாகனங்கள் மீது முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, மேலும், வாகனத்தின் டயரை தூய்மைப்படுத்தச் சாலையின் நடுவே பள்ளம் தோண்டி அதில் கிருமி நாசினி ஊற்றப்பட்டு அதன் மீது வாகனம் இறங்கி ஏறிய பிறகே உள்ளே அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் வாகனத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் எல்லையிலேயே கைகளைக் கழுவிவிடுகின்றனர்.

தங்கள் நகரத்தில் சுகாதார நடவடிக்கைகள் பற்றிப் பேசியுள்ள மேயர் கால்வின், ``ஸஹாரா எழில்மிகு சுற்றுலாத்தலம். இதனால் இங்கு வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் ஸஹாராவுக்குள் நுழைய வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மேயர் கால்வன்
மேயர் கால்வன்
Twitter

இங்கு வந்த பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வாரத்தில் இரண்டு நாள்கள் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் 10 பேர் அடங்கிய குழு நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அனைத்து இடங்களையும் தூய்மை செய்கிறார்கள். மேலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி தருவதற்காக சில பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு நாளுக்கு 11 மணி நேரம் வேலை செய்து வீட்டில் இருக்கும் மக்கள் கூறும் பொருள்களை வாங்கி வந்து வழங்குகின்றனர்.

நகரத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். அதைப் பணியாளர்கள் மிகவும் வறுமையில் உள்ளவர்கள், முதியவர்கள் போன்றோரின் வீட்டு வாயிலில் வைத்து வருவார்கள். இந்த நகரத்தில் மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 65 வயதுக்கும் அதிகமானவர்கள். தற்போதுவரை ஒருவருக்கு கூட வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஸஹாரா
ஸஹாரா
Twitter

``வீட்டில் இருக்கும் முதியவர்களின் மன அழுத்தத்தைப் போக்க அவர்களுக்காக ஒரு ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு அதில் பல டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் குழந்தைகளை மகிழ்விக்க வண்ண விளக்குகள் மற்றும் இசைகள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் அவ்வப்போது வீதிகளில் வலம் வருகின்றன. இதைக் குழந்தைகள் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்து ரசிக்கின்றனர். அதேபோல் ஸஹாரா நகரில் இருக்கும் பணக்காரர்கள் தங்களால் முடிந்த பண உதவியை ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்கி வருகின்றனர். அரசு வழங்கும் நிதியைக் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என கால்வின் குறிப்பிட்டுள்ளார்.

ஸஹாராவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்து சி.என்.என் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள 48 வயதான அவுஸி ராச்கான் என்ற பெண் கூறும்போது, ``இங்குள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு வெளியில் செல்லும் அவசியம் இல்லை. அவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் உணர்கிறார்கள். நிர்வாகம் எங்களுக்காகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான பலனை நாங்கள் கண்முன்னே பார்த்து வருகிறோம்” என நம்பிக்கையாகப் பேசியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு