Published:Updated:

''அமைச்சர் காளைக்கு நான்தான் டாக்டர்'' - மதுரை ’ஜல்லிக்கட்டுக் காளை’ ஸ்பெஷலிஸ்ட் மெரில் ராஜ்!

மருத்துவர். மெரில்ராஜ்.
News
மருத்துவர். மெரில்ராஜ்.

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு என பிரத்யேக கருவிகளைக் கொண்டு நவீன முறையில் சிகிச்சை அளித்துவருகிறார் மதுரை கூடல்நகரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்.

.”அரசு மருத்துவராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அப்போது அலங்காநல்லூரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் ஜல்லிக்கட்டுக் காளைகள் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். அந்த அனுபவம் தான் தற்போது நவீன கருவிகளைக் கொண்டு, ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடிகிறது” எனப் பேச ஆரம்பித்தார் மருத்துவர் மெரில்ராஜ்.

நவீன மருத்துவக் கருவிகள்
நவீன மருத்துவக் கருவிகள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

”ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் 7 ஆண்டுகள் எனக்கு அனுபவம் உண்டு. காளைகளை, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயார் படுத்துவது ஒரு கலை என்று தான் நான் சொல்வேன். உணவுக் கொடுப்பதில் இருந்து பயிற்சி அளிப்பது வரை நிறைய விஷயம் உள்ளது. காளைகளை கட்டும் இடத்தினை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். அரிசி உள்ளிட்ட மாவுப் பொருள்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மாவுப் பொருளால், காளைக்கு வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம். பசுந்தீவனம் மிக முக்கியமானது. இதனால், வைட்டமின் சத்துகள் காளைக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதே போல, காலை அல்லது இரவு வேளையில் வைக்கோல் கொடுப்பது நல்லது. உணவு, பராமரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கூட, காளைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக் காளைகளை அதிக அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் போது, அவற்றிற்கு உடல்நிலை சரியில்லையென்றால், நம்முடைய மனசும் சரியில்லாமல் போய்விடும். இன்றைய காலகட்டத்தில், மனிதனுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன மருத்துவத்திற்கு இணையாக, கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். அதற்கான நவீன கருவிகளும் வரத்துவங்கியுள்ளன.

நவீன மருத்துவக் கருவிகள்
நவீன மருத்துவக் கருவிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிகிச்சை என்பதைத் தாண்டி, இந்த பிரச்னை எனக் கண்டறிய, அவற்றை சரி செய்ய, என்னிடம் நிறைய நவீன கருவிகள் இருக்கு. அதில், சிலவற்றை மட்டும் சொல்கிறேன். முதலாவதாக, லேசர் தெரப்பி மெஷின். இதை வைத்து, காளைகளுக்கு ஏற்படும் சுளுக்கு, ரத்தக்கட்டு, நரம்பு பிடிப்பு, கால் வீக்கம், ஆராத புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தலாம். போட்டிக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் சுலுக்கு, சதைப் பிடிப்பு ஏற்படுவது இயல்பு. அந்த நேரத்தில் இந்த லேசர் கருவி மூலமா சரி பண்ணலாம். அதுமட்டுமில்லாம, சில காளைகள், யாரையும் பக்கத்துல நெருங்க விடாது. அந்த நேரத்துல, தள்ளி நின்னு கூட, இந்த லேசர் கருவியை வச்சு, பிரச்னையை சரி பண்ண முடியும். இதேபோல, அல்ட்ரா சோனிக் தெரப்பி மிஷின், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மிஷின் என இந்த கருவிகளில் கண்ணுக்கு தெரியாத அல்ட்ரா சோனிக் கதிர்கள் வரும். இதனை தொடர் சிகிச்சையாக 10 நாட்கள் பண்ணும் போது, நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.

மருத்துவர். மெரில்ராஜ்.
மருத்துவர். மெரில்ராஜ்.

அடுத்ததாக, எண்டோஸ்கோப். இதனை மொபைலில் இணைத்து, காளையின் மூக்கு வழியாக உள் உறுப்புகளில் உள்ள பிரச்னைகளை கண்டறியலாம். குறிப்பாக, தொண்டைப் புண், அல்சர், புற்றுநோய் கட்டிகள் ஆகியவற்றை பார்க்க முடியும். டென்ஸ் என்று சொல்லக்கூடிய கருவி உள்ளது. (Transcutaneous Electrical Nerve Stimulation - TENS) இதனைப் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒட்டினால், நரம்பு பாதிப்புகளை குணப்படுத்த முடியும். அடுத்ததாக மசாஜ் கன் (துப்பாக்கி) உள்ளது. உடலில் அடிபட்ட இடத்தில், வீக்கம் உள்ள இடத்தில் பயன்படுத்தினால், சரியாகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதர்களைப் போலவே, கால்நடைகளையும் ஸ்கேன் செய்யக் கூடிய ஸ்கேனிங் மெஷின். இதனை வைத்து காளையின் பிரச்னைகளை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதன் பின்னர், பிரச்னைக்கு ஏற்ற மருந்துகள் கொடுக்கலாம்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக் காளைகளுக்கு நான் தான் சிகிச்சை அளிக்கிறேன். பொதுவாக, ஜல்லிக்கட்டுக் காளைகளை வீட்டில் ஒரு நபராக நினைப்பது நம்முடைய கலாசாரம். அந்த வகையில், காளைக்கு எதுவும் ஆகக்கூடாது என நினைப்பதும் இயல்பானது தான். முறையான பராமரிப்பு. சத்தான உணவுகள் கொடுத்தால், எந்த களமாக இருந்தாலும், நின்று விளையாடக்கூடியது நம் பாரம்பரிய காளைகள்” என்றார் மருத்துவர் மெரில்ராஜ்.

காளையுடன் கார்த்தி
காளையுடன் கார்த்தி

மருத்துவரிடம் தன்னுடைய காளையை காண்பிக்க வந்த அலங்காநல்லூரைச் சேர்ந்த கார்த்திடம் பேசினோம். “ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பது, பராமரிப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாதது. நான் விவசாயம் பண்றேன். அதனால், காளை வளர்க்க வாய்ப்பு கிடைச்சது. இடமும் இருக்குறதுனால நான் காளை வளர்க்கிறேன். ஜல்லிக்கட்டு சீசனில், அதாவது தை மாதத்தில் இருந்து அடுத்த 4 மாத்திற்கு நாள் ஒன்றிற்கு 250 ரூபாய் செலவாகும். சீசன் இல்லாத நேரத்தில் தினமும் 100 ரூபாய் செலவாகும். அப்படியென்றால், மாதம் 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தாக வேண்டும். வழக்கமாக, மாதாமாதம் ரெகுலர் செக்கப் செய்ய மருத்துவர் மெரில்ராஜிடம் வருவேன்” என்றார் அவர்.