Published:Updated:

`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு?" டென்ஷனில் வியாபாரிகள்

`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு?" டென்ஷனில் வியாபாரிகள்
`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு?" டென்ஷனில் வியாபாரிகள்

சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சியில் ஒரு கடை..இப்படிப் பல கடைகள் இயங்கி வந்தன. இவற்றில், சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ரத்னா ஸ்டோர்ஸுடன் பிசினஸில் ஆயிரக்கணக்கான டீலர்கள் இருந்து வந்தனர். இப்படி இருந்த நிறுவனம், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக வங்கிகள் குற்றம்சாட்டுகின்றன. டீலர்கள் தரப்பிலும் பண வரவு முன்பு போல இல்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கே.கே.நகர் கடை இப்போது சரியான செயல்பாட்டில் இல்லை. தாம்பரம், திருச்சியில் உள்ள கடை... உள்ளிட்ட சில கடைகள் கடந்த சில வருடங்களாகவே நிதிப் பிரச்னையில் சிக்கித்திவிக்கின்றன. பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அடைக்கமுடியாத சூழ்நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டனர். சொத்து, கடன்களைக் கணக்கெடுத்து செட்டில் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை நிர்வகிக்க லிக்கிவிடேட்டர் (கடனை அடைக்கும் வகையில் கணக்குகளைச் சரிபார்க்கும் சிறப்பு அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலைக்கு ஏன் தள்ளப்பட்டது என்று ரத்னா ஸ்டோர்ஸுடன் வியாபார நட்பில் இருந்த பிரபல கடைக்காரர் ஒருவர் கூறும்போது, " ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை நாங்கள் சப்ளை செய்தோம். சில வருடங்கள் ஆகியும், பொருளுக்கு உரிய பணம் வரவில்லை. இதோ - அதோ என்று இழுத்தடித்தனர். பிறகுதான் தெரியவந்தது...அவர்கள் திவால் ஆகிவிட்டதாக வியாபாரிகள் மத்தியில் செய்தி பரவிக்கிடக்கிறது. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும், அதிர்ந்துபோனோம். எங்களைப் போன்றவர்களிடம் வாங்கிய பொருளின் சிறு பகுதியை ரிட்டர்ன் எடுத்துப்போகச் சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம். கடன் கொடுத்த வங்கிகள் நடவடிக்கை எடுத்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் தரப்பில் கடையின் வருமானத்தை நேரிடையாக எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். வங்கிகள் சரி! எங்களைப்போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகள் பொருள்களைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறோம். எங்களுக்கு யார் உதவுவார்கள்? " என்று சோகத்துடன் கேட்கிறார். 

இதற்கிடையில், மத்திய வருவாய்துறை அதிகாரிகள் ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்து வரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதுபற்றி வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``நல்ல நிலையில் இயங்கிவந்த நிறுவனங்களிலிருந்து கிடைத்த லாபத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எங்கள் துறைக்கு வரவேண்டிய வருமான வரி தொகை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக, ஏற்கெனவே எங்கள் விசாரணை வளையத்தில் வந்தவர்கள்தாம் அந்தக் கடைக்காரர்கள். அவர்களிடம் விசாரித்தபோது, நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறனர். அதன்பேரில் நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். இப்போது வங்கிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியும். பொறுத்திருந்திருந்து பாருங்கள். யாரை ஏமாற்றினாலும், எங்களை ஏமாற்றவே முடியாது " என்றார். 

இதுபற்றி ரத்னா ஸ்டோர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரிடம் பேசினோம்...

``கஷ்டப்பட்டுச் சேர்த்த எங்கள் குடும்பப் பாரம்பர்யம்தான் ரத்னா ஸ்டோர்ஸ். எங்கள் குடும்பத்தினர் ஓயாது உழைத்து கடையின் பெயரையும் பொருள் தரத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினோம். உஸ்மான் ரோட்டில் தங்க நகைக்கடையை பத்து வருடங்கள் வெற்றிகரமாக நடத்தினோம். ஊர் ஊராகப் போய், மக்களின் தேவையை உணர்ந்து வீட்டுப்பொருள்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்தோம். நன்றாகத்தான் இயங்கி வந்தது. திடீரென, உஸ்மான் ரோட்டில் 26 கடைகளை சி.எம்.டி.ஏ. மூடினார்கள். அதில் எங்கள் கடையும் மாட்டி, மூன்று மாதங்கள் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளப்பெருக்கெடுத்து கடைக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து, வருமானவரித் துறை ரெய்டு...என்று விழி பிதுங்கியது. வேறு வழியில்லாமல், நகைக்கடையை மூடிவிட்டோம். இதற்கிடையில், வங்கிகளில் வாங்கிய கடன் பிரச்னை குறுக்கிட்டது. ஒரு தனியார் வங்கி, எங்களுக்குச் சொந்தமான சொத்து ஒன்றை எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமலே விற்று பணத்தை எடுத்துக்கொண்டதோடு, மேலும் 5 கோடி ரூபாய் கட்டவேண்டும் என்று கழுத்தை இறுக்கியது. இது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. சில வங்கிகள் திட்டமிட்டு எங்கள் கடையை முடக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி மற்றும் சில வரிகள் எங்கள் கடை பிசினஸுக்கு சவாலாய் அமைந்தன. சென்னையில் உள்ள தேசிய கம்பெனி டிரிபியூனல் டிவிஷன் பெஞ்ச் வரை பிரச்னை சென்றது. லிக்யூடேட்டரை நியமித்துள்ளனர். வங்கிகள் தரப்பினரையும் எங்களையும் அழைத்துப் பேசி வருகிறார். விரைவில் செட்டில்மென்ட் முடிந்துவிடும். இப்படியிருக்க.. உஸ்மான் ரோடு கடைக்கு சப்ளை செய்த டீலர்கள் 150 பேரை அழைத்து அவர்களது பொருள்களை எடுத்துப்போகச் சொல்லிவிட்டோம். நிதிச்சுமையை முடிந்தவரைச் சமாளித்து வருகிறோம். ஆனால், வங்கிகளில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கியின் டார்ச்சர் தாங்கமுடியவில்லை. கூடிய விரைவில் எல்லாம் சரியாகி பழையபடி எங்கள் கடையை நடத்துவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்றார். 

ஏன் இப்படித் திடீரென சரிவு ஏற்பட்டது?

ரத்னா ஸ்டோர்ஸ் தொடர்புடைய ஒருவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பினருடன் பிசினஸ் தொடர்பில் இருந்தாராம். அப்போது இவர் கொடிகட்டி பறந்தாராம். அந்த நபரும் மளமளவென்று வளர்ந்தாராம். ஆனால், திடீரென சசிகலா தரப்பில் தொடர்பு அறுந்துபோனதாம். அன்றுதான் சரிவு ஆரம்பித்ததாம். இதைச் சொல்லி ஆதங்கப்படுகிறார்கள் பாண்டி பஜாரில் உள்ள சில கடைக்காரர்கள். 

ரத்னா ஸ்டோர்ஸ் நிதிச்சுமையில் தள்ளாடுவதால், வாடிக்கையாளர்களுக்குப் பொருளாதார இழப்பில்லை என்றாலும், ஆதங்கம் இருக்கும். அதேநேரம், கடைகளுக்குப் பொருள்கள் சப்ளை செய்த சிறு வியாபாரிகள்தாம் கையைப் பிசைந்தபடி டென்ஷனில் தவிக்கிறார்கள்.