Published:Updated:

ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!

ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!

“பர்சனல் வேலையாக டெல்லி வந்துள்ளேன். கேள்வி களை அனுப்புங்கள்” என ஷேர்லக்கிடமிருந்து தகவல் வந்ததும் தயாராக வைத்திருந்த கேள்விகளை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த அரை மணி நேரத்தில் நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பியிருந்தார் ஷேர்லக்.

பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறதே?

“வெளிநாட்டு நிதி நிறுவனங் களின் முதலீடு மீண்டும் அதிகரிப்பு, உள்நாட்டு நிதி நிறுவனங்களின் (இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்) தொடரும் முதலீடு,  கடந்த ஒரு வார காலமாகக் குறைந்துவரும் கச்சா எண்ணெய் விலை, ஜூன் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சிறப்பாக வந்து கொண்டிருப்பது போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

பி.எஸ்.இ-யின் சென்செக்ஸ் முதல்முறையாக வியாழக்கிழமை 38000 புள்ளிகளைத் தாண்டி 38024-க்கு உயர்ந்திருக்கிறது. வங்கிப் பங்குகள் (ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ) விலை ஏற்றம் சென்செக்ஸ் புதிய உச்சத்துக்கு உதவியிருக்கின்றன.

சென்செக்ஸ் 37000-லிருந்து 38000-க்கு 10 வர்த்தக தினங்களில் உயர்ந்திருக்கிறது. இந்த 10 நாள்களில்,  15 பங்குகளின் விலை 20 - 50% வரை ஏற்றம் கண்டன. குறிப்பாக, என்.ஓ.சி.ஐ.எல், குவாலிட்டி, 8கே மைல்ஸ் சாஃப்ட்வேர் சர்வீசஸ், ரிலையன்ஸ் நாவல் அண்டு இன்ஜினீயரிங், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வினாதி ஆர்கானிக்ஸ், வெல்ப்சன் இந்தியா, ஐநாக்ஸ் லீசர்  மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் ஆதாயம் அடைந்தன.

ஷேர்லக்: சந்தை உச்சம்... நான்கு காரணங்கள்!

அதேபோன்று, ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளும் ஏற்றம் கண்டன. பி.எஸ்.இ ஸ்மால்கேப் இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ள 180-க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் மேற்கூறிய 10 வர்த்தக தினங்களிலேயே 10 - 50% வருவாய் தந்தன. இதில் 11 நிறுவனங்கள் குறிப்பாக, எலெக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் (55%), இண்டோ சோலார் (54%), குவாலிட்டி (54%) மற்றும் 8கே மைல்ஸ் சாஃப்ட்வேர் (50%) 40 சதவிகிதத்துக்கும் மேல் வருவாய் தந்தன.

மிட்கேப் பங்குகளை எடுத்துக்கொண்டால், இதே காலகட்டத்தில் 12 பங்குகளின் விலை 10 முதல் 33%  வரை உயர்ந்து காணப்பட்டது. இதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்டு ரீடெய்ல், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், அதானி பவர், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், டாரன்ட் பார்மாச்சூட்டிக்கல்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

அதேநேரத்தில், சென்செக்ஸ் 36000-லிருந்து 37000-க்கு உயர, 128 வர்த்தக தினங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.  இப்போது லார்ஜ்கேப் பங்குகள் விலை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், விரைவில் மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மிட்கேப் பங்குகள், அதன் சமீபத்திய சரிவிலிருந்து ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. அர்விந்த், ஐ.ஜி.எல், ஜூப்ளியன்ட் ஃபுட், ஆர்.பி.எல் வங்கி, இந்தியன் வங்கி, எம்.ஜி.எல் மற்றும் வோல்டாஸ் போன்ற நிறுவனங் களால் மிட்கேப் குறியீடுகள் மீள்வதற்கான பலத்தை அளிக்க முடியும் என அனலிஸ்ட்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், அமெரிக்கா - சீனா இடையே யான வர்த்தகப் போர், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற பாதகமான காரணங்களை முதலீட்டாளர்கள் மறந்துவிடக் கூடாது எனவும் அனலிஸ்ட்கள் எச்சரிக்கிறார்கள்.”

 ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனத்தின் தர மதிப்பீட்டை இக்ரா குறைத்துள்ளதே?

“கடன் சுமையில் தள்ளாடும் ஐ.எல் அண்டு எஃப்.எஸ் (IL&FS) நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் தர மதிப்பீட்டை ஏஏ+ என்ற அளவுக்குப் பிரபல தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா குறைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தர மதிப்பீடு இவ்வாறு குறைக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்குமுன், ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனத்தின் தர மதிப்பீடு நீண்ட காலம் ஏஏஏ-வாகத்தான் இருந்து வந்தது. இந்த நிறுவனம், இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப் படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும்.

எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, யு.ஐ.ஐ மற்றும் என்.ஐ.சி உள்ளிட்ட நான்கு பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்துவரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.”

 செம்கார்ப் எனர்ஜி ஐ.பி.ஓ வருகிறதே?

“மின் உற்பத்தி நிறுவனமான செம்கார்ப் எனர்ஜி நிறுவனமும், கட்டுமான நிறுவனமான மொன்டேகார்லோ நிறுவனமும் ஐ.பி.ஓ வெளியிடு வதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த  இரு நிறுவனங்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 39 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிட செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதில் செம்ப்கார் எனர்ஜி, ரூ.4,095 கோடி மதிப்பிலான புதிய   பங்குகள் மற்றும் தற்போதைய பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஆஃபர் ஃபார் சேல் முறையில் 14.67 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது.’’

பிரிட்டானியா நிறுவனம், பங்கினைப் பிரிக்கப்போவதாக  அறிவித்துள்ளதே?

“பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, அந்த நிறுவனம் புதிய லோகோவைத் தேர்வு செய்துள்ளது. மேலும், இன்னும் சில ஆண்டுகளில் சந்தையில் தனக்குப் போட்டியாக உள்ள பார்லேஜியைத் தோற்கடித்துவிட்டு, இந்தியாவின் முதல் பிஸ்கட் பிராண்டாக ‘குட்டே’ வந்துவிடும் என்றும் அது நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்,  100 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பங்குப் பிரிப்பை (ஷேர் ஸ்பிளிட்) அறிவித்துள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, பங்கு ஒன்றின் விலை குறையும். மேலும், பங்குதாரர் களுக்கு ரூ.720 கோடிக்கு போனஸ் கடன் பத்திரங் களை அறிவித்துள்ளது.”

 ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்துள்ளதே?

கடந்த  திங்களன்று தேசியப் பங்குச் சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனத்தின் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான 1,100 ரூபாயைக் காட்டிலும் அதிகமாக 1,738 ரூபாய் என்ற விலையில் பட்டியலிடப்பட்டு, பின்னர் 1,816 ரூபாய்க்கு உயர்ந்தது. அதாவது, பங்கின் விலை 65% அதிகரித்து, அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.38,497 கோடியாக அதிகரித்தது.

சமீப காலமாக வெளியிடப்பட்ட பல்வேறு ஐபிஓ-கள் பட்டியலிடப்பட்ட அன்று முதலீட்டாளர்களுக்கு இருமடங்குக்கும் அதிகமாக லாபம் கொடுத்துள்ளன. குறிப்பாக, 2017 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஆஸ்ட்ரான் பேப்பர் 128%, 2017 ஜூலையில் வெளியிடப்பட்ட சல்சார் டெக்னாலஜி 140% மற்றும் 2017 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் 103% அளவுக்கு லாபம் கொடுத்துள்ளன.”

காகிதத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபம் ஈட்டியுள்ளதே?

“சர்வதேச அளவில் காகிதத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில், அதற்கான தேவை களும் அதிகரித்துள்ளதால், கடந்த சில ஆண்டுகளாகச் சுணக்கத்தில் காணப்பட்ட இந்தியக் காகிதத் தயாரிப்புத் துறை புத்துணர்வு பெற்றுள்ளது. திங்களன்று காகிதத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. குறிப்பாக, ருச்சிரா பேப்பர் 13%, ஓரியன்ட் பேப்பர் 8%, ஜேகே பேப்பர், ராம் நியூஸ் பிரின்ட் மற்றும் ஸ்டார் பேப்பர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள்  விலை தலா 7% ஏற்றமடைந்து காணப்பட்டன.’’

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் உதவி நிர்வாக இயக்குநர் பரேஷ் சுதாங்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரே!

‘‘பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இந்தச் செய்தி இருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் ஆரம்ப காலத்தி லிருந்தே அவர் இருக்கிறார். இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆதித்ய புரி வருகிற 2020-ல் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, இவர்தான் அந்தப் பதவிக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
 
கடந்த வாரம் ஒரு முக்கிய நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர், ஆதித்ய புரியைச் சந்தித்தபோது, அந்த வங்கியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும், சுதாங்கரிடம் அடுத்த தலைமை செல்லும் என்றும் சொல்லி யிருந்தாராம்.

இந்த நிலையில், சுதாங்கரின் ராஜினாமா பெரும் அதிர்ச்சியாக வந்து சேர்ந்திருக்கிறது. ராஜினாமாக் கடிதம் தந்ததிலிருந்து 90 நாள்கள் வரை அவர் இந்தப் பதவியில் இருப்பாராம். ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநராக யாரை நியமிப்பது என்கிற    கேள்வி பிறந்துள்ளது.’’

மோசடிகள்மூலம் வங்கிகள் இழந்த தொகை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதே?

“2017-18-ம் நிதியாண்டில், பல்வேறு வகையான மோசடிகள் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இழந்துள்ள தொகை ரூ.32,048 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், அதற்கு முந்தைய நிதியாண்டில் இது ரூ.23,930 கோடியாக இருந்தது என்றும் மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி சமர்ப்பித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு, முந்தைய நிதியாண்டில் காணப்பட்ட ரூ.19,529 கோடியிலிருந்து ரூ.29,246 கோடியாக அதிகரித்து உள்ளது. எஸ்.பி.ஐ வங்கியைப் பொறுத்தவரை, மோசடிகள் 794-லிருந்து        981-ஆக அதிகரித்துக் காணப்பட்டாலும் இழப்புத் தொகை, ரூ.3036 கோடியிலிருந்து ரூ.2,542 கோடியாகக் குறைந்துள்ளது.”

ரெரா சட்டத்தினால்  ரியல் எஸ்டேட் நிறுவனப்  பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளனவே?

“ரியல் எஸ்டேட்டை ஒழுங்குபடுத்தும் ரெரா சட்டம் அமலான ஓராண்டுக்குப்பின்னர், ரியல் எஸ்டேட் துறை ஒருவழியாக முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் ஏழு முக்கிய நகரங்களிலுள்ள 10 முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புதிய குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டுவதும் விற்பதும் கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளன. ரியல் எஸ்டேட் துறையின் மொத்தச் சந்தை மதிப்பில் இந்த 10 முன்னணி நிறுவனங்களின் புதிய கட்டுமானம் மற்றும் விற்பனைக்கான பங்களிப்பு 2016-ம் நிதியாண்டில் 19%, 2017-ம் நிதியாண்டில் 24 சதவிகிதமாக காணப்பட்ட நிலையில், 2018-ம் நிதியாண்டில் 40% அதிகரித்துள்ளது.

சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைத் தொட்டுள்ளதை நாம் கொண்டாட வேண்டும். இனிவரும் காலத்தில் சந்தை புதிய உச்சத்தை எட்டும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது’’ என்கிற பாசிட்டிவ் செய்தியுடன் முடித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism