Published:Updated:

முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்!

முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்!

முதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

சொத்து என்றால் நிலம் அல்லது தங்க நகைகள் தான் நம்மில் பலருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சொத்து என்பதை அதன் தன்மை, வருமானம், பணமாக்குதல் (liquidity) போன்றவற்றைப் பொறுத்து சில வகைகளாகப் பிரிக்க முடியும். அதாவது, பணம் மற்றும் மூலதனச் சொத்துகள், தேய்மானம் அடைகிற மற்றும் வளர்கிற சொத்துகள் (Appreciating & Depreciating Assets),  அசையும் மற்றும் அசையா சொத்துகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மூன்று வகை சொத்துக்களும்  ஒவ்வொரு முதலீட்டாளருக்கேற்ற வகையில் சரியான கலவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். 

 பணச் சொத்துகள் (Cash Assets)

பணச் சொத்துகள் என்பது குறுகிய கால மற்றும் நடுத்தர கால அடிப்படையில் அதாவது, மூன்று வருடங்கள் வரை,  நமது தற்போதைய தேவைகளுக்குப் பிரதானமாக உதவுவதாக இருக்கும். பணம் என்பது நமக்குத் தேவையான அத்தியாவசிய மான பொருள்களை வாங்கவும், வசதியாக மற்றும் ஆடம்பரமாக வாழவும் உதவுவதால், பணம்தான் ‘ராஜா’வாகப் (Cash is King) பார்க்கப்படுகிறது.  அது உணவாகட்டும், சுகாதாரமாகட்டும், கல்வி அல்லது சுற்றுலாவாகட்டும், எதுவானாலும் ஒருவரின் தற்போதைய தேவையை உடனடியாக நிறைவேற்ற உதவுகிறது.

முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்!

நமது மக்களிடம் நன்கு அறிமுகமான சில வகை பணச் சொத்துகள் என்றால், பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள், மணிபேக் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் போன்றவற்றைச் சொல்லலாம். பணச் சொத்துகள் பொதுவாகப் பாதுகாப்பானதாகவும், மிதமான வருமானம் தருவதாகவும், உங்களது வருமான வரம்பின் அடிப்படையில் வரி விதிக்கப்படுவதாகவும் உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலான செலவு களுக்குரிய பணச் சொத்துகளை நீங்கள் வைத்திருக்க வேண்டியதில்லை.  ஆனால், நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், சும்மா கிடக்கும் நிலம் போன்ற பிசிக்கல் (Physical) சொத்துகளைப் பணமாக மாற்றி வைத்துக்கொள்வது நல்லது. அப்படி மாற்றி வைத்துக்கொண்டால்தான், நீங்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு வரும் இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு நிலையான ஓய்வுக்கால வருமானத்தைப் பெற முடியும். 

   மூலதனச் சொத்துகள் (Capital Assets)

பிசிக்கல் சொத்துகளான நிலம், தங்கம் மற்றும் மூலதனச் சந்தை சார்ந்த நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும்  மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அனைத்து வகையான  சொத்துகளுமே மூலதனச் சொத்துகள்தான்.

பல்வேறு பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களுக்காகத்தான் மூலதனச் சொத்துகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. உதாரணமாக, ஒரு வீடு வாங்குவது வாடகையை மிச்சப்படுத்தி, உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறது. நம்மில் சிலர் குறுகிய கால அல்லது நடுத்தரக் காலத்தில் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைத்து  வீடு அல்லது நிலத்தில் முதலீடு செய்யலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்!

பணவீக்கத்தைச் சமாளிக்க மூலதனச் சொத்துகள் உதவும் என்றாலும், அவை சற்று அபாயத்துக்குரியதாகவும், அவற்றின் வருவாய் என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாததாகவும் இருக்கின்றன. புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம்  தாமதமானால், சில கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். காலிமனைகூட சில சமயங்களில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சட்டச் சிக்கலைச் சந்திக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். 

இதனால் இந்தச் சொத்துகளிலிருந்து ஏதாவது ஒரு மறைமுக வருவாயை உருவாக்க முடியாமல் நாம் முடக்கப்பட்டுவிடுகிறோம். இந்தச் சொத்தை மீண்டும் விற்பது அல்லது கட்டிமுடிக்கப்பட்ட வீட்டின்மூலம் மட்டுமே நமக்கு வருமானம்  கிடைக்கும். வாடகைக்கு வசிப்பவர் காலி செய்ய மறுத்தால்கூட சிக்கல்தான் உருவாகும்.

ஆக, வரி செலுத்துபவரின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், மூலதனச் சொத்துகள் - வீட்டுக்கு 2 ஆண்டுகள், பங்கு மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு 1 ஆண்டு, கடன் பத்திரங்களுக்கு 3  ஆண்டுகள் - நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யப் பட்டால் அது வரி விலக்கு  பெற ஏற்றதாக இருக்கும்.  
 
   தங்கம்

பெரும்பாலான குடும்பத்தினர் தங்கத்தை நகைகளாகத்தான் வாங்கு கின்றனர். அதேசமயம், பிசினஸ் குடும்பத்தினர், தங்களது தொழிலில் திடீர் பணத்தேவைகள் ஏற்பட்டால், அதைச் சமாளிக்கும் உத்தியாகத் தங்கத்தை பார்களாக வாங்குகின்றனர். இந்தச் சொத்து பல நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன், அனைத்து மூலதனச் சொத்துகளிலும் இதுதான் மிகவும் பாதுகாப்பான சொத்து என்று  நம்பப்படுகிறது.

ஆனாலும், நகைகள் இடைக்காலத்தில் வருமானம் எதுவும் தருவதில்லை. மேலும், பெரும்பாலான குடும்பங்களில் தங்கம் ஒருபோதும் விற்கப்படுவதில்லை என்பதுடன்,  ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது நம்மிடம் இருக்கும் செல்வத்தைப் பறைசாற்றுவதற்கான ஒருவழி மட்டுமே.

ஆனால், தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பண வீக்கத்தைத் தோற்கடிப்பதில்லை. எனவே, உங்களது மொத்த சொத்தில் 10% மட்டுமே தங்கம் என்ற அளவுக்குக்  குறைத்துக்கொள்ளுங்கள்.

முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்!

  பங்குகள்/கடன் பத்திரங்கள்/மியூச்சுவல் ஃபண்டுகள்

மூலதனச் சந்தை (Capital Market) சார்ந்த எல்லா முதலீட்டுத் திட்டங் களுமே மூலதனச் சொத்துகளின் கீழ்தான் வரும். பங்குச் சந்தையின் செயல்பாடு ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால்,   இத்தகைய முதலீட்டுத் திட்டங்களும் ரிஸ்க் நிறைந்ததாக இருப்பதுடன், அதன் காரணமாகவே அதிக வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. மேலும், பல்வேறு  ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், சாமான்ய மக்கள் பல ஆண்டுகளாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யாமலே இருந்துள்ளனர்.

ஆனால், சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் பங்குச் சந்தை தொடர் பான நடைமுறைகள் பலவும் கடந்த 10 -15 ஆண்டுகளில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நிதித் திட்டங்களைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவும் வகையில், முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பங்குச் சந்தை தொடர்பான மூலதனச் சொத்துகள் வரி விலக்கு பெறுவதற்கு இணக்கமாக இருப்ப தால், உபரியாக இருக்கும் பணத்தை அவற்றின் மீதான வரியைக் குறைக்க, குறுகிய கால, அதிக ரேட்டிங் கொண்ட கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு (Short term debt funds) மாற்றலாம். பிசினஸ் செய்பவர்கள் கூட, அவர்களது உபரிப் பணத்தை கரன்ட் அக்கவுன்ட்டில் அதிகம் வைத்திருப்பதைவிட, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, 7% வருமானம் பெறலாம்.

   கலவையான சொத்துகளை உருவாக்குங்கள்

பல்வேறு சொத்துகள் குறித்து புரிந்துகொள்ளும்முன்பு,  ஒவ்வொரு சொத்துக்கும் எவ்வளவு ரிஸ்க் உள்ளது, அது தரும் வருமானம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொண்டு, ஒவ்வொரு முதலீட்டாளரும் கவனமுடன் தங்களது கலவையான சொத்துகளைத் (Asset Mix) தேர்ந்தெடுப்பது அவசியமானது.

வேறு யாரோ ஒருவருடைய வருமானத்தைக் காட்டிலும் நீங்கள் சம்பாதிக்கும் வருமானம் அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பது ஒரு விஷயமே அல்ல. உண்மையான விஷயம் என்னவெனில், குறிப்பிட்ட சில சொத்து வகைகளை வைத்திருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா, இல்லையா என்பதுதான்.

எல்லாவற்றிற்கும் மேல், நீங்கள் விரும்பும் அளவுக்கு வருமானம் கிடைத்தாலும், இந்தச் சொத்துகளுக்கு உரிமையாளர் என்ற அடிப்படையில் நீங்கள் மனஅமைதியுடன் இருப்பதும் அவசியம்.

நாம் இதுவரை பார்த்த சொத்துகளில் எவை உங்கள் போர்ட்‌ஃபோலியோவின் மதிப்பினைக் கூட்டும், எவை உங்கள் போர்ட்‌ஃபோலியோ மதிப்பினைக் குறைக்கும் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் நாம்  விரிவாக ஆராய்வோம்.

(ரகசியம் தொடரும்)

- தமிழில் பா.முகிலன்