Published:Updated:

காபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?
காபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

பங்குச் சந்தை

பிரீமியம் ஸ்டோரி

‘‘பங்குச் சந்தை என்பது நல்ல செய்திகளை மட்டும் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் கொண்டு சேர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற தோற்றமுடையது. ஏனென்றால், முதலீடு சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும், சந்தை உயர்ந்தால் மட்டுமே பெருமளவு வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருப்பவை. அதேபோல, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள்மூலம் மூலதனம் திரட்டும் நிறுவனங்களும் நல்ல செய்திகளைச் சொன்னால் மட்டுமே தேவையான நிதி கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த இயங்குவியலே சந்தையில் காரணகாரியங்கள் இல்லாத மாய நிலையான உச்சபட்ச நீர்க்குமிழி (Bubble) நிலையையும், அதன்பின்னால் அது வெடித்துச் சிதறி ஒன்றுமில்லாமல் போகும் நிலையையும் அவ்வப்போது தவறாமல் கொண்டுவருகிறது. இதனாலே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் யாரெல்லாம் தங்களுடைய தேவையைத் திட்டவட்டமாக அறிந்தும், எப்போதுமே தேவையான அளவு சந்தேகத்துடனும் செயல்பட்டு வருகின்றனரோ, அவர்கள் மட்டுமே இந்த மந்தைக்கூட்டத்தின் உற்சாகக் கூச்சலையோ அல்லது சோகக் கூப்பாடுகளையோ காதில் போட்டுக்கொள்ளாமல் தெளிவான முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர்.”

காபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

இந்த வாசகங்கள் ஹோவர்ட் ஷில்ட் (Howard Schilit)  என்பவர் எழுதிய 2018-ல் வெளியான ‘ஃபைனான்ஷியல் ஷெனானிகன்ஸ் (Financial Shenanigans)’ என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் பொதிந்த வார்த்தைகளாகும்.

மதிப்பு உயரும் டாலர், ஏறும் கச்சா எண்ணெய், அதிகரிக்கும் அரசின்  செலவுகள் (அதனால் நன்றாக உயரும் மக்களின் நுகர்வு) போன்றவற்றுடன் கூடிய அதிக அளவிலான வரி வசூல் போன்ற நிகழ்வுகளால் நிச்சயம் வட்டி விகித உயர்வினை எதிர்பார்க்கலாம் என இந்தத் தொடரில் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். காசா (CASA) எனப்படும் கரன்ட்  அக்கவுன்ட் மற்றும் சேவிங்க்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் நிதிகளினால் கட்டமைக்கப்பட்ட அரசுடமை வங்கிகள் வாராக் கடனில் தவிக்கும் சூழ்நிலையில் இருப்பதால், இன்றைக்கு நிதிச் சந்தை என்பது இந்தியாவிற்கு மிகமிக முக்கிய மானதாக உருவெடுத்துவிட்டது. அந்த அடிப்படையில் இந்த வாரம் நாம் பார்க்கப்போவது நிதிச் சந்தையில் உருவாகும் பண நெருக்கடியும், வட்டிவிகித உயர்வும் எப்படி நிறுவனங்களின் கணக்குவழக்கு களில் இருக்கும் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது என்பதைத் தான். என்ரான், வேர்ல்டு காம், சத்யம் மற்றும் மெட்ஆஃப் போன்ற ஊழல்கள் எப்படி ஒளித்து வைக்கப்பட்ட மறை விடத்தில் இருந்து வெளியே தெரியவந்தது?

நிறுவனங்களின் கணக்குவழக்கு ஊழல்களெல்லாம் பங்குச் சந்தை சரிய ஆரம்பித்து, வட்டி விகிதம் உயரும்போது மட்டுமே வரலாறு காணாத அளவு வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு, சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளி வந்தது. லெமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவால் என்று அறிவித்த நான்கு மாதத்திற்குப்பின்னால் வந்த நிதிச் சந்தை நெருக்கடியே இதற்குக் காரணம்.

பகலுக்குப்பின் இரவு வரும் என்பது எந்த அளவு உறுதியோ,  அதுபோல நிதிச் சந்தையில் நெருக்கடி நேரும்போதெல்லாம் இதுமாதிரியான விஷயங்கள் நடக்கவே  செய்கின்றன.

காபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

எதனால் இப்படி நடக்கிறது? இதற்கு மூன்று விஷயங்களைக் காரணமாகச் சொல்லலாம்.  நிறுவனங்களின் கணக்குவழக்கு களில் பித்தலாட்டம் என்பது புரமோட்டர்கள் பணத்தைச் சுருட்டிக்கொண்டு போக நினைப்பதால் ஏற்படுகிறது. நிதிச் சந்தையில் பணம் தாராளமாக கிடைக்கும்போது வெளியே குறைந்த காலக் கடனை தங்களுடைய பெயரில் வாங்கி நிறுவனத்திற்குள் ஏதாவது ஒரு வழியில் கொண்டுவந்து இந்த விதப் பிரச்னைகளை அவ்வப் போது நேர் செய்துவிடுகின்றனர். அல்லது நிறுவனமே குறுகிய காலக் கடனை வாங்கித் தேவைப் படும் போதெல்லாம் சரியாகப் போவதுபோல் காட்டி விடுகிறது.

ஆனால், நிதிச்சந்தையில் பணப்புழக்கம் கடுமையாக வற்றிவிடும்போது குறைந்த காலத்திற்கான கடன் கிடைப் பதில் கடும் தட்டுப்பாடு உருவா கிறது. அதனால் பணமில்லாமல் நிறுவனம் தடுமாற பணி யாளர்கள், சப்ளையர்கள், கடன் அளித்தவர்கள் என எல்லோரும் கூக்குரலிட ஆரம்பிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் புரமோட்டர்கள் தலைமறைவாகி விடுகின்றார்.

இரண்டாவதாக, புரமோட்டர்கள் வாங்கும் கடன்களுக்கு நிறுவனத்தில் தான் வைத்திருக்கும் பங்குகளை அடமானமாக வைக்கின்றனர். நிதிச் சந்தையில் வரும் நெருக்கடி பங்கின் சந்தை விலையில் சரிவை உண்டுபண்ணும் (அதனால் விலைச் சரிவிற்கு ஈடு செய்யும் வகையில் கூடுதல் பங்கு களையோ அல்லது  கூடுதல் மார்ஜின் தொகையையோ கடன் வழங்கியவர்கள் கேட்க ஆரம்பிக்கின்றனர்).

அதேசமயம், கடனை அடைக்க பணம் புரட்ட முடியாத நிலைக்கு புரமோட் டர்களை தள்ளி விட்டுவிடுகிறது. ஏற்கெனவே நிறுவனத்தின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் புரமோட்டர்களைக் கடன்காரர் கள் துரத்த ஆரம்பிக்கின்றனர்.

ஆகஸ்ட் 2017-லிருந்து நிதிச் சந்தையில் வட்டி விகிதம் உயர ஆரம்பித்தது. இது நடக்க ஆரம்பித்து ஆறுமாதக் காலத்திற்குபின்  இந்தியாவின் இரண்டு முன்னணி நகைக்கடை அதிபர்கள் தலைமறை வானார்கள் என்பது தற்செயலாக நடந்த விஷயமாகத்தோன்றவில்லை.

இந்தியாவில் பங்கு விலைகளும், அசையாத சொத்தின் விலைகளும் ஏதாவது அதிசயத்தின் மூலமாக உடனடியாகப் பெரிய ஏற்றத்தைச் சந்திக்காதபட்சத்தில், இன்னமும் பல நிறுவனங்களின் புரமோட்டர் களுக்கு இந்தவகை சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

மூன்றாவதாக, வேகமாக வளரும் பொருளாதாரத்தில் நிஜமாகவே அதிகரிக்கும் வியாபாரத்தின் அளவின் காரணமாக நிறுவனத்தின் ‘வொர்க்கிங் கேப்பிட்டல்’ தேவை அதிகரிக்கவே செய்யும். அதனாலேயே பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடையும் வேளையில், பங்கு முதலீட்டாளர் களும், ஆடிட்டர்களும், கடன் வழங்குபவர்களும் நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் குறைந்தகால கடனை அதிகரித்துக்கொள்வதைப் (புரமோட்டர்கள் பணத்தை வேறு சொந்த விஷயத்திற்காக ஒதுக்கிக் கொண்டிருக்க வாய்ப்பிருப்பதை) பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. வட்டி விகிதம் உயர்ந்து ஏற்ற இறக்கம் நிச்சயமாக வரும் என்ற நிலைகொண்ட பொருளாதாரம் சுணக்கத்தைச் சந்திக்கும்போது இலைமறை காய்மறையாக நடந்துகொண்டிருந்த இந்தத் தில்லுமுல்லுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.

இன்றைக்குத் தவறான சான்றிதழ்களை அளித்தால், தங்களுடைய பெயரும் தொழிலும் கெடும் என்பதை உணர்ந்த ஆடிட்டர்கள் இந்தவிதமான தில்லு முல்லுகள் அடங்கிய எக்கச்சக்கமான வரவேண்டிய தொகையைக் காட்டுகிற நிதிநிலை அறிக்கைகளுக்குத் தணிக்கை சான்றிதழை தரமறுக்கின்றனர்.

காபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

2018-லிருந்து மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஆடிட்டர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதால், இந்தவித சான்றிதழ் மறுப்பு அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. அதனால் புரமோ்ட்டர்களின் தில்லுமுல்லுகள் அதிக அளவில் வெளிவரக்கூடும்.

இதனால் ஏற்படும் முதலீட்டிற்கான தாக்கங்கள் என்ன என்பதைப் பார்ப்பது அவசியம்.

கடன் என்பது, கடன் தருபவர்களிடம் இருந்து (தனியார், அரசு மற்றும் என்.பி.எஃப்.சி நிறுவனங்களில் இருந்து) அபரிமித மான அளவில் குறைந்த வட்டியில் தாராளமாகக் கிடைக்கிறது என்பதற்காகவே வாங்கி பல்வேறு சொந்த காரணகாரியங் களுக்குப் பயன்படுத்தி வருகிற, கொஞ்சம் எசகுபிசகான கணக்குவழக்குகளை வைத்துக்கொண்டிருக்கும் புரமோட்டர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குச் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளன.

அடுத்த சில மாதங்களுக்குள் வட்டிவிகிதம் குறைந்து, (உதாரணத்திற்கு, கச்சா எண்ணெய் விலை எதேச்சையாக வீழ்ச்சியடைவது போன்ற காரணத்தினால்) வட்டி மற்றும் நிதிச் சந்தையின் சூழல் சரியாகாவிட்டால், கணக்குவழக்குகளில் தில்லுமுல்லுகளைச் செய்து நிறுவனத்தின் நிதிதனில் சித்து விளையாட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் புரமோட்டர்களுக்குக் கெட்ட காலம் மிக அருகில் இருக்கிறது என்றே சொல்லலாம்!

- செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)

ஊழலும் சந்தை சரிவும்!

உலகப் புகழ் என்ரான் ஊழல் அக்டோபர் 2001-ல் வெளிவந்தது. அது வெளிவருவதற்குமுன், அமெரிக்க பங்குச் சந்தையில் டாட்காம் குமிழ் வெடித்து (தொடர் ஏற்றத்துக்கு பிந்தைய கடுமையான வீழ்ச்சி) 15  மாதத்திற்குப் பின் இது வெளியானது. 9/11 தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்குப்பின் அமெரிக்க சந்தை சந்தித்த வீழ்ச்சியின்போது வேர்ல்டுகாம் நிறுவனம் திவால் அறிக்கையைத் தாக்கல் செய்தது. பெர்னி மேட்ஆஃப் (Bernie Madoff) தன் முதலீட்டு மேலாண்மை நிறுவனம் ஒரு பொன்சி திட்டம் என்று வாக்குமூலம் அளித்தது லெமேன் பிரதர்ஸ் வீழ்ச்சியடைந்த மூன்று மாதங்களுக்குப் பிறகுதான். ஆக, நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்குச் சற்றுமுன் அல்லது பின்தான் சந்தை சரிவு வருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு