Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

வாஷிங்டன் டி.சி / மும்பை

ஏட்ரியன் சென்றபோது எஃப்.பி.ஐ சைபர் கமாண்ட் யூனிட்டின் தலைமையதிகாரி எட் வால்ஷ் அவரது அலுவலகத்தில் இருந்தார்.

‘`ஏஜென்ட் ஸ்காட், நீங்கள் என்னைப் பார்க்க வருவதென்றால், ஏதோ மிகப் பெரிய விஷயம் ஒன்று நடந்திருக்க வேண்டும்’’ என எட் தனது உரையாடலை ஆரம்பித்தார். அவருக்கு ஏட்ரியனை  அவ்வளவாகப் பிடிக்காது. இருந்தாலும், ரைஃபிளைக் கையாள்வது, கிரிமனல்களைத் சுட்டுத்தள்ளுவது மற்றும் அனைவரையும் கவரக்கூடிய காரியங்களைக் களத்தில் இறங்கிப் பண்ணக்கூடிய பிரபலமான ஏஜென்ட்டாக இருந்தார் ஏட்ரியன். ஆனால், மூளையை உபயோகித்து வேலைகளைச் செய்யும் எட் அந்த அளவுக்குக் கவனம் பெறாதவராக இருந்தார்.

‘`காட்டன் ட்ரெய்ல்.’’ ஏட்ரியன் அதைச் சொல்லிவிட்டு எட்-டைப் பார்த்தார். அவரோ ஏட்ரியன் கூறியதை அசட்டையாகக் கேட்டார்.

‘`காட்டன் ட்ரெய்ல் பற்றி என்ன வேண்டும்?” எட் கேட்டார்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

‘`அது குறித்து எஃப்.பி.ஐ-க்கு என்னவெல்லாம் தெரியுமோ, அதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.

‘`உங்களுக்கு ஏன் அது பற்றி தெரிய வேண்டும்? யாருடனும், என் சக அதிகாரிகளிடம்கூட அது பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்வதற்கான அதிகாரம் எனக்கில்லை’’ என்றார்.

‘`ஜில்லியன் டான் கொலைக்கும், காட்டன் ட்ரெய்லுக்கும் தொடர்பு இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.’’

‘`பெரும்பாலான தகவல்கள் க்ளாஸிஃபைட் வகையைச் (ரகசியப் பாதுகாப்புக்கு உட்பட்டது) சேர்ந்தது. உங்களுடைய பணி நிலைக்கு மேலானது அது, ஏஜென்ட் ஸ்காட்.’’

‘`நீங்கள் என்னிடம் அதுகுறித்து பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில், யாருடைய உத்தரவு உங்களுக்குத் தேவை? அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவு போதுமா?”

‘`ஓ… ரொம்ப பெரிய பெயரெல்லாம் சொல்றீங்க!”

‘`ஜில்லியன் அவருடைய நம்பிக்கைக்குரியவர். மாற்றுச் செலாவணி (Alternate Currency) சம்பந்த மான க்ளாஸிஃபைட் கமிட்டியில் ஜனாதிபதிக்காக வேலை செய்துகொண்டிருந் தவர் குறிப்பாக, பிட்காயின் சம்பந்தமாக’’ என்றார்.

‘`நாங்கள்தான் சைபர் கமாண்ட் ஆக இருந்தாலும், அதைப்பற்றி யாரும் எங்களிடம் சொல்லவில்லை.’’

‘`ஒருவேளை, அது உங்களுடைய பணி நிலைக்கு மேலான விஷயமாக இருந்திருக்கலாம் எட்’’ என்று சொல்லி, சற்று நேரத்துக்கு முன்பு அவர் தன்னைப் பற்றி அடித்த கமெண்டுக்கு பதில் கமெண்ட் அடித்துப் பழி தீர்த்துக்கொண்டார் ஏட்ரியன். ‘`இதெல்லாம் இப்போது சொல்லாதீர்கள். இந்தப் படுகொலை சம்பந்தப் பட்ட விசாரணை குறித்து ஜனாதிபதி ஒவ்வொரு வாரமும் கேட்டுக் கொண்டிருக்கிறார். சைபர் கமாண்டில் இருக்கும் எட் வால்ஷ் என்பவர் வேண்டிய தகவலைத் தர மறுப்பதால், கொலைகாரர்களைப் பிடிக்க முடிய வில்லை என்பதை ஜனாதிபதியிடம் சொல்லிவிடலாமா?’’ என்றார் ஏட்ரியன்.

ஏட் வால்ஷ் சிரித்துக்கொண்டே, ‘‘இது இணக்கமாகத்தான் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றவர், தான் இருந்த அறையிலிருந்து வெளியே சென்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

தான் சொல்வது உண்மைதானா என்பதை போன் செய்து தெரிந்துகொள்ளவே அவர் போகிறார் என்பது ஏட்ரியனுக்குத் தெரியும். அவர் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தார். ‘`சாயந்திரம் ஆறு மணிக்கு என்னைச் சந்தியுங்கள். இப்போது எனக்கு வேலை இருக்கிறது, மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வாஷிங்டன் டிசி

கேப்பிட்டல் ஹில் பகுதியில் இருக்கும் ரோட்டோரத்து கஃபே ஒன்றில் ஏட்ரியன், எட்-டைச் சந்தித்தார். முழுவதும் காகிதங்களால் நிரப்பப்பட்ட ஒரு பெரிய ப்ரீஃப்கேஸை எட் கொண்டு வந்திருந்தார்.

‘`ஏட்ரியன், இது உங்களைக் கொன்றாலும் கொன்றுவிடும், ஜாக்கிரதை!” என்றார் எட்.

‘`நாம் தலைமை அலுவலகத்திலேயே சந்தித் திருக்கலாமே, ஏன் இங்கே..?”

‘‘இது ஒரு அலுவலக ரீதியிலான சந்திப்பாக இருப் பதில் எனக்கு விருப்பமில்லை. என்னைக்  கண்காணிக் கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். காட்டன் ட்ரெயில் சம்பந்தமாக எதுவும் நடக்கக் கூடாது என்பதில் அக்கறை கொண்ட சில `உளவாளிகள்” எஃப்.பி.ஐ–லேயே இருக் கிறார்கள். அவர்களுக்கு கமர்ஷியல் இன்ட்ரஸ்ட் இருக்கலாம் என்பது என் யூகம். ட்ரக் மாஃபியாவைப் பாதுகாப்பதற்காக அவர்கள் எந்த அளவுக்கும் செல்லத் தயாராக இருப்பார்கள்” என்றார்.

‘`தாங்க்ஸ், எட்.’’

‘`இதோ அனைத்துப் பேப்பர்களும் இதில் இருக்கிறது. காட்டன் ட்ரெயில் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும், அதுபற்றி நாம் இதுவரை என்ன கண்டுபிடித்திருக்கிறோம் என்பது பற்றிய விவரங்களும் இருக்கிறது.’’ அவர் கொஞ்சம் கழுத்துக்கு சிரமம் கொடுக்கும் வகையில் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்கொண்டு, கையை உயர்த்த வெயிட்டர் வந்து என்ன வேண்டுமென்று விசாரித்துவிட்டு, இரண்டு காபி கப்புகளுடன் வந்தார்.

‘`காட்டன் ட்ரெயிலை இயக்குவது யார்?”

‘`நாம் அதை விரைவில் கண்டு பிடிப்போம். இப்போதைக்கு, யாரென்று சரியாகத் தெரியவில்லை.”

‘`நமக்கு எது தெரிந்தால், அது ஜில்லியன் டான் கொலை வழக்கைத் தீர்க்க வழிவகுக்கும்?”

‘`சென்ற மாதம், சி.ஐ.ஏ-வுடன் எஃப்.பி.ஐ-யும் சேர்ந்து பிரான்சில் இருக்கும் ஒரு சர்வரை ஹேக் செய்தார்கள்’’ என்று ஏட்ரியன் சொல்ல ஆரம்பித்ததை இடைமறித்தார் ஏட்.

‘`ஆமாம், பிரான்சில் இருக்கும் ஃப்ரீடம் ஹோஸ்ட்டிங் என்கிற சர்வரை ஹேக் செய்தார்கள். அது மறைமுகமான இணையதளம். .onion என முடியும் பிரத்யேகமான இணையத்தளங்கள் குறித்த தகவல்கள் வழங்கும் ஒரு டர்ன்கீ சேவையாகும். டார் (TOR) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும் தானே? மறைமுகமான TOR இணைய தளங்கள் ஏமாற்றுவதற்காக உபயோகிக்கப்படுவது… இதை நாங்கள் ஹேக் செய்யக் காரணம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட போர்னோக்ராபியில் 90% இணைய தளங்களை ஃப்ரீடம் ஹோஸ்டிங்தான் ஹோஸ்ட் செய்கிறது.”

‘`ம்ம்ம்…’’ விஷயத்துக்கு வா, விஷயத்துக்கு வா என்று ஏட்ரியனின் மனம் உள்ளுக்குள் கத்திக் கொண்டிருந்தது.

‘`ஃப்ரீடம் ஹோஸ்டிங் சர்வர் காட்டன் ட்ரெயிலுக்கு அதனுடைய ஒருபகுதியை வாடகைக்குத் தந்திருந்தது.’’

‘`வாட்? காட்டன் ட்ரெயிலை யார் ஹோஸ்ட் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

‘`ஆமாம்’’. எட் தலையாட்டினார்.

‘`நீங்கள் ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை?”

‘`இரண்டு காரணங்கள். சமீபத்தில் அந்த இணையத்தளத்தில் ட்ராஃபிக் குறைந்துவிட்டது’’ என எட் விளக்கினார்.

அட்மின் இல்லாத காரணத்தால் பேமென்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எழுந்திருக்கக்கூடும். எனவே, வாடிக்கையாளர்களும், விற்பனையாளர்களும் கொஞ்ச காலம் விலகியிருக்க நினைத்திருக்கலாம் என ஏட்ரியன் நினைத்துக்கொண்டார்.

‘`இன்னொரு காரணம்’’ என எட் தொடர்ந்தார். ‘`உலகத்தில் ஃப்ரீடம் ஹோஸ்டிங் சர்வருக்கு இணையாக நூற்றுக்கணக்கான சர்வர்கள் இருக்கின்றன. அது ஐஸ்லேண்டிலிருந்து ருமேனியா, லாட்வியா என உலகெங்கும் பரவியிருக்கிறது. நாம் காட்டன் ட்ரெயிலை ஃப்ரீடம் ஹோஸ்டிங்கிலிருந்து நீக்கினால் உடனே அவர்கள் வேறொரு சர்வரில் ஹோஸ்ட் செய்து இயங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை நாம் மூட வேண்டுமென்றால், காட்டன் ட்ரெயிலுக்கு பின்னால் இருக்கும் `மூளை’ யாரென்று கண்டுபிடிக்க வேண்டும். இப்போது இதில் நமக்கு ஒரு ப்ரேக் த்ரூ கிடைத்திருக்கிறது – நம்மிடம் காட்டன் ட்ரெயிலுக்கான சோர்ஸ் கோட் இருக்கிறது’’ என்றார்.

மும்பை

மும்பையின் புறநகர் பகுதியில் இருக்கும் ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டலில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அறிவிக்கவிருக்கும் அறிவிப்புக்காகப் பத்திரிகை யாளர்கள் குழுமியிருந்தனர். நகரத்தின் புதிய செலிபிரிட்டியாக வருண் ஆகியிருந்தான். இளைஞர்களிடையே போற்று தலுக்குரிய உருவமாக அவன் ஆகிக் கொண்டிருந்தான். ஆதித்யாவுக்கு அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

‘`லேடீஸ் அண்டு ஜென்டில்மென், இண்டிஸ் கேப்பின் பயணத்தில் இன்று ஒரு மகத்தான நாள்.இதற்குமுன்பு ஒருபோதும் நடந்திராத ஒன்றை இன்று முதல் முயற்சி செய்து பார்க்கப்போகிறோம்.

இன்றைக்கு, உலகத்திலேயே முதல் தடவையாக, சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான ஒரு கேமிங் ஆப்பை மொபைல் ஆப்பாக அறிமுகப்படுத்தவிருக் கிறோம். கம்ப்யூட்டர், டேப்லட், போன் ஆகிய மூன்றிலும் எந்தத் தடையும் இல்லாமல் விளையாடும் வசதிகொண்ட உலகத்திலேயே முதல் கேமிங் ஆப்பை அறிமுகப்படுத்துவதில் இண்டிஸ்கேப் பெருமை யடைகிறது. இந்தத் தடையில்லா ஒருங்கிணைப்புக்கு நீங்கள் செய்ய வேண்டியது, ஃபேஸ்புக்கில் லாக்-இன் செய்ய வேண்டியதுதான். இன்றைக்கு நாங்கள் ஆண்ட்ராய்டு பதிப்பை அறிமுகப்படுத்துகிறோம்’’ என்று வருண் சொல்ல, அரங்கமெங்கும் கைதட்டல்கள்.

‘`அடுத்த வாரத்துக்கு, இந்த ஆப் முழுவதும் இலவசம்!” என்று வருண் சொன்னதும், சிறு அமைதிக்குப்பின் கைதட்டல்கள் உச்சத்தைத் தொட்டது. ‘‘டவுன்ஸ்விலே மொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த `போதைக்கு’ அடிமையாவது குறித்து நீங்கள் என்றைக்கும் வருத்தப்பட மாட்டீர்கள்!” என்றான்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கேள்வி, பதிலுக்கான நேரம் ஆரம்பமாகியது. கேம் பற்றியும் அதனுடைய மேம்பாடு பற்றியும் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் ஆதித்யாவும், வருணும் பதிலளித்தார்கள். மேடையில் அவர்களோடு சந்தீப்பும் உட்கார்ந்திருந்தார். ஊடகத்திலிருந்து ஒருவர் எழுந்து, ‘‘எடியாஸின் ஹேக்கிங் சம்பவம் எப்படி மொபைல் ஆப்பின் பாதுகாப்பைப் பாதிக்கும்?’’ எனக் கேட்க, அதற்கு வருண் எழுந்து மிகவும் நம்பிக்கையுடன், ‘‘இந்த கேமை முடிந்தவரையில் ஃபூல்ஃப்ரூப்-ஆக உருவாக்கியிருக்கிறோம். யாரும் இதை ஹேக் செய்ய முடியாது. ப்எங்கள் நிறுவப்்னத்தில் ஏதேனும் அப்படி நடந்தால் நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். விசாரணையில் எடியோஸ் மேல் தவறில்லை எனத் தெரியவந்திருக்கிறது. இந்த நிகழ் விலிருந்து படிப்பினையைக் கற்றுக்கொண்டு நாங்கள் முன்னே செல்வோமே ஒழிய, நடந்ததை நினைத்துக் கொண்டிருக்க மாட்டோம்’’ என்று கூறியதைக் கேட்ட பத்திரிகையாளர்கள் திருப்தியடைந்தனர்.

கூட்டத்தில் ஒரு மூலையில் தான்யா லாப்டாப் பேக்குடன் நின்றிருந்ததை வருண் பார்த்தான். அவள் கையசைத்தாள். அவள் தாமதமாக வருவாள் என்பது அவனுக்குத் தெரியும். மேக்கப் எதுவும் இல்லாமல், விரித்துப்போட்ட கூந்தலுடன் இருந்த தான்யா பார்ப்பதற்கு அழகாக இருந்தாள்.

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, வீடு திரும்பும் வழியில் வருணும், தான்யாவும் பீச்சுக்குப் போனார்கள். கரையை நோக்கிவந்த ஆர்ப்பாட்டமான அலைகள் தான்யா தனது விரக்தியை இறக்கி வைக்க ஏற்றதாக இருந்தது. அவளுடைய அம்மாவைப் பற்றி பேசும்போது அவளுக்கு அழுகை வந்தது. வருண் அவளை அணைத்துக்கொண்டான். அவர்கள் அங்கே நீண்ட நேரம் இருந்தனர். 

(பித்தலாட்டம் தொடரும்)

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்